(Reading time: 9 - 18 minutes)

பேத்தி பேச ஆரம்பித்தவுடனேயே பெரியவர்களின் முகம் மாறத்தொடங்கி மகன் என்ன சொல்லப் போகிறானோ என்று நினைத்தபடி இருக்க, அவனோ இருவரையும் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டதும் இருவரிடமிருந்தும் நிம்மதிப் பெருமூச்சுக் கிளம்பியது.தொடர்ந்து அப்பா என்றபடி உள்ளே செல்ல முயன்ற திவ்யாவைத் தடுத்து, “அப்பா காபி குடிச்சிட்டு வரட்டும்டா..அப்புறம் பேசலாம்” என்று தன்னிடம் இருத்திக்கொண்டார் பாட்டி.

மெதுவாக அவளிடம், “திவிக்குட்டி, அப்பா இந்தத் தடவை லீவுக்கு அம்மா ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டாங்கள்ள,,அதனால நாம பெரிய லீவுக்கு கிராமத்துக்குப் போலாம்..அங்க போகணும்னு அடம் பண்ணக்கூடாது சரியா? என,

பாட்டியின் முகத்தைப் பார்த்துவிட்டு “ஹ்ம்..எப்பாப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க பாட்டி என்று மறுப்பாகத் தலையை ஆட்டினாள் திவ்யா

“அதில்லைடா...எதையுமே வீணாக்கக் கூடாதுன்னு மிஸ் சொன்னாங்கள்ல,அப்ப டிக்கெட் வீணாகக் கூடாதுன்னு தான் டா பாட்டி அப்படி சொல்றாங்க” என தாத்தா கூற,

“சரி..பட் நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா போனும் ஓகே வா என்று பேரம் பேசினாள் திவ்யா.

சரி என்று ஒத்துக்கொண்ட தாத்தா, “ போடா போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வா..சீக்கிரமா முடிச்சா நாம விளையாடலாம்” என்று அவளை உள்ளே அனுப்பினார்

ஹோம் வொர்க் செய்யும் போதே, திடீரென்று ஞாபகம் வந்தவளாக, “அம்மா..இன்னிக்குப் பொங்கல், போகி பத்தி மிஸ் சொல்லிக்குடுத்தாங்கம்மா”என்றாள் திவ்யா

“அப்படியா..என்ன சொன்னாங்க பொங்கல் பத்தி”என பிருந்தா கேட்க,”சூரிய பகவானுக்கு நன்றி சொல்லத்தான் கொண்டாடறோம் னு சொன்னாங்கம்மா..அப்புறமா நாம சாப்பிட புட் குடுத்து, மில்க் குடுத்து நமக்கு ஹெல்ப் பண்ணற எல்லாருக்கும் தாங்க்ஸ் பண்றதுக்குதான் கொண்டாடறோம்னு சொன்னாங்க”

“ம்ம்..திவ்யாக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே..வெரி குட்..அப்ப போகி பத்தி ஏதும் சொல்லலையா”என்றான் இதைக் கேட்டுக்கொண்டிருந்த ரமேஷ்.

“போகின்னா நம்ம வீட்டுல இருக்கற வேஸ்ட் திங்க்ஸ், குப்பை எல்லாத்தையும் கிளீன் பண்ணனும்னு சொன்னாங்க..அப்போ நம்ம வீட்டுலயும் கிளீன் பன்னுவோமாப்பா”

“ஆமா டா..நாமளும் பண்ணுவோம்..அதுக்குத்தான் தாத்தா பாட்டியை ஊருக்குப் போகக்கூடாதுன்னு சொன்னேன்.நாம நம்ம பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வரதுக்குள்ள தாத்தாவும் பாட்டியும் இங்க சுத்தமா எல்லாத்தையும் செய்ஞ்சு வச்சிடுவாங்க..அதனால கிராமத்துக்குபோக முடியாதுன்னு சொன்னேன்” என்றாள் பிருந்தா

கேட்டுக்கொண்டிருந்த ரமேஷ் க்கும் சுருக்கென்றது..வெளியில் இருந்த பெரியவர்களுக்கும் மனம் வலித்தது.

தன் தாய் சொன்னதைக் கேட்ட திவ்யா ஏதும் சொல்லாமல் எழுதத் தொடங்கினாள்.சிறிது நேரம் கழித்து, “எங்க மிஸ் இன்னொன்னும் சொன்னாங்கம்மா,எங்க கிளாஸ்ல படிக்கற ராஜு மிஸ்கிட்ட, எங்க வீட்டுல குப்பையே இல்ல, கௌ கூட இல்ல அப்ப எப்படி கிளீன் பண்றது? எப்படி தாங்க்ஸ் பண்றதுன்னு கேட்டான்மா?

“என்ன சொன்னாங்க உங்க மிஸ்? என ரமேஷ் கேட்க,

“போகின்னா வீட்டைச் சுத்தப் படுத்தறது மட்டுமில்லை..நம்ம மனசுல இருக்கற கெட்ட எண்னங்களைச் சுத்தப் படுத்தறது தான்..நீங்கல்லாம் யாருக்காச்சும் தப்பு பண்ணிருந்தா சாரி கேட்கலாம்.யாராச்சும் சின்னதா உதவி பண்ணினா கூட தேங்க்ஸ் பண்ணலாம்..வீட்டுல நம்மைப் பாத்துக்கற பெரியவங்களுக்குத் தொல்லை இல்லாம இருக்கலாம்..அப்படின்னு சொன்னாங்கப்பா” என்றவள்

“ஏம்ப்பா...நம்ம வீட்டுலயும் குப்பை இல்லை, கௌ இல்லை..என்னைப் பாத்துக்கறது, எல்லா வேலையும் செய்றது பாட்டியும் தாத்தாவும் தானே..அப்ப நாம அவங்களுக்குத்தானே தேங்க் பண்ணனும்..அவங்கள விட்டுட்டு நாம மட்டும் ஊருக்குப் போறது தப்பில்லையாப்பா? என்றவள்,ஏதோ யோசித்து விட்டு

“அவங்க ஊருக்குக் கூட நீங்க அனுப்ப மாட்டேண்றீங்கப்பா..நான்வேணா உங்க கூட வரேன்..தாத்தா பாட்டி அவங்க ஊருக்குப் போகட்டும் பா..நாம வந்து எல்லாம் கிளீன் பண்ணிக்கலாம்..ப்ளீஸ் பா.”எனவும்,

சுரீரென்று அறைபட்டாற்போல் நிமிர்ந்தான் ரமேஷ்.

சின்னக் குழந்தைக்கு இருக்கும் அறிவு தனக்கில்லையே..தன் வாழ்வு, தன் சந்தோஷம் என்றே வாழ்ந்த ஜீவன்களின் சின்ன ஆசையைக்கூட நிறைவேற்றாமல் இருக்கும் தான், பொங்கலும் போகியும் கொண்டாட தேவையே இல்லை என நினைத்தவன் மனைவியை நோக்க, அவளும் திவ்யாவின் பேச்சில் திகைத்திருக்கக் கண்டான்.

கணவனை ஒரு பார்வைப் பார்த்த பிருந்தா, “ ஆமா திவ்யாக்குட்டி,நீ சொல்றது தான் கரெக்ட்..ஆனா நாம எல்லாரும் தாத்தா பாட்டி ஊருக்கேப் போலாம்.நீ கேட்டமாதிரி எல்லாத்தையும் பாக்கலாம்..ஓகே வா”என்றவள் எழுந்து தன் மாமனார் மாமியாரிடம் வந்து,

“சாரி மாமா, சாரி அத்தை..நான் உங்களுக்குன்னு மனசு இருக்கும்னு யோசிக்கல, வேலை வாங்கறத தப்பாவும் நினைக்கல..ஆனா திவ்யா சொல்லும்போது தான் வேலைக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கேன்னு தோணுச்சு. இந்த தடவை பொங்கல் உங்க ஊருல தான்..சாரி சாரி நம்ம ஊருல தான்..ஓகே வா” என்று கூற,

பெரியவர்கள் இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தத் தொடங்க, நிம்மதியான மனதோடு தன் மகளை முத்தமிட்டாள் பிருந்தா..அவளோடு ரமேஷும் இனைந்து கொண்டான்.

இவர்கள் வாழ்வில் போகிப் பண்டிகை கூட பொங்கலாகி விட்டது நிஜம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.