(Reading time: 2 - 3 minutes)

கிறிஃஸ்து ஜெயந்தி - அனு.ஆர்

அணுவுமில்லா துகளுமில்லா

ஒன்றுமில்லா வெறுமையினின்றி

ஓறாயிரம் ஒளிமீன்கள் உடன் தோன்ற

ஆழி சூழ் அழகுலகை

ஆக்கம் செய்து அந்தரத்தில்

ஆட வைத்தாய்.

 

பணிவிடைக்கு உனக்குண்டு

பலகோடி வானோர்

பிள்ளையுறவு பேருறவு

வேண்டுமென செய்திட்டாய்

மானுடம் எனும் மகவை.

 

ஆண் பெண் அனைவரையும்

ஆண்டவனே உன் நற் சாயலில்

அற்புதமாய் ஆக்கி வைத்து

ஆதி மனிதன் ஆதாம்

அவன் மனைவி ஏவாள்

அவர்களுக்குள் அடக்கி வைத்தாய்

அனைவரையும் விதையாய்

ஏற்ற நேரம் இகம் காண.

 

பணிவிடைக்காரன் ஒரு பரலோக பாணன்

பரமாள விரும்பி பெருமையில் வீழ்ந்தான்

பிடியற்று பீடையாகி விழுந்தான் வையத்துள்

சாத்தானாகி சாபமாகி தனைஇழந்து.

 

வந்தவன் வஞ்சகன்

வஞ்சித்தான் வஞ்சிமகள்  ஏவாளை.

விஷத்தை விரும்பி புசிக்கவைத்தான்.

மனைவியை மறுதலிக்க மனமின்றி

அறிந்தே உண்டனன் ஆதாம் அதன் மிச்சத்தை.

 

செய்தன செயல்கள் செவ்விஷம்

மரித்தது மானுடம் மொத்தமும்

இழந்தது அதன் இயல் நற்குணம்

பயம், பாடு, பொல்லாப்பு

பகை, பஞ்சம், பாதகம்

பதித்தன அதன் முதல் தடம்

முழு உலகத்தில்.

மரணம் உரு பெற்றது. 

 

ஆவியில் அழிந்து, மனதில் மருவி

அணைந்து வரும் மெழுகாய் சரீரத்தில் உருகி

சீரழிந்தபடியே தரை தொடும் இனி

ஒவ்வொரு மகவும்.

அதன் அரைகுறை செயல்கள்

அழிக்கும் விஷம் விட்ட மிச்சத்தை.

 

பரமன் பார்வை தொடா பாதாளம்

நரகமெனும் குப்பை கூடம்

சென்றடையும் செத்தன யாவும்

அங்குதான் அடைய வேண்டும்

இனி ஆதாமும் அதன் முழு சுற்றமும்.

 

உருகிவிட்டான் உயிர் தந்தவன்

பெற்றவன் பெரும் பாசம் கொண்டவன்

அணு அணுவாய் கொன்று வரும் மரணத்தையும்

அதன் அடி காரணம் பாவத்தையும்

பிள்ளைகள் மீதிருந்து பிரித்தெடுக்க

தானே தன் மேல் அதை சுமந்து தீர்க்க

திருந்துவோர் திரும்பி வர வழியாக

பரமன், படைத்தவன், பரம் ஆள்பவன்

அடிமைக்கு அடிமையாய் அவனியில்

அவதரித்தானே அழகாய் இன்று!

 

அன்பை கொடையாக்க

தன்னை பலியாக்க

அலகையை சிறையாக்க

உயிர் உளம் புதிதாக்க

பிறந்தனனே பெருமான்

பிறப்பற்றவன் பிறந்த நாள் கண்டானே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.