(Reading time: 12 - 23 minutes)

நான் என்ன உங்க சொத்தையா கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி முறைக்கிறீங்க? என்றாள்.

இன்னிக்கு கொஞ்சம் ஓவரா தான் பேசுறா என்றெண்ணியவன் “உன் வேலையைப் பார்த்துட்டுப் போ” என்றான் சிடுசிடுப்பாக

“பின்ன ஒரு நாள் ஐயோ அவ கேட்டாளே நாம கொடுக்கலையேன்னு வருத்தப் படக் கூடாதேன்னு பார்த்தா ரொம்பத்தான்………..” சீண்டுவதை விடவில்லை அவள்.

என்ன பின்ன ஒரு நாள்? தான் அவனை சீண்டி கோபத்தை தூண்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணராமல் பேசாமல் ஒதுங்கிப் போகின்றவனை பேச வைக்கிறோம் என்பதை சாதனையாக எண்ணிக் கொண்டு வாயை விட்டாள்.

இல்ல நாளைக்கு எங்க வீட்டுக்கு போயிடுவேன்? (அப்ப இது உன் வீடு இல்லியா என்று முறைத்தவனைக் கண்டுக் கொள்ளாமல்) அதுக்கப்புறம் மறுபடி ஏதாவது பிரச்சினை வந்தா? ஐயோ பாவம் ஒரு முத்தம் தானேக் கேட்டா கொடுத்திருக்கலாமேன்னு நீங்க வருத்தப் பட கூடாதில்ல…… அத தான் சொன்னேன் என முடிக்கும் முன் அவன் கோபம் எல்லை மீறியது.

இங்க பாரு அனி….. அப்படி ஏதாவது ஒண்ணு நடந்திச்சு……….என்னை ஏமாத்தலான்னு உங்க வீட்ல யாராவது பார்த்தாங்க…….. அப்புறம் கொலை தான் விழும் கர்ஜித்துச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு முத்தம் தான கேட்டேன்… கொலைக் குத்தமா பண்ணிட்டேன்? என்ற பொருமலும் “நாம இன்னிக்கு ரொம்ப அதிகமா பேசிட்டோமோ? என்று மிக தாமதமாக ஞானோதயமும் எழுந்தது.

அடுத்த நாள் நிச்சயதார்த்தம் என்று ஃபேக்டரிக்கு லீவு கொடுக்க முடியாததால் பாதி நாள் வேலை வரை ஓரளவு சமாளித்து விட்டு அரை நாள் தன்னிடம் வேலைப் பார்ப்போருக்கு விடுப்புக் கொடுத்து தானும் வீடு திரும்பினான். 

சமீபத்தில் ரூபன் ஃபேக்டரியில் அட்மினில் வேலைக்குச் சேர்ந்திருந்த திவ்யாவும் அவனோடு சேர்ந்தே பயணித்து வீடு வந்திருந்தாள். அவள் அனிக்காவைப் பார்க்க வருவதாகச் சொன்னாலும், சில நாட்களாக ஜீவனை ஃபேக்டரியில் அடிக்கடி பார்க்க முடியாதது தான் காரணம் என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த ஒன்று. இல்லையென்றால் வீட்டிற்கு வந்து தான் அனிக்காவை சந்திக்க வேண்டுமா? மாலை ஹாலிற்கு வந்து அனிக்காவை சந்திப்பது முடியாத காரணமா என்ன?

அனி இங்க தான் இருப்பா என்றவனாக தன் அறைக்குச் சென்று வாசலில் தாமதித்தவன், கதவு திறந்து விரிந்தே கிடக்க, பக்கத்து அறையில் அனிக்காவின் சத்தம் கேட்கவும் பக்கத்து அறைக்குச் சென்றான்.

அங்கு அனிக்காவும் ஜீவனும் மிகமும்முரமாக ஏதோ பேசிக் கொண்டிருப்பது போல இருந்தது. அவ்வப்போது ஜீவன் முகத்தில் வந்த கோபம் பார்க்கையில் அனிக்காவை எதற்காகவோ கண்டிக்கிறானோ? இன்று தன் வீட்டுக்கு அவள் திரும்பச் செல்லவிருப்பதால் அறிவுரை கூறுகிறான் போலும், அவளது தற்கொலை முடிவில் அவனும் அதிகமாய் அரண்டுப் போயிருந்தானல்லவா?

ஜீவனின் கையைப் பற்றியவளாக அவன் தோளில் தன்னிச்சையாய் சாய்ந்திருந்துக் கொண்டு அவன் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா தன்னருகில் நின்ற ரூபனின் முகபாவனைகளை படிக்க முயன்றாள். அதில் சற்றும் கோபமோ, வருத்தமோ, பொறாமையோ, எரிச்சலோ இல்லை. ஏதோ சின்னப் பிள்ளைகள் இருவர் உரையாடலைப் பார்க்கும் சுவாரஸ்யம் தான் இருந்தது.

அனிக்காவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவன் மனத்திலோ முகத்திலோ சற்றும் ஜீவனுடனான அவளுடைய நட்பைக் குறித்த சஞ்சலங்கள் இல்லாதிருக்க தான் அனிக்காவின் தோழியாக இருந்துக் கொண்டும் அவர்கள் நட்பைக் கொச்சையாய் பேசியது நினைவில் நெருடி சங்கடத்தைக் கொடுத்தது.

ஜீவன் ஏதேச்சையாக வாசல் புறம் பார்க்க இனி அவன் பார்த்துக் கொள்வான் என்கிற பாவனையில் அதுவரை அவர்களைப் பாராதது போல ரூபன் அங்கிருந்து சட்டென்று நகர்ந்தான்.

"வா திவ்யா" என வரவேற்றவன். நான் உன்னை இன்னிக்கு ஒரு செலிபிரிட்டியை இன்ட்ரொட்யூஸ் செய்யப் போறேன். என்று அவளை அறையிலிருந்த நாற்காலியில் அமர்த்தினான்.

ப்ரீதா அதற்குள்ளாக திவ்யாவிற்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்து சென்றாள்.

"யாரந்த செலிபிரிட்டி? என்றுக் கேட்ட திவ்யாவுக்கு அனிக்காவைக் காட்டி , “ இன்னிக்கு நடக்க போற பங்க்ஷனோட ஹீரோயின்.... இதோ இவங்க தான்: என்று நாடக பாணியில் இடை வரைக் குனிந்து வணங்கி பாவனைக் காட்டியவன் அனிக்காவிடமிருந்து அடியைப் பெற்றுக் கொண்டு இதெல்லாம் மிகச் சாதாரணமான ஒன்று என்பது போலக் காட்டிக் கொண்டான்.

அவர்கள் தொடர்ந்து பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க,

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா திவ்யா? இவ எனக்கு 6 மந்த்ஸ் சின்னவ நான் என்னை அத்தான்னு மரியாதையா கூப்பிடுன்னு எவ்வளவு நாள் சொல்லியிருப்பேன் தெரியுமா? எனச் சொல்ல அனிக்கா அவர்களது சிறு வயது நியாபகத்தில் கலகலத்துச் சிரித்தாள்.

ஆனா இப்போ எனக்கு ஒரு பெரிய கொடுமை நடந்திடுச்சி? பொய்யாய் அழுகைக் கோலம் காட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.