“தட்ச பிரஜாபதிக்கு வணக்கம்… நற்செய்தியோடு வந்தேன்… மகா மண்டல சபைக்கான அழைப்பினை மகாதேவர் ஏற்றுக்கொண்டார்… நிச்சயம் அவர் சபைக்கு வருவார்….”
காசியப்ப மகரிஷி பிரஜாபதியிடம் கூற, “இதற்காகவே காத்திருந்தேன்… எனில் இச்சபை அழைக்கப்பட்ட நோக்கமும் நிறைவேறிடும்… நாம் இப்பொழுதே இங்கிருந்து செல்லலாம்..” என்றார் அவர்…
“தங்களின் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை நானும் செய்துவிட்டேன் சுவாமி…” என பிரசுதி கூறியதும், வசந்த விழா ஏற்பாடுகள் குறித்து விசாரித்தார் பிரஜாபதி…
சந்திர தேவன் மிகுந்த ஈடுபாட்டுடன் அதனை கவனித்து வருவதாகவும், அது குறித்து கவலை கொள்ள தேவை இல்லை எனவும், அதுபோக, மாதங்கியின் வருகை இங்குள்ளோரை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்றும் பிரசுதி கூற,
“மாதங்கி தன் வரம்புகளை சற்றே மீறுவதாக நான் கேள்வியுற்றேன்… அதனால் அவளின் செயல்கள் கட்டுக்குள் அடங்கட்டும்…” என்றார் பிரஜாபதி…
“அப்படி எல்லாம் எதுவுமில்லை… அவளால் எந்த சங்கடமும், தொல்லையும் நேராது… தாங்கள் அது குறித்து கவலை கொள்ளாதீர்கள்…” என பிரசுதி கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்ததும் அங்கே வருகை தந்தான் இந்திர தேவன்..
அவன் முகத்தினைப் பார்த்து, என்ன நேர்ந்தது என பிரஜாபதி வினவ, விருத்தாசுரன் என்றான் அவன்…
“விருத்தாசுரனா?...”
“ஆம் அவன் கடுமையான தவம் புரிந்து வருகிறான்… தேவலோகத்தின் அனைத்து அப்சரஸ்களும் அவனது தவத்தினை கலைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன… அவன் தன் தவத்தில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்பு அவனை அழிப்பதோ, வெற்றி பெறுவதோ, சாத்தியமே இல்லை…”
“நீ பதட்டப்படாதே… நமக்கு அந்த பரந்தாமன் என்றுமே துணையாக இருக்கிறார்…” என பிரஜாபதி பெருமையுடன் கூற,
“இனி அவரோடு சேர்த்து நமக்கு மகாதேவரும் துணை இருப்பார்…” என அங்கு வந்த சந்திரதேவன் கூற,
“எவர் துணை இருப்பார், இல்லாது போவார் என்பதனைக்கூற உனக்கு உரிமை இல்லை… நீ உனக்கு கொடுக்கப்பட்ட வசந்த விழா ஏற்பாட்டினை கவனித்துக்கொள்… செல்…” என்றதும் அவன் வசந்த விழா பற்றி அவரிடம் கேட்க முனைய, அது அனைத்தும் உன் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்ட்து இனி அதனைப் பற்றி உரையாட எனக்கு நேரமில்லை என அத்தோடு அப்பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரஜாபதி…
இந்திரனிடம், “நீ எதனைப் பற்றியும் கவலை கொள்ளாதே இந்திரா… உன்னை காப்பாற்றும் பொறுப்பு எனது… இனியும் தாமதிக்காமல் பயணத்திற்கு செல்லலாம்…” என பிரஜாபதி கூறியதும், அவர்கள் அனைவரும் கிளம்ப தயாராயினர்…
பிரஜாபதியின் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துள்ளதாக சதி கூற, அகம் மலர்ந்தார் பிரஜாபதி…
“எனது தேவைகளை கவனிப்பதிலேயே நீ இருக்கிறாய் மகளே… உன்னையும் சற்று கவனி… வசந்த விழாவின் போது முழுமையான சந்தோஷங்கள் அனைத்தையும் நீ அனுபவிக்க வேண்டும்… சரிதானா?...” என மகளைப் பார்த்து அவர் கேட்க, அவளும் சரி என்றாள்…
பின் பிரசுதி பிரஜாபதிக்கும், பிருகுவிற்கு கியாத்தியும், காசியப்பருக்கு அதிதியும் ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்த,
“வசந்த விழாவும் வெற்றியடைய வேண்டும்… அதில் ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழு பொறுப்பும் உனது தான்…”
பிரஜாபதி எச்சரிக்க, “அப்படி ஏதும் நடவாது தந்தையே… நான் தங்களுக்கு உத்திரவாதம் அளிக்கிறேன்..” என ரோகிணி சட்டென கூற, சரி என்றபடி தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றார் அவர் தன் பயணத்தை துவக்கியபடி…
அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், தனது வீர்ர்களிடம் சினத்துடன் பேசிக்கொண்டிருந்தார் அவர்…
“பிரஜாபதி தட்சர், இந்திரதேவனுக்கு உதவி செய்யவே மகா மண்டல சபையை அழைத்திருக்கிறார்… தேவர்கள் எப்பொழுதும் நமக்கு எதிரிகளே… அவர்கள் நம் சக்தியை பிரயோகப்படுத்தி, நம்மிட்த்திலேயே சூழ்ச்சியினையும் நிகழ்த்தி, நம்மையே தாக்குபவர்கள்… இச்சபை நிகழ்ந்தால், நாம் தோல்வி பெறுவதும் உறுதி… அதோடு அச்சபைக்கு பிரஜாபதி மகாதேவரையும் அழைத்துள்ளார்.. இதில் எனக்கு ஒன்று தான் விளங்க மறுக்கிறது… அது யாதெனில், மகாதேவர் அனைத்தும் அறிந்தவர்… அனைத்தும் அறிந்தும் அவர் எதற்காக இவ்வழைப்பினை ஏற்றார்?... மகாதேவர் ஒருவேளை இந்திரனுக்கும், தட்சனுக்கும் சாதகமாய் மாறினால், அதன் பின் நம் அழிவு நிச்சயம்… நம்மை யாராலும் காப்பாற்ற இயலாது… அதனால் அச்சபை நிகழ்வதை தடுக்க வேண்டும்… மகாதேவரும் அவர்கள் பக்கம் சென்றால், அதன் பின் யாருடைய அவசியமும், தேவையும் நமக்கு தேவையில்லை… அனைவரையும் அழிக்கும் தைரியம் நமக்கு வேண்டும்… அசுர்ர்களின் வருங்காலம் இனி நம் கையில்… அவர்களை அழிக்க ஆயத்தமாவோமா?... அத்தைரியம் நம்மிடத்தில் உள்ளதா?...” என அவர் கேட்க அவரது வீர்ர்களும் ஆம் என்ற கோஷங்கள் எழுப்பினர் உடனேயே…