(Reading time: 3 - 5 minutes)

என் வரையில் விடுதலை - அனு.ஆர்

அடிமையாய் இருந்தேன்

விடுதலையும் பெற்றேன்.

என் வரையில் விடுதலை என்பதென்ன?

என் அனுபவம் பகர்கின்றேன்

கேளீர்! கேளிர்

 

நான் நானாயிருப்பது விடுதலை.

நல்லவளாக முயல்வதும் விடுதலை.

பிறர் உரிமையில் யான் இடர் செய்யாமல் இருப்பதில்

மறைந்திருக்கிறது என் விடுதலை.

 

தீமையும் நன்மையும் பிறர் தர வாரா

என் வாழ்க்கை என் கையில்

என்ற புரிதலிலிருக்கிறது

பொறுப்புள்ள விடுதலை.

 

காட்டாறாய் கறை புரண்டு

சுடும் துன்ப நினைவுகளை

சொல்கேளாமல் வாரி இறைத்து

வலிக்க வலிக்க உயிரறுக்காமல்,

அடையகூடாதவைகளின் மேல் ஆசைகொண்டு

அலைபாயாமல்,

அடிமையாய் எனக்கு அடங்கி வரும்

என் சிந்தனையில் இருக்கின்றது

நன்விடுதலை.

 

தூற்றுவார் தூற்றட்டும்

போற்றுவார் போற்றட்டும்

பரமனின் பார்வையில்

நான் என்னதாய் இருக்கிறேன்

என்ற நினைவிலிருக்கிறது

நியாயமான விடுதலை.

 

பொய் சொல்லாமல்

புறம் பேசாமல்

பொறாமை கொள்ளாமல்

சினம் கொண்டாலும்

தீங்கு செய்யாமல்

இன்னா செய்தாரை

இன்றே மன்னித்து

அவருக்காகவும்

ஆண்டவரிடம்

நன் யாசகம்

செய்வதில் இருக்கின்றது

தினசரி விடுதலை.

 

நலம் நடக்கும் என

நம்பி இருப்பதில்

இருக்கின்றது

அரை விடுதலை.

 

நன்மை மாத்திரம்

தான் என் தெய்வம்

எனக்கு தரும்

ஆதலால்

வந்திருக்கும் சூழலில்

என்ன நன்மை

எனக்கிருக்கிறது

என கண்டடைவதில்

இருக்கின்றது

முழு விடுதலை.

 

துன்ப நோய் படுக்கை

தொட்டது எனையோ

அல்லது

என் இதயத்திற்கு

இணையேரையோ

நிச்சயம் உண்டு முடிவு

என்ற நம்பிக்கையிலிருக்கிறது

சுக விடுதலை.

 

எனக்கோ

என்னை கொண்டவனுக்கோ

என் இதயம் மனு உருவாய்

மாறி வந்த என் மகவிற்கோ

அன்னை தந்தையருக்கோ

தம்பி தமக்கை குடும்பத்தாருக்கோ

மற்றும் உற்றம் சுற்றம்

அறிந்தோர் தெரிந்தோர்

அன்பு கொண்ட அனைவருக்கோ

தீங்கு நேராது

என்ற நினைவிலிருக்கிறது

ஒரு விடுதலை.

 

துன்பம் நேர்ந்தாலும்

அது மண்ணாய் மாறவிருக்கும்

மண்ணுடலுக்குத்தான்

தீண்டாது சோகம்

உள் உறையும் உயிரைத்தான்.

நிரந்தர சமாதானம் எனக்குண்டு

கண்டுவிட்டேன் கடந்து வந்த பாதைகளில் நானிங்கு

என்ற அனுபவத்திலிருக்கின்றது

அனுவின் விடுதலை.

 

மரணமே நேர்ந்தாலும்

மறைய போவது நானல்ல

அழியப்போவது வெறும்

அழுக்கு தசை தொகுப்பு

நல்ல போராட்டத்தை போராடினேன்

காக்க வேண்டியதை

காத்துக்கொண்டேன்

கண்ணின் மணியாய்

என்னை காத்துவரும்

கர்த்தரைத்தான் கரம் பிடிக்க

கடந்து போகின்றேன்

இல்லை சோகம்

இனி என்றும் சுகவாசம்

என்ற உண்மையில் இருக்கின்றது

என் உள்ளான விடுதலை.

 

பயம்

அடிமைத்தனம்.

மரண பயமற்றவன்

விடுதலை பெற்றவன்

சுதந்திரவாளி.

 

விடுதலை வாரம் என்ற அறிவிப்பை சில்சீயில் பார்த்ததும், என்னை பொறுத்தவரை விடுதலை என்பது என்ன என்ற சுய ஆராய்ச்சியின் விளைவு இக்கவிதை. முழுக்க முழுக்க சுய அனுபவம். எக்கருத்தையும் அறிவிக்க என எழவில்லை இவ் வரிகள். நன்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.