(Reading time: 17 - 33 minutes)

 

"ம்ம்.. அவங்களுக்கு அவங்க ஒரே மகனுக்கு திருமணம் செய்ய ஆசை நான் பலி ஆடு ஆகிட்டேன்.நான் உன் கிட்டே கடுமையா நடந்து கிட்ட காரணம் உனக்கு சொல்லணும். 

நான் உன்னை குழந்தையாவே வளர்த்திட்டேன்.நீ இனிமேல இப்படி இருக்க கூடாது யாரையும் நம்பி இப்படி வாழ்க்கையை தொலைச்சிடக் கூடாதுன்னு எனக்கு ஒரே கவலை".

என்றவளை இடை மறித்து

"அக்கா நீ பேசாம நம்ம வீட்டுக்கு வந்திடு உன்னை நான் பார்த்துப்பேன் .இந்த பொல்லாதவங்க வீட்டில ஏன் இருக்கணும் இவங்களை சும்மா விடக் கூடாது" என்று குமுறினேன்.

"என்னை பேச விடு ரேகா, நான் நான் செக் அப் பண்ணி ப் பார்த்ததில எனக்கும் அந்த நோய் இருக்குதுன்னு தெரிய வந்தது."

என்றவளையே விழி தெறிக்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னையும் அறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

"அழாதேடா நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கு இந்த தண்டனைன்னு யோசிச்சு அழுது அழுது என் கண்ணீரே வற்றிப் போயிடுச்சு ."

"நீ இன்னும் ஏன் அந்த வீட்டில இருக்க? எனக்கு அவங்களை எல்லாம் நாக்க பிடிங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்கலாம்னு வருது.உனக்கு என்ன ஆச்சு அக்கா ஏன் இப்படி இருக்க நீ?"

"எனக்கும் முதலிலே ரொம்ப கோபம் வந்தது ரேகா. ஆனால் மனசாட்சியில்லாத இந்த துரோகிகளிடம் எனக்கு நியாயம் கிடைக்கும்னு நீ நினைக்கிறியா? அவங்க ஒரே நிமிஷத்தில ப்ளேட்ட மாத்திப்போடமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?

"அம்மா அப்பா போனப்புறம் நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு எல்லோரும் வேற அர்த்தம் கற்பிச்சிடுவாங்க அதிலும் எனக்கு இந்த நோய் இருக்கிறது தெரிஞ்சா உன்னைப்பற்றியும் யாரும் தப்பா பேச வாய்ப்பிருக்கு. நம்ம மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் பிறர் கதைப் பேசறதுக்காகவே வாழற மக்கள் அவங்க.அதனால அது வெள்ளை காமலையாவே இருந்திட்டு போகட்டும்.நான் நம்ம வீட்டுக்கு வரப் போறதில்லை. என்னால உனக்கு ஒரு கேட்ட பெயர் வந்திரக் கூடாது."

"எனக்கு இப்போ எல்லாம் வாழற ஆசையில்லை கொஞ்ச கொஞ்சமா சாக நான் விரும்பலை, சட்டுன்னு போயிட்டா நல்லாயிருக்கும் என் குழந்தைக்கும் இந்த நோய் இருக்கும் அதோட சாவையும் நான் பார்க்கனுமா? நான் என்ன பாவம் செய்தேன்னு எனக்கு இந்த தண்டனைன்னு யோசிச்சு யோசிச்சு மனம் வெம்பி போறேன்.

நீ அடிக்கடி என் வீட்டுக்கு வராதே உனக்கும் ஏதும் கெட்டது செஞ்சிடுவங்கன்னு ரொம்ப பயமா இருக்கு ".

என்று சொல்லி முடித்தவள் என் பேச்சை கேட்க தயாராகவே இல்லை ஹாஸ்பிடல் போகாமலேயே அவரவர் வீடு திரும்பினோம்.

மாதங்கள் கடந்தன 

அக்காவின் பிரசவ நேரமும் வர பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டு 

அவள் அதிக ரத்த அழுத்தததினால் உயிரை இழந்தாள்.

அடுத்தடுத்த அதிர்ச்சிகளினால் எனக்கு உலகமே தலை கீழாக சுழன்றடித்தது .

இப்போது ஆலயத்தை கடந்து கல்லறைத் தோட்டத்திற்கு வந்து இயந்திர கதியில் அக்காவின் கல்லறை முன் வந்து நின்றேன். கையில் இருந்த மலர்களை அவள் நிரந்தர இருப்பிடத்தில் சூடினேன்.மனதில் இருந்த எல்லாவற்றையும் அவளுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். "அக்கா உனக்கு தெரியுமா ஏஞ்சலுக்கு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் எய்ட்ஸ் நோய் இல்லையாம் நீ மட்டும் எங்க கூட இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். உன் மகளை அந்த துரோகிகள் கிட்ட நான் வளர விடல,அவ என் கூட தான் இருக்கா ....

ஒரு வழியாக எல்லாம் பேசி முடிந்ததும் அமைதியாக அமர்ந்திருந்தேன் .

ஏனோ அக்காவின் டைரியின் படித்த, அவள் கண்ணீரில் கரைந்திருந்த அந்த கடைசி கவிதை ஞாபகம் வந்தது,

கணவா,

நீ எனக்கு திருமணப் பரிசாக 

உன் அன்பையும். வாழ்நாள் அன்புறவையும் தர வேண்டும் என மட்டும் தானே யாசித்தேன்.

நீயோ....

மரணத்தை தினம் எண்ணி பயந்து நடுங்கும் நாட்கள் தந்தாய்,

வாழ்வை எதிர் நோக்கும் உள்ள உறுதியை சிதைத்தாய்,

பிறர் முன்னாலே என் கற்பு நிலை கேள்விக் குறியாகும் அவநிலை எனக்களித்தாய்,

உந்தன் பாவப்பளுவின் சம்பளத்தை என் தோள்மேல் சுமத்தி எனை திணறடித்தாய்.

என் வாழ்வின் முடிவு இவ்வாறு ஆகும் எனத் தெரிந்திருந்தால் நான் என் தாயின் கருவிலே சிதைந்திருப்பேன். அக்கணம் கூட நான் மகிழ்ந்திருப்பேன்.

தாங்க முடியாத அக்காவின் துயரம் என்னை தாக்க நான் மடிந்து குனிந்து கதறி அழ ஆரம்பித்தேன்.

பின் குறிப்பு: இந்த கதையில் வரும் அக்காவிற்கு நான் பெயரிடவில்லை. ஏனென்றால், இப்படி தன் கன்னிமைக் காத்து திருமண பந்ததில் இணைந்து கணவனின் இந்த திருமணப் பரிசை பெற்றுக் கொள்ளும் அக்காக்கள் ஏராளம். அத்தகைய சகோதரிகளுக்குஎன் கண்ணீர் சமர்ப்பணம்.

 

This story is dedicated for Dec 1 " World Aids Day".

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.