ஆச்சார்யாவிடம் சென்று ரிப்போர்ட்டை கொடுத்து விட்டு குழி தோண்டும் இடத்திற்கு வர மணி பதினொன்று ஆகிவிட்டது மூவருக்கும்.. ட்ரில்லிங் செய்யவேண்டாம் என்று ஆச்சார்யா சொன்னதால் குழிக்குள் இறங்கி பத்து இருப்பது பேர் கோடாலியாலும் மண்வெட்டியாலும் குழி தோண்டிக் கொண்டிருந்தனர்..தியாவும் மயாவும் நோட்ஸ் எடுக்க சுஜனுடன் எழில் குழிக்குள் இறங்கி வர்க்கர்ஸ் வேலை செய்வதை மேற்பார்வை இடத் தொடங்கினான்..
"சுஜன் அண்ணா..என்னண்ணா இது கிட்ட தட்ட ஐநூறு அடி தாண்டிருச்சு ஆனால் ஒண்ணுமே...",என்று ஆரம்பித்த எலி நங் என்று தன் பக்கத்தில் கேட்ட ஒலியால் பேச்சை நிறுத்தி திரும்பிப் பார்த்தான்..
அதற்குள் சுஜன் அங்கிருந்தோரை நோக்கி,"ஒரு நிமிஷம் வேலை செய்வதை நிறுத்துங்க..",என்றுவிட்டு சத்தம் வந்த இடத்தை தானே லேசாக தோண்ட ஆரம்பித்தான் மெதுவாக..
தாமரையின் மொட்டுபோல் முதலில் தோன்றிய உலோகத்தாலான ஒரு வகை பொருள் தோண்டத் தோண்ட கோவில் கலசமாக உருமாறியது.. அதன் அருகே தோண்டிய பொழுது வலப்பக்கம் மூன்று இடப்பக்கம் மூன்றென மொத்தம் ஆறு கலசங்கள் தென்பட்டன..
கலசத்தை கண்டவுடன் அது ஒரு கோவிலாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு செய்தவர்கள் மேலும் தோண்ட தொடங்கினர் ஆர்வமாக.. இரவும் பகலும் நான்கு நாட்கள் கடந்த பின் தான் அவர்களால் அக்கோயிலை வெளிக்கொண்டுவர முடிந்தது..
"எழில் வாட்டர் கொண்டு வர சொல்லி இருந்தோமே ..அவங்க வந்துட்டாங்களா..??",என்று கேட்டாள் தியா..
"இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்துடுவேன்னு சொன்னாங்க தியா..நீ கோவிலுக்குள்ள இறங்கி அதுக்கான அரேஞ்மென்ட்ஸை பாரு..",என்றபடி தற்காலிகமாக கோவில் குழிக்குள் செல்வதற்காக அமைக்கப் பட்ட லிப்டை இயக்க ஆரம்பித்தான்..
தியாவும் அதன் மேல் ஏறி கீழே செல்ல ஆரம்பித்தாள் கோவிலின் விமானத்தை பார்வையிட்ட படியே..
ஒரு விமானத்தின் மேல் ஆறாவது நிலையில் இடம் பெறும் உறுப்பு கலசம்..செம்பால் செய்யப்பட்டிருந்தது.. மொத்தமிருந்த ஏழு கலசங்களும் உறுமாறாமலும் நிறமாறாமலும் கம்பீரமாக காட்சியளித்தது..
ஐந்தாம் நிலையான சிகரம் கலசங்களை தாங்கவென சதுரவடிவில் இருந்தது.. இதனை "நாகரவிமானச் சிகரம்" என குறிப்பிடுவர்.. இதன் மேல் சின்னசின்ன தாமரை பூக்களை சிலையாக வடித்திருந்தனர்..
நான்காம் பகுதியான கிரீவம் சிகரத்தை விட சற்று உள்ளடக்கி காட்சியளித்தது.. சிகரத்தை போலவே இதுவும் சதுர வடிவை கொண்டமைந்திருந்தது.. இக்கிரீவப் பகுதியில் திசைக்கு ஒரு கோட்டம் அமைதிருந்தனர்.. அதில் தெற்கே – தட்சிணாமூர்த்தி,மேற்கே – திருமால்,வடக்கே – பிரம்மன்,கிழக்கே – இந்திரன் என கிரீவக் கோட்டச் சிற்பங்கள் அமைந்திருந்தது..
மூன்றாம் நிலையான பிரஸ்தரம் பல உட்பகுதிகளைக் கொண்டு அமைந்திருந்தது..
அதில் முதன்மை பகுதி கபோதம்..குடை போல் இருந்த அந்த பகுதி கருவறைச் சுவரின் வெளிப்பகுதியில் மழைநீரானது படாமலிருப்பதற்காக கட்டப்பட்டிருந்தது.. கபோதகங்களின் மேல் அலங்காரதிற்காக இடம்பெற்றிருந்த கூடுகள் எனும் சிறு பகுதி.. யாளிவரி எனும் பகுதி கபோதகத்தை சுற்றி கூடுகளுக்கடியில் அமைந்திருந்தது.. கடைசியாக அன்னப்பறவைகளின் அணிவகுப்பை போல் சிலை வடித்திருந்த பகுதி எழுதகம்..இது கபோதகத்திரு கீழ் அமைந்திருந்தது....
இரண்டாம் நிலை கருவறையின் சுவர் பகுதி..இதனை பித்தி என்பர்.. இப்பகுதி சிலைகள்,தூண்கள்,சாளரங்கள் என பிரமாண்டமாக காட்சியளித்தது... நெருக்கமாக அமைந்திரிந்த சிலைகள் காணும்போது ஒரு பிரமிப்பு தோன்றியது தியாவிற்கு.. இப்பகுதிக்குள்ளில் தான் கருவறை அமைந்திருந்தது..
முதல் நிலையான அதிட்டானம் ஒரு அடித்தளமாகும்..இதன் மேல்தான் மீதமுள்ள ஐந்து அங்கங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்திருந்தது..
"தியா இன்னும் இந்த லிப்ட் மேல நின்னுட்டு என்ன பண்ற..",என்று சுஜன் உலுக்கிய பின் தான் சுயநினைவிற்கு வந்தாள் தியா..
"ஸ்..கோவில் விமானத்தை பார்த்துட்டே வந்தேனா அதான் கவனிக்கல.."
"பரவாயில்லை.. எழில் எங்க..??"
"அவன் வாட்டர் லாரி வரதுக்காக வைட்டிங்.. நான் போயி மண்டபத்தில் நடக்கும் வேலையை கவனிக்கறேன்", என்றபடி உள் விரைந்தாள்..
"மயா.. இன்னும் ஏன் இந்த தூணையெல்லாம் கிளீன் பண்ணாம வெச்சிருக்கறாங்க..??"
"ஸ்க்ரப்பர் யூஸ் பண்ணித் தேச்சு பார்த்தாங்க தியா.. ரொம்ப நாளா மண்ணுக்குள்ள புதைஞ்சு இருந்ததாலே சரியா போகமாட்டேங்குது.."
"இப்போ வாட்டர் லாரி வந்திடும் கிளீனிங் வேலையை ஆரம்பிச்சிடலாம்.." ,என்றவள் மயாவின் கையிலிருந்த சார்ட்டை கேள்வியுடன் நோக்கினாள்..
"இந்தா பிடி.. ",என்றபடி தன் கையில் இருந்த சார்ட்டை அவளிடம் திணித்த மயா," உன் அளவுக்கு இல்லைனாலும் நான் ஓரளவுக்கு இந்த கோவிலோட அமைப்பை பென்சில் ஸ்கெட்ச் பண்ணிருக்கேன்.. சரியான்னு பாரு.. ஆச்சார்யா சார் வந்து நம்மக் கிட்ட கேட்கறதுக்குள்ள எதாவது கரெக்ஷன்ஸ் இருந்தா மாத்திடலாம்.."