(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 12 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

றுநாள் காலையில் ஒன்பது மணி அளவில் பாரதி சென்று அந்தப் பெண்மணியின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.

“வணக்கம்மா நான் பாரதி.... நேத்து உங்கக்கூட பேசினேனே.....’

“ஓ வாங்க வாங்க...... மதி சார் உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்காரு.... என்ன சாப்பிடறீங்க....”

“ஒண்ணும் வேணாம்மா.... உங்க நிஜப்பேரே தேவிகாராணியா.... இல்லை சினிமாக்காக வச்சிக்கிட்ட பேரா.... உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க....”

“என்னோட நிஜப்பேரு ராணிங்க.... சினிமாக்காக தேவிகாராணின்னு மாத்திக்கிட்டேன்.... நிறைய பேர் மாதிரி ஏகப்பட்ட கனவுகளோடதான் நானும் இந்த வட்டத்துக்குள்ள வந்தேன்.... அதுவும் முறையா ஒரு நாடகக் குழுல முழு பயிற்சி பெற்றுட்டுதான் இங்க வாய்ப்பே தேட ஆரம்பிச்சேன்...”

“உங்க அம்மா, அப்பா எங்க.... கூடப் பிறந்தவங்க யாரானும் இருக்காங்களா?”

“எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே இல்லை....  நான் ஆறாவது படிக்கும்போது ஒரு விபத்துல இறந்துட்டாங்க.... தூரத்து சொந்தக்காரங்க வீட்டுல இருந்துதான் படிச்சேன்.... என் பேருல என் அம்மா, அப்பா கொஞ்சம் பணம் போட்டு வச்சிருந்தாங்க... அதனால அவங்களும் மூஞ்சி சுளிக்காம என்னைப் பார்த்துக்கிட்டாங்க.... பத்தாவது படிச்சுட்டு இருந்த போதுதான் எங்க ஊருக்கு அந்த நாடகக் குழு வந்தாங்க.... எனக்கு அவங்க போட்ட வீதி நாடகங்கள் அவ்ளோ பிடிச்சுது.... பத்தாவது பரீட்சை முடிச்ச உடனேயே போய் அவங்க நாடகக் குழுல சேர்ந்துட்டேன்....”

“ஓ நாடகத்துல இருந்து சினிமாக்கு எப்படி வந்தீங்க.... நரேஷ் அறிமுகம் எப்படி கிடைச்சுது...”

“என்னோட மாமா ஒருத்தர் பாலு மகேந்திரா யூனிட்ல வேலை பார்த்துட்டு இருந்தாரு.... அவர் மூலமா சில வாய்ப்புகள் வந்துச்சு.... கூட்டத்துல நின்னு ஒண்ணு, ரெண்டு வசனம் பேசறா மாதிரி.... அப்பறம் ஹீரோயின் தோழி, ஹீரோவோட தங்கைன்னு  கொஞ்சம் பெரிய ரோல் பண்ண ஆரம்பிச்சேன்.... அப்போதான் இந்த நரேஷோட பழக்கம் ஏற்பட்டுது.... அப்போலாம் அந்தாள் பெரிய ஹீரோலாம் இல்லை.... என்னை மாதிரி சின்ன சின்ன ரோல்லதான் நடிச்சுட்டு இருந்தான்....  அவனுக்கும் யாரும் இல்லை, எனக்கும் யாரும் இல்லை... சரி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழலாம் அப்படின்னு நினைச்சோம்... அவன்தான் கல்யாணத்தை இப்போதைக்கு வெளிய சொல்ல வேணாம்.... கல்யாணம் ஆனது தெரிஞ்சா பட வாய்ப்பு கிடைக்கறது கஷ்டம்ன்னு சொன்னான்.... எங்கத் தொழிலைப் பத்தி தெரிஞ்சதால நானும் ஒத்துக்கிட்டேன்.... ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கற கோவில்ல  நாங்க ரெண்டு பேர் மட்டும் போய் மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.... தாலி கட்டிக்கிட்டா வெளிய தெரியும்ன்னு மோதிரம் மாத்திக்கிட்டோம்...”

“என்னது உங்களுக்கும் நரேஷ்க்கும் கல்யாணம் ஆகிடுச்சா..... இது எப்படி வெளி உலகத்துக்கு தெரியாம இருந்து இருக்கு.... நீங்க சொல்றத வச்சுப்பார்த்தா ஒரு நாலைந்து வருஷம் சேர்ந்து வாழ்ந்திருப்பீங்க போலையே”

“நரேஷ் எப்பவுமே ஆபீஸ், வீடு ரெண்டும் வேற வேற இடத்துலதான் வச்சிருப்பான்... இத்தனை பெரிய நடிகன் ஆனப்பிறகும் இன்னைக்கு வரை சினிமா ஆளுங்க யாரும் பட சம்மந்தமா அவன் வீட்டுக்குப் போனதில்லை... இன்னும் சொன்னப்போனா அவன் வீட்டுக்குப் போன சினிமா ஆளுங்களை விரல் விட்டு எண்ணிடலாம்... அப்போவும் கோடம்பாக்கத்துல ஒரு மான்ஷன்ல ரூம் எடுத்து அங்கதான் அவனோட பட சம்மந்தமான ஆளுங்களை சந்திக்கறதோ, இல்லை வேலைகளை செய்யறதோ பண்ணுவான்.... காலைல கிளம்பிப்போனா ராத்திரிதான் வருவான்... “

“புரியுது... மேல சொல்லுங்க....”

“முதல்ல ஒரு ரெண்டு வருஷம் சந்தோஷமாத்தான் இருந்தோம்.... அவனுக்கு கொஞ்ச கொஞ்சமா பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது...   சினிமால  பெண்களுக்கு பாதுக்காப்பு அப்படிங்கறது ரொம்பக்கம்மி..... ஒழுக்கமான டைரக்டர் கிடைச்சா தப்பிச்சீங்க... இல்லை கஷ்டம்தான்.... நான் சின்ன சின்ன வேஷத்துல நடிச்சுட்டு இருந்தவரை பெருசா தொந்தரவு எதுவும் வரலை... கொஞ்சம் பெரிய ரோல் நடிக்க ஆரம்பிச்ச பிறகு தொந்தரவுகள் ஆரம்பம் ஆச்சு.... எனக்கு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனேனா உடனே அடுத்த படத்துல உன்னைய ஹீரோயினா உக்கார்த்தி வைக்கறேன்னு பேச ஆரம்பிச்சாங்க.... என்னால முடியாதுன்னு சொல்லிட்டு வந்துடுவேன்... இதுக்கு மேல முடியாதுங்கற ஸ்டேஜ்ல இந்தத் துறைக்கே முழுக்கு போட்டுடலாம்ன்னு முடிவு பண்ணி நரேஷ்க்கிட்ட சொன்னேன்.... அவனுக்கும் அப்போ நிறைய வாய்ப்புகள் வந்துட்டு இருந்ததால சரின்னு சொன்னான்....  இப்படி போயிட்டு இருக்கும்போதுதான் புதுசா ஒரு டைரக்டர் நரேஷை ஹீரோவா போட்டு படம் எடுக்கறேன்னு வந்தாரு.... அதுக்கு finance பண்ணினது ஆந்த்ரால இருந்து வந்த producer....”

“அவரோட இந்நாளைய மனைவிக்கூட தெலுங்கு பொண்ணுதான் இல்லை...”

“அந்தப் producer பொண்ணுதான் அது....  அந்தப் படத்துக்கு பூஜை போடும்போதே நரேஷைப் பார்த்து அந்தப் பொண்ணுக்கு பிடிச்சிருக்கு.... அதை அவங்க அப்பாக்கிட்ட சொல்லி இருக்கு போல... அவரும் கொஞ்ச நாள் பார்க்கலாம்... எந்த வித கெட்ட பழக்கமும் இல்லைன்னா யோசிக்கலாம்ன்னு சொல்லி இருக்காரு... இது எப்படியோ அவனுக்கு தெரிஞ்சு போச்சு....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.