கயிலாய பர்வதத்தில், மகாதேவனை தரிசிக்க வந்த நாரத மகரிஷி,
“மகாதேவர் எங்கே ந்ந்தி?...” என வினவ,
அவர் தியானத்தில் ஆழ்ந்துவிட்டதாகவும், இப்பொழுது அங்கே செல்வது சரி அல்ல என்றும் நந்தி வாட்டமாக கூற,
“மகாதேவரின் தியானம் கலைய வேண்டியது அவசியம்… இல்லையெனில் சதி தேவி இங்கு வருவது சாத்தியமன்று…” என்றார் அவரும்…
“நாரத மகரிஷி… நான் தம்மிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்… எந்த சிக்கலிலும் நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை…”
“சிக்கலா?... நீ எதைப் பற்றி கூறுகிறாய் நந்தி?...”
“இப்பொழுது கூறினீர்களே… தேவி சதி பற்றி… அது தான்…”
“என்ன?... தேவி சதி சிக்கலா?...” என அவர் கேட்க, நந்தி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான் கவலையுடன்…
“மகாதேவர் உன்னை கோபித்தாரா?... கடிந்து கொண்டாரா?...”
“………………………”
“அவரின் கோபத்தை ஏன் நீ தவறாக எடுத்துக்கொள்கிறாய்… அதுவே அவரது உள்ளத்தினை உன்னிடத்தில் எடுத்து காட்டியிருக்கிறது… ஏனெனில் அவரின் உள்ளத்தில் தேவி சதியின் நினைவுகள் வருவதை அதுவே சொல்லிற்றே….”
நாரதர் தன் வார்த்தை ஜாலத்தை பின்ன, “நாரதரே… தாங்கள் கூறுவது எதையும் நான் கேட்கமாட்டேன்…. என்னை விட்டுவிடுங்கள்…” என்றான் நந்தி…
அவரும் புன்னகைத்துக்கொண்டே மகாதேவனை தேடி சென்றார்… ந்ந்தி பின்னாலேயே வந்து தடுக்க, அது நடந்த பாடில்லை...
‘மகாதேவா…. மகாதேவா…” என்ற அவரின் குரல் கேட்டு விழி திறந்தான் மகாதேவன்…
“நான் எவ்வளவோ சொல்லியும் நாரத மகரிஷி தான் கேட்காமல் இங்கே வந்துவிட்டார்…”
நந்தி சட்டென மகாதேவனிடம் கூற,
“மகாதேவா… இப்பொழுது அனைத்து இடங்களிலும் தாங்கள் மகாசபைக்கு வருவதாக கூறியது தான் சர்ச்சையாகி போனது… அது மட்டுமல்ல, அசுரர் குல குரு சுக்ராச்சாரியார், மகாசபையினை தேவர்கள் அசுரர்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சி என்கிறார்… அதில் தமக்கும் பங்குண்டு என்று கூறுகிறார்…” என்ற நாரதரின் வார்த்தைகளுக்கு பதில் கூறினான் அவன் அமைதியாய்…
“சுக்ராச்சாரியாரின் அழைப்பினை ஏற்று நான் பல முறை பாதாள லோகத்திற்கும் சென்று வந்துள்ளேன்… எனக்கு அனைவரும் ஒன்று தான்…”
“தங்களைப் போல் அனைவரும் இல்லை… எப்போது எவரை குறை சொல்ல வாய்ப்பு கிட்டுமென காத்திருக்கின்றனர்… அதுவே இம்முறை சுக்ராச்சாரியாருக்கும் கிட்டியிருக்கிறது… எனக்கு அவர் குறித்த பயம் இல்லை… எனது பயம் எல்லாம் பிரஜாபதி தட்சரைப் பற்றிதான்.. ஏனெனில் தட்சரின் மனதில் என்ன நினைக்கிறார் என்பது அவர் மட்டுமே அறிந்திடக்கூடிய உண்மை… அதனால், தாம் மகாசபையின் அழைப்பினை ஏற்காதீர்கள்….”
“ததீசிக்கு நான் வாக்களித்துள்ளேன் நாரத மகரிஷி…”
“வாக்கு என்றதும் தான் எனக்கு ஒன்று நினைவு வருகின்றது… தாம் ததீசிக்கு வாக்கு அளித்த்து போல், சதி தேவியும் பிரஜாபதிக்கு ஒரு வாக்கினை அளித்துள்ளார்… ஆனால் தாம் தேவிக்கு தரிசனம் அளித்த்தால் அவர் அதனை மீறும்படி ஆயிற்று… அதனை எண்ணினால் தான் என் மனம் வேதனை கொள்கிறது…”
“சதியை நினைத்து தாம் கவலை கொள்ள தேவையில்லை மகரிஷி… அவளைப் பாதுகாக்க வேண்டியது பிரஜாபதி தான்…”
“எனினும் பிரஜாபதியை பாதுகாப்பது உங்களுடையது என்று இறைவன் விஷ்ணு கூறுகிறார்… அப்படி எனில் சதி தேவியை காப்பதும் தம் பொறுப்பு அல்லவா?..”
நாரதர் கேள்விகளால் அவனை தன் வசப்படுத்த முயல, அவனோ அதில் சிக்காமல் விழிகளை மூடி தியானத்தில் ஆழ்ந்தான்…
சற்று நேரத்திற்குப் பின், நந்தி கவலையுடன் மகாதேவனின் முன்னே நிற்க,
“உனது கண்களில் எதற்காக நீர் வழிகின்றது நந்தி?...” அமைதியாக கேட்டான் அவன்..
“பிரபு… இது பிராயசித்தக்கண்ணீர்… தங்களின் மனதில் சஞ்சலத்தை விதைப்பது போல் கேள்வி எழுப்பி தங்களை நான் சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டேன்… என்னை மன்னித்துவிடுங்கள் பிரபு…”
“நீ வினா தொடுத்தது சங்கடமல்ல… அந்த வினா எத்தகையது என்பதே சங்கடம்… நம்மை பலவீனமாக்கும் வினாவும் உண்டு… கவலைகளிலிருந்து நம்மை மீட்கும் வினாவும் உண்டு… உன் வினா எதுவாக இருப்பினும் நீ எனக்கு பிரியமானவன் தான்…”
“எனக்கு தாம் கூறும் கருத்துக்கள் யாவும் இதுவரை எட்டவில்லை பிரபு… எனக்கு ஒன்றே ஒன்று தான் வேண்டும்… காலம் பாராது தங்களுக்கு நான் சேவை செய்திட வேண்டும்… தேவி சதி இங்கே வரும் வரை, உங்களுக்கு தேவையான அனைத்தையும் நானே கவனித்திட வேண்டும்…” என்ற நந்தி, தான் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தினை உணர்ந்து திகைத்து நிற்க,
“உனது அளவுகடந்த இந்த பிரியம் என்னை பலமுறை யோசனையில் ஆழ்த்துகிறது… என்றேனும் ஒருநாள் ஏதேனும் ஒரு காரணத்தினால் நீ என்னை பிரியநேரிட்டால் அன்று உனது இந்த அதீத அன்பு உனக்கு சங்கடமாகும் நந்தி…” என்றான் மகாதேவனும் அமைதியாக…
“எனக்கு புரிந்து விட்டது… தமது மனதிற்கு நான் வேதனை அளித்துள்ளதால், என்னை தாம் தண்டிக்க நினைக்கிறீர்கள்… அதற்கான என்னை இங்கிருந்து அனுப்ப எண்ணுகிறீர்கள்… எனக்கு உண்மை புரிந்து விட்டது…”
நந்தி அழுதுகொண்டே அங்கிருந்து செல்ல, அவனோ அமைதியாக செல்பவனையேப் பார்த்துக்கொண்டிருந்தான்…