(Reading time: 7 - 13 minutes)

52. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ஞ்சள் இள நிறக்கதிரொளி அறையெங்கும் பரவி புது தோற்றத்தைக் கொடுக்க, காற்றும் அதில் கிறங்கி மெல்ல தன் வேகத்தை குறைத்து அறைக்குள் எட்டிப்பார்க்க, குழந்தை போல் உறங்கிக்கொண்டிருந்த சதியின் முகத்தைக் கண்டு சில்லிட்டு போனது பூங்காற்றும்…

அவளைத் தீண்டும் எண்ணம் கொண்டு அவளை நோக்கி அது பயணிக்க, அதற்குள் விழிப்பு ஏற்பட்டு போர்வையை அவள் உயர்த்த, போர்வையில் மோதிய காற்று தோல்வியினைத் தழுவ, கதிரவனொளியோ புன்னகை சிந்திய வண்ணம், அவளது பார்வையில் பட்டது…

“எவ்வளவு அழகான காலைப்பொழுது இது….. வார்த்தையே இல்ல வர்ணிக்க…..”

மனம் உருகி அவள் தன்னை மறந்து கூறிக்கொண்டிருக்க, அவளது கைப்பேசி சிணுங்கியது…

“ஹேய்…. என்னடி இன்னுமா தூங்குற?... பார்க் வரலையா நீ?...”

தைஜூ அவளிடம் காட்டமாக கேட்க,

“இதோ கிளம்பிட்டேன்டி…..” என்றாள் சதி புன்னகையுடன்…

“எது இப்போ தான் கிளம்புறீயா?... அடிப்பாவி… மணி எத்தனைன்னு தெரியுமா?...”

“நல்லா தெரியுமே… அவர் இனி தான் வீட்டுல இருந்து கிளம்புவார்… அதனால அவர் வர்றதுக்குள்ள நாம அங்க போயிடலாம்…”

“எது?... இனி தான் கிளம்புவாரா?... அதெப்படி உனக்கு தெரியும்?...”

தைஜூ சந்தேகத்துடன் அவளிடம் கேட்க,

“அது எப்படியோ தெரியும்… விடேன்…”

“அதெல்லாம் முடியாது சொல்லு….”

“ஜோசியம் பார்த்தேன்… அந்த கிளி சொல்லுச்சு…”

“ஓ…” என தன் உதடு குவித்த தைஜூ, சட்டென, “அந்த கிளி உன் அண்ணன் தான?....” எனக் கேட்க,

மறுமுனையில் சதி முகத்திலோ ஆச்சரியம் பொங்கியது…

“ஹே… தைஜூ… உனக்கெப்படி இது தெரியும்?...”

“அந்த கிளி எங்கிட்டயும் சொல்லுச்சே…..” என்றாள் தைஜூ ராகத்துடன்...

அதைக் கேட்டு, சதி சிரிக்க ஆரம்பிக்க, தைஜூவும் சிரித்தாள் புன்னகையுடன்…

பின்னர் வேகமாக கிளம்பி, கீழே வந்த சதியின் முன் வந்து நின்றார் தட்சேஷ்வர்…

அவரைப் பார்த்ததும் அவளது கால்கள் சட்டென நின்றுவிட, எதிரே நிற்கும் தந்தையை புரியாமல் பார்த்தாள் சதி…

“சதி……”

அவர் மென்மையாக அழைக்க, “அப்பா………..” என்றாள் அவள் உடனேயே…

“அவசரமா கிளம்பிட்டிருக்கிறாயாம்மா?...”

அவரின் கேள்வி அவளுக்கு புதிதாக இருக்க, “ஆம்…” என தலையசைத்தாள் அவள்…

“காலேஜ் லீவ் ஆரம்பிச்சிட்டுல்லம்மா இரண்டு நாளுக்கு முன்னாடியே...”

“ஆ….மா….ப்….பா…..”

“அப்போ இனி படிக்க பார்க் போக வேண்டியது இல்லதானம்மா?....”

அவர் பட்டென்று தேங்காயை போட்டு உடைப்பது போல் கேட்டுவிட, பட்டென நிமிர்ந்தாள் சதி…

“லீவ் தானம்மா… போய் தூங்கு… வெளியே எங்கயும் போகணும்னா சொல்லும்மா… அப்பாக்கும் உங்கூட நேரம் செலவழிக்கணும்னு ஆசையா இருக்கு…”

தனது பேச்சினை அவள் மறுக்க முடியாத அளவுக்கு அவர் கூற, சதியோ என்ன கூற என்று தெரியாது நின்றாள் அமைதியாக எதுவும் பேசாது…

தந்தை தனது காதலுக்கு எதிர்ப்பு காட்ட துவங்கிவிட்டார் என அவள் மனம் அறிந்த வேளையே, ஜெய்யையும் தன்னையும் பிரிக்கும் முயற்சிக்கான அடித்தளம் இது என்றும் அவள் மனது எண்ண சற்றும் தயங்கிடவில்லை…

“தைஜூ எனக்காக வெயிட் பண்ணுவாப்பா…”

அவள் குரலில் சுரத்தே இல்லாது கூற,

“ஒன்னும் பிரச்சினை இல்லம்மா… போன் போட்டு சொல்லிடு வரமாட்டேன்னு….”

அவர் தெளிவாய் எடுத்துக்கூற, சதிக்கு தகப்பன் ஆடும் ஆட்டம் தெளிவாய் புரிந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போல…

அவர் மெல்ல நகர, அவளோ அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்…

“சதி என்னாச்சும்மா?...”

அவர் சட்டென மகளின் அருகே வர,

அவள் பட்டென இரண்டடி பின்னே நகர்ந்தாள்…

அவரின் புருவங்கள் உயர்ந்து மகளைப் பார்த்திட,

“என் அப்பாக்கு எதையும் நேரடியா செஞ்சு தான் பழக்கம்… அவர் பேச்சும் அப்படித்தான்… எனக்கு என் அப்பாகிட்ட பிடிச்ச குணமும் அதுதான்… ஆனா அது இன்னைக்கு நேர்மாறா….”

அவள் வார்த்தையின்றி தவிக்க, அவருக்கோ தொண்டை அடைத்தது….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.