“அப்புறம் ப்ரசன்…” என பேச ஆரம்பித்த பரந்தாமன், அவன் எதுவும் சொல்லாமல் சந்தாவினையே பார்ப்பது புரிந்து, “ப்ரசன்…..” என அழுத்தி உச்சரிக்க,
சட்டென தன்னுணர்வு பெற்றவன், “சாரி சார்….” என முகமெங்கும் சிரிப்பாக அவரிடத்தில் கூற,
“உன் முகத்துல நான் இப்போதான் சிரிப்பையே பார்க்குறேன் ப்ரசன்… ஆனா இந்த சிரிப்பை சந்தா முகத்திலும் நான் சீக்கிரமே பார்க்கணும் ப்ரசன்…” என அவரும் பரிதவிப்புடன் கூற,
“நிச்சயமா சார்… அதுக்கு நான் பொறுப்பு….” என்றான் அவன் உறுதியுடன்…
அவனின் உறுதியான வார்த்தை அவருக்கு நம்பிக்கை தர, அவன் தோள்களில் தட்டிக்கொடுத்துவிட்டு அகன்றார் அவர் லேசான புன்னகையுடன்…
பின்னர் தனக்கு வந்த வாழ்த்துக்களை எல்லாம் வாங்கிக்கொண்டவன், அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், அவன் கண்கள் என்னவோ சந்தாவிடம் தான் இருந்தது…
எத்தனை நாட்கள் ஆயிற்று அவளைப் பார்த்து… ஏக்கமும் காதலும் வருத்தமும் பிரிவும் அவனை வாட்டி வதைத்திட்ட நாட்கள் அனைத்தும் இந்த ஓர் நாள் ஒற்றை சந்திப்பில் சற்றே ஓரம் சென்றது போல் உணர்ந்தான் அவன்…
ரித்தியும் ஸ்வேதாவும் ஸ்வீட்டினை அனுபவித்து சாப்பிட்டு முடித்து கையினை கழுவிய வேளை, சந்தாவும் சாப்பிட்டு முடித்திருந்தாள்…
அப்போது, “இந்தாங்கம்மா… இதை எடுத்துக்கோங்க…” என சிப்ஸ் மற்றும் கேக்கை கொண்டு வந்து கொடுத்தான் அதே வேலையாள்…
“என்னப்பா… இப்பதான ஸ்வீட் கொண்டு கொடுத்த… அதுக்குள்ள மறுபடியும் இன்னொன்னை கொண்டு வந்து கொடுக்குற?...”
ஸ்வேதா கேள்வி கேட்டுக்கொண்டே, மூன்று ப்ளேட்டையும் அவனிடமிருந்து வாங்கி தங்களின் முன் வைக்க,
“ஆமாம்மா… எல்லாத்துக்கும் காரணம் சார் தான்…” என்றான் அவனும் சிரித்துக்கொண்டே…
“பரவாயில்லை… பரந்தாமன் சார் ஸ்வீட் எல்லாம் கொடுத்து ஜமாய்ச்சது மட்டும் இல்லாம, இப்போ தனியா கேக், காரம் வேற…. ஹ்ம்…. அசத்துறாரே….” என கேக்கை வாயில் வைத்துக்கொண்டே ரித்தி கேட்க,
“இல்லம்மா… இப்போ கொடுக்குறது தான் பரந்தாமன் சார் கொடுக்க சொன்னது….” என்ற அவனது பதிலில்,
“அப்போ, நீ முதல்ல கொடுத்த ஸ்வீட் யாரு கொடுக்க சொன்னது?....” என ஸ்வேதா பட்டென கேட்க,
“நம்ம புது மேனேஜர் சார் தான்…” என அவன் சொல்லிவிட்டு நகர, ரித்தியின் வாயிலிருந்த கேக், சற்றே நழுவி கீழே விழுந்தது…
அதிர்ச்சியுடன் ரித்தியும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ள, சந்தோவோ கோபமாக ரித்தியினைப் பார்த்தாள்…
“இதுக்குத்தான் என்னை அவசரம் அவசரமா சாப்பிட சொன்னீயா….” என சந்தாவின் பார்வை சொல்லாமல் சொல்ல,
ரித்தியோ தன் வாய்க்குள் இருந்த கேக்கை விழுங்க முடியாது விழுங்கிவிட்டு சந்தாவினை சமாதானப் படுத்த முயல, அதற்குள் வேகமாக அங்கிருந்து எழுந்து கொண்டாள் சந்தா….
“ஹேய்.. நில்லுடி…” என ரித்தி சந்தாவின் பின்னே செல்ல, அவளோ வேகமாக நடந்து சென்று ப்ரசனின் முன் வந்து நின்றாள்…
யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவன், அவள் எழுந்து இங்கே வருவது புரிந்து அவளையேப் பார்த்துக்கொண்டிருக்க, அவனிடம் பேசிக்கொண்டிருந்தவரோ, அவனிடம் புன்னகைத்துவிட்டு அகன்றுவிட, அவள் ப்ரசனின் முன்னே வந்து நின்றாள்…
அவள் அழகான முகத்தில் இருந்த கோபம், அவனுக்கு பூவின் மீதுள்ள பனித்துளியை நினைவுபடுத்திட, அவன் அவளை ரசிக்க ஆரம்பித்தான்…
அவனது பார்வை அவள் முகத்தில் இருப்பதை கவனித்தவள்,
“இதோட நிறுத்திக்கிட்டீங்கன்னா நல்லது….” என்றாள் கைகளை உயர்த்தி…
“ஏன் நான் என்ன பண்ணினேன்?...” என அவன் இலகுவாக மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கேட்க, அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது அந்நேரம்…
பதிலுக்கு ஆங்காரத்துடன் முறைத்துவிட்டு அவள் சென்றிட,
அவளின் பின்னேயே வந்த ரித்தி ப்ரசனிடம் என்னவென்று வினவினாள்…
அவனோ அவளிடம் எதிர்கேள்வி கேட்டான் பட்டென…
“என்ன ரித்தி?... ஏன் கோபமாக இருக்குறா?...”
“பின்ன நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொஞ்சுவாளா அவ?...”
“ஹே… நான் என்ன செஞ்சேன்?...”
அவன் யாதும் அறியாதவன் போல் கேட்டிட,
“நீ எதுவுமே செய்யலை…….??????????????...............” என்றாள் ரித்தி கேலியான பார்வையுடன்…