(Reading time: 10 - 20 minutes)

 

திவீஷ்-பிரியா...

ஐந்து வருட காதலை தூக்கி எரிய தயாராய் இருந்த காலம் அது... முதல் இரண்டு வருடங்கள் எந்த சிக்கலும் இல்லை தான்.. மூன்றாம் வருடம் சிறு சிறு சண்டைகள் வந்த போதும் திவீஷ் கொஞ்சம் அடங்கியே போனான்.. பிரியா பார்க்க தான் ஆள் தைரியசாலியாக தெரிவாள். உள்ளுக்குள் சிறு குழந்தை தான்.. இப்போதும் அவனிடம் கெஞ்சுவதும் கொஞ்சுவதும் துள்ளலான நடையும், அனைத்தையும் மீறி அவன் மேல் கொண்டிருந்த அளவு என்ற சொல்லே பயன்படுத்த முடியாத அவள் காதலும் .. அதை புரிந்து கொண்டவன் தாழ்ந்து போவதில் ஆச்சர்யம் இல்லையே!!!

நான்காம் வருட இறுதியில் பெற்றோரிடம் காதலை சொல்ல ஆயுதமான போது தான் சிறு விரிசல் ‘நமக்குள் ஒத்து வருமா’ என்ற கேள்வி முதலில் தலை தூக்கியது அதுவும் ப்ரியாவிற்கு தான்.. வழக்கம் போல் அவன் அடங்கி போனான்... ஆனால் அவனும் பாவம் எவ்வளவு தான் பொறுப்பான்.. ஆண்மை இடம் அளிக்கவில்லை!! விளைவு.. காதலில் முறிவு அதுவும் பெற்றோர் சம்மதம் கிடைத்த பின்பு!!!

கல்யாணம் ஆனால் சரியாகி விடும் என்று நினைத்து மன வாழ்க்கைக்குள் நுழைந்த இருவரும் வெவ்வேறு திசையில் பயணத்தை தொடர தயாராக.. வாரத்தில் ஒரு நாள் சண்டை மீதி நாட்கள் கொஞ்சல் என கழிந்த காதல் வாழ்கை.. ஏழு நாட்களும் சண்டை கொஞ்சல் என்றால் என்ன என்று இருவரும் கேட்கும் அளவு இருந்தது கல்யாண வாழ்கை.. ப்ரியாவின் பிடிவாதம் கொடி கட்டி பறக்க... திவீஷின் தன்மானம் தலை அசைக்க மறுத்தது...!!!

சண்டை கோபம் மன உளைச்சலின் விளைவாய் முதல் குழந்தை கருவிலேயே அழிந்து போனது. மொத்தத்திற்கும் அதிர்ந்து ஆத்திரமே உருவாய் நின்ற பிரியா எல்லாமே அவனால் தான் என குற்றம் சாட்டவும், பொறுமையின் சாயல் திவிஷிடம் மறைந்தது..

'தொட்டால்' குறையும் சண்டை.. தொட்டதற்கு எல்லாம் ஆரம்பமானது அதிகமானது!!! அது போல் ஒரு சண்டையில் தான் அவளை கை நீட்டி அடிக்கும் அளவிற்கு வந்திருந்தான் அவன்!!!!

காதலிக்கும் போது வேறு கதை..

"நீ என்ன அடிப்பியா டா"

"நானா.. ச்ச இல்லடி ஜில்லுமா உன்ன நான் அடிச்சா எனக்கு தான வலிக்கும்"

அவன் சொன்ன பதில் காதுகளில் ரீங்காரமிட, கண்களை துடைத்து கொண்டு எழுந்து ஹாலிற்கு வந்தாள். அம்மா அப்பாவிற்கு பிடித்த ரவா லட்டை சுட சுட பிடித்து வைத்து கொண்டு வாசற் படியே தவம் என்று கிடக்க. ஒரு பெரிய பார்சலுடன் வீட்டிற்குள் நுழைந்தவர் அம்மாவை கண்டு கொள்ளவில்லை. அம்மாவும் முகத்தை திருப்பி கொண்டு சென்றாள்.

சற்று நேரம் மகள்களுடன் பேசி விட்டு அடுப்படிக்கு சென்ற தந்தையை பின் தொடர்ந்த பவி,திரும்பி வந்து ப்ரியாவை கை பிடித்து சத்தம் போடாமல் அழைத்து சென்றாள்..

அங்கே அப்பா அந்த பார்சலை பிரித்து, அம்மாவிற்கு பிடித்த 'முட்டை பரோட்டாவை' ஒரு வாய் எடுத்து ஊட்ட, கோபமே உருவாய் அம்மா நின்றிருக்க, "சாப்பிடு  டி ரொம்ப தான் முறுக்கிகிற" என்று ஊட்டி விட்டவரே, இடது கையால் அவர் கன்னத்தை தடவி கொடுத்தார்.

அம்மாவும் லட்டை அப்பாவிற்கு ஊட்டி விட, கடைசியாய் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்த கடலை பர்ப்பியை பார்த்த போது குழந்தையை மாறிய மனைவியின் முகத்தை ஆசையாய் பார்த்தார் ராஜா.

திரும்பி தன்னறைக்கு வந்தவளின், பின்னோடு வந்த பவி,

"நான் தான் சொன்னேன்ல நம்ம பாக்காத  சண்டைய சொல்லு இத விட எப்படி எல்லாம் அடிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க"

உண்மை தான்!!! அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்!!! அதிலும் குடும்பத்தை எதிர்த்து!! எவ்வளவோ சண்டைகள் வந்த போதும் தன்னை நம்பி வந்தவளை சந்தோசமாக வைத்து கொள்ள தவறவில்லை ராஜா!! அதே போல் கணவரின் காதலை மட்டுமே நாடும் சராசரி மனைவியை போல் இல்லாமல் கோபத்தையும் பொறுத்து கொண்டு  அவர் வெற்றி தோல்விகளில் பங்கெடுக்கும் அதிசய பிறவி தான் சாந்தி!!!

மனம் தெளிவானதா? கனத்து போனதா? என்று கேட்டால் அதற்கு மூளை கூறிய பதில் 'தெரியவில்லை'.

எப்போதும் தடுக்கும் கோபமும் ஈகோவும் இப்போதும் தலை தூக்க, சிரித்த முகமாய் வந்த அன்னையை கண்டதும் ஓடி ஒளிந்து கொண்டது!! கண் முன்னே வருட கணக்கில் கண்ட அழகிய ஓவியமாய் பெற்றோரின் காதல் அனைத்தையும் உணர்த்தியது!!

தன் செல்லை எடுத்து சுவிட்ச் ஆன் செய்தவள், வரிசையாய் வந்து குவிந்த மெச்செஜ்களின் நடுவே இருந்த அவனது மெசேஜை தேடினாள். 'ஜிஞ்சு' என்ற பெயரில் இருந்த மெசேஜை ஓபன் செய்தால்,

'ஜில்லு...'

'சாரி தெரியாம பண்ணிட்டேன்... போன் அட்டெண்ட் பண்ணுமா...ப்ளீஸ் திரும்பி வா ஜில்லு ஐயம் சாரி....'

'நான் பண்ணது பெரிய தப்பு தான் என்ன பணிஷ்மன்ட் வேணாலும் குடு ஆனா திரும்பி வா ப்ளீஸ்...'

'ஜில்லு நிஜம்மா டா? நம்ம பையன் வர போறனா? அத்தை சொன்னங்க ஐயம் ஹாப்பி பார் அஸ் டா.. ப்ளீஸ் டா இப்போ ஆச்சும் போன் அட்டெண்ட் பண்ணு...'

இந்த மாதிரியாய் அவனிடம் இருந்து வந்து குவிந்திருந்த குறுஞ்செய்திகளை படித்தவள் விழிகளில் துளிர்த்த கண்ணீரில் கரைந்தது கோபத்தின் சாயல்...!!!

அவசரமாய் கண்களை துடைத்து கொண்டு, அவன் எண்ணிற்கு போன செய்தவள் அவன் ரிங்க்டோன் அருகில் கேட்க, குழப்பமாய் காதுகளை தேய்த்து விட்டு கொண்டு கேட்டாள். அவன் குரலும் கேட்டது.. மெல்ல ஹாலிற்கு வந்தவள் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மாடிக்கு சென்று அங்கிருந்த அறையில் நுழைந்து கொண்டாள்.

அவனும் பின்னோடு வந்து கதவை தாளிட ஏதோ முதன் முறை அவனை பார்த்த போது உண்டான நடுக்கமும் தயக்கமும் அவள் மனதில் குடிகொண்டு ஆட்டி படைத்தன.

"ஜில்லு"

"மா..மா..." அவ்வளவு தான் அதற்கு மேல் முடியவில்லை அவள் கேவலே அவள் மனநிலையை உணர்த்தி விட, இரண்டே எட்டில் அவளை அடைந்து இறுக அணைத்து கொண்டான்.

"ஸ்ஸ்ஸ்.. ஜில்லு போதும் அழுகாத.. ஹேய் போதும்னு சொல்றேன்ல" என்று அவன் அதட்டல் போட, விலகி நின்று முறைத்தாள் பிரியா.

"சாரி டா,உன்ன நான் போய் கை நீட்..." வார்த்தை முடிக்க முடியாமல் திணறிய கணவனை பார்த்து உருகி விட்டது மனது..

"பரவாயில்ல மாமா, நம்ம பையன் கிட்ட சொல்லி இல்ல இல்ல என் பையன் கிட்ட சொல்லி உன்ன அடிக்க சொல்லிகறேன்"

"ஒ அப்படியா.."

"ஆமா"

"அப்போ என் பொண்ணு எனக்கு சீக்கிரமா வேணும், அவ வந்து உங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணுவா பாரு"

"ம்ம்ம் ம்ம்ம் வருவா வருவா, போடா"

"ம்ம்ம்ம் நீ மனசு வெச்ச இப்போவே வருவா.. என்ன ரெடி பண்ணலாமா" என்ற கேட்ட அவளின் ஜிஞ்சுவை பொய்யாக முறைத்து ஒற்றை விரல் நீட்டி மிரட்ட, கையை பற்றி இழுத்து தன் உயிரோட சேர்த்து கொள்ள துடிப்பவனை போல இறுக்கி அணைத்து கொண்டான் அவனது ஜில்லுவை.

பட்டு போன மரமாய் கருகி போகாமல், அழகிய சிறு தளிராய் அன்பெனும் தென்றலில் தலை அசைத்தது காதல் மறுபடியும்!!!!!!     

This is entry #07 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.