(Reading time: 12 - 23 minutes)

13. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை, வீட்டிலேயே திருமணம் நடக்கவிருப்பதால் முறைப்படி நர்மதாவை கோவிலிலிருந்து சீர்வரிசையோடு துஷ்யந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

வாசலில் நிற்க வைத்து, ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து அவள் கையில் விளக்கை கொடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.. நேராக வீட்டின் பூஜை அறைக்கு சென்று விளக்கை வைத்து வழிபட்டாள்... யமுனாவும் உடன் இருந்தாள்... நர்மதாவின் பெற்றோரும், சில முக்கிய உறவினர்களும் அவளுடன் வந்திருந்தனர்... கோமதி நர்மதாவின் அருகே வந்தார்...

"நீ இன்னும் துஷ்யந்தை பார்க்கல இல்ல... வாம்மா கூட்டிக்கிட்டுப் போறேன்.." என்று அழைத்துக் கொண்டுப் போனார்... கண்டிப்பாக பந்தகால் அன்றும், பெண்ணழைப்பு அன்றும் துஷ்யந்த் வீட்டில் இருக்க வேண்டுமென்று ஏற்கனவே அவனிடம் கூறியிருந்தார்... அதனால் அவனும் வீட்டில் தான் இருந்தான்...

கோமதி நர்மதாவை கூட்டிக் கொண்டு போனப் போது, யமுனாவும் உடன் சென்றாள்... வரவேற்பறையில் தான் துஷ்யந்த், செல்வா மற்றும் நர்மதாவின் பெற்றோரும், உறவினர்களும் இருந்தனர்... அங்கு சென்றவர், துஷ்யந்தை அழைத்தார்... அவனும் அருகில் வந்தான்...

"நர்மதா... இவன் தான் என்னோட பையன் துஷ்யந்த்.." என்ற போது, ஏதோ கடமைக்காக அவனை பார்த்து வைத்தாள்... அவனும் அதையே தான் செய்தான்...

"ராஜா.... இது யமுனா.. நம்ம நர்மதாவோட ப்ரண்ட்.." என்று யமுனாவையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்...

அதுவரையிலும் அவனும் யமுனாவை கவனித்திருக்கவில்லை... பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு போனான்... பின் அவளைப் பார்த்து புன்னகைத்தான்...

யமுனாவோ ஆரம்பத்திலிருந்தே அவனை கவனித்துக் கொண்டிருக்கிறாள்... நர்மதாவை பார்க்கும்போது அவனுடைய முக பாவனையை கவனித்தவளுக்கு, அதில் நர்மதாவை திருமணம் செய்ய அவனுக்கு விருப்பமா..?? இல்லையா..?? என்பதை அறிந்துக் கொள்ள முடியவில்லை... இதில் இவளை பார்த்து அவன் புன்னகைத்ததும், "இப்போ எதுக்கு என்னைப் பார்த்து சிரிக்கிறான்..??" என்று கேள்வி தோன்றினாலும், பதிலுக்கு இவளும் புன்னகைத்து வைத்தாள்.

"ங்கா... என்னோட தங்கச்சி இங்க தாம்பரத்துல அவளோட நாத்தனாரு வீட்டுக்கு வந்திருக்காலாம்... நான் போய் பார்த்துட்டு வந்துட்றேன்.." சொல்லிக் கொண்டே கையில் பையோடு வந்தார் வாணி..

"என்ன வாணிம்மா... எப்பவும் சென்னைக்கு வந்தா, அவங்க தானே உங்களை இங்க வந்து பார்த்துட்டுப் போவாங்க... இன்னிக்கு நீங்கப் போறீங்க...??"

"போக வேண்டிய கட்டாயம் கங்கா..." அழுத்தம் கொடுத்து அவர் சொன்ன வாக்கியத்தில், ஒரு நிமிடம் கங்கா அவரை புரியாமல் பார்த்தாள்..

"அது அவ உடனே ஊருக்குப் போகனுமாம்... நீங்க என்னை வந்து பார்க்கீறீங்களான்னு கேட்டா... அதான் நானே வரேன்னு சொன்னேன்.."

"நாளைக்கு துஷ்யந்தோட கல்யாணம் இல்லையா..?? நீங்க போக வேண்டாமா..?? வாணிம்மா..."

"கண்டிப்பா போகனும் கங்கா.. போகனும்.. நான் அவளை பார்த்துட்டு உடனே கிளம்பிடுவேன்... நான் வர லேட்டாகும், வெளிய கதவை பூட்டிட்டுப் போறேன்.. நீ சாப்ட்டு தூங்கு.." என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பினார்... இந்த இரவு நேரத்தில் அவசரமாக தன் தங்கையை பார்க்க வேண்டிய அவசியம் என்ன..?? கங்காவிற்கு குழப்பமாக இருந்தது.

ற்காலிக நடைமுறையில் திருமணத்திற்கு முன்னாள் மாலை ரிஷப்ஷன் வைப்பதெல்லாம் வேண்டாமென்று கோமதி ஏற்கனவே சொல்லியிருந்ததால், அப்படி எதுவும் நடைபெறவில்லை... திருமணத்திற்கு வந்திருந்த நர்மதாவின் உறவினர்களுக்கு வசதியாக தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்துக் கொடுத்தனர்... எல்லோருக்கும் பந்தி முறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

நர்மதாவிற்கும், யமுனாவிற்கும் மட்டும் அறையிலேயே சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கப்பட்டது... இருவரும் சாப்பிட்டு முடித்ததும், அந்த பாத்திரங்களை தானே எடுத்துக் கொண்டுப் போய் வைத்துவிட்டு வருவதாக கூறி, யமுனா வெளியே சென்றாள்...

சமயலறையை தேடி கையோடு கொண்டு வந்த பொருட்களை வைத்தவள், அங்கிருந்து வெளியே வரும்போது, துஷ்யந்த் எதிரே வந்தான்... மீண்டும் அவளை பார்த்து புன்னகைத்தான்... அதுமட்டுமில்லாமல்,

"சாப்ட்டாச்சா..?? இதெல்லாம் நீதான் எடுத்துக்கிட்டு வரனுமா..?? அதுக்குன்னு ஆள் இருப்பாங்களே... எதுக்கு இந்த வேலையெல்லாம் நீ செஞ்சுக்கிட்டு.." என்றுக் கேட்டான்...

"பரவாயில்ல... அதனால என்ன..?? நாங்க சாப்பிட்டது தானே.. ஒன்னும் பிரச்சனையில்லை.." என்றாள்.

"நீங்க தங்கியிருக்க ரூம் வசதியா தான இருக்கு... ஏதாச்சும் வேணும்னா, செல்வா இருப்பான்... கூப்பிட்டு சொன்னா செய்வான்.." என்று அவன் சொன்னபோது,

"இதுக்கும் செல்வா தானா..??" என்று மனதிற்குள் நினைத்தவள், "ம்ம் வேணும்னா கேட்டுக்கிறோம்.. சரி நர்மதா தனியா இருப்பா வரேன்.." என்று சொல்லிவிட்டு சென்றவளுக்கோ...

துஷ்யந்திற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் இவ்வளவு சாதாரணமாக இருக்கமாட்டானே... அதனால் அவனுக்கு நர்மதாவை மணந்துக் கொள்வதில் விருப்பம் இருக்குமென்று தான் நினைத்தாள்... நேற்று பந்தக்கால் நிகழ்ச்சிக்கு வந்த போது, துஷ்யந்தை பார்த்த நர்மதாவின் பெற்றோர்களும், இவன் அவர்களிடம் நல்ல முறையில் நடந்துக் கொண்டதாக தானே கூறினார்கள்... அதனால் இவள் மனதுக்கு கொஞ்சம் நிறைவாக தான் இருந்தது...

திரும்ப ஒருமுறை அவனை திரும்பிப் பார்த்தாள்... அவன் இன்னும் இவளைத் தான் பார்த்தப்படி நின்றிருந்தான்... இவள் திரும்பியதும் மறுபடி இவளைப் பார்த்து புன்னகைத்தான்...

"என்ன அடிக்கடி சிரிக்கிறான்... நீ, வா, போ என்று உரிமையோடு வேறு பேசுகிறான்...." என்று மனதில் ஓடினாலும், அது தவறாகவும் இவளுக்கு தெரியவில்லை... அப்போது தான் வேறொன்றும் தோன்றியது... முதல்முறை நர்மதா வீட்டில் துஷ்யந்தின் புகைப்படம் காட்டியபோதே, அவனை எங்கோ பார்த்திருப்பதாக தோன்றியது... ஆனால் யோசித்துப் பார்த்தால் ஞாபகத்திற்கு வரவில்லை...

இப்போது அவனை நேரில் பார்த்தபோதும் அதே தான் தோன்றியது... ஆனால் இப்போது கூட அவனை எங்கு பார்த்தோம் என்று ஞாபகத்திற்கு வரவில்லை... ஒருவேளை அவனுக்கு இவளைப் பற்றி தெரிந்திருக்குமோ..?? அதனால் தான் சிரிக்கிறானோ..?? என்று நினைத்தாள்... திரும்பவும் அவனை எங்கு பார்த்திருக்கிறோம் என்று யோசித்தாள்... ஆனால் ஞாபகத்திற்கு வரவே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.