(Reading time: 18 - 35 minutes)

 

கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்

மலர்ந்தது அவள் இதயத்தில் புத்தம் புது பூ. இசை ஒலிக்க ஒலிக்க அவளுக்குள்ளே பல நூறு மாற்றங்கள். எழுந்து அமர்ந்தார் அவளுடைய அம்மா. அவர் கண்களில் நீருற்று.

கிட்டத்தட்ட அரை மணி நேரம், வாசித்தவள், எழுந்து வந்து அம்மாவின் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுது முடித்தாள் ஹம்ஸத்வனி.

இரும்புப் பாறையிலும் இசையால் நீர் கசியும்

பழி வாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்

அவள் உள்ளமெங்கும் அமைதி குடிகொள்ள ஆரம்பித்தது

காலை விடிந்ததும் கதவை திறந்து அறைக்குள் வெளிச்சத்தை பரவ விட்டாள். அறைக்குள் மட்டுமல்ல அவள் மனதிற்குள்ளும் வெளிச்சம் பரவியது.

அவள் அம்மாவுக்கு புரிந்து போனது. இனி இசையே தன் மகளை மீட்டெடுத்து விடுமென்று.

அடுத்து வந்த நாட்களை அவள் இசையுடனே கழிக்க துவங்கினாள். மனம் லேசாகி தன்னிலை பெறத்துவங்கியது.

இந்த நொடி வரை அவள் இசையுடனே வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் முழுவதுமாக குணமாகிவிட்டாள் என்று இந்த நிமிடம் கூட நம்ப மறுக்கிறார் அவள் அப்பா.

பழைய நினைவுகளின் தாக்கத்திலிருந்து விடுபடவுமே இந்த நிமிடம் கூட இசையே கைகொடுத்தது. அதனுள் மூழ்க துவங்கினாள் அவள்.

ரண்டு நாட்கள் கழிந்திருந்தன. தனது அண்ணன் மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு கிளம்ப, அவர்களை அங்கே இறக்கி விடும் பாவனையில், அவர்களுடனே கிளம்பி வந்துவிட்டிருந்தான் ஹரீஷ்.

வீட்டிற்குள் நுழைந்தவனின் பார்வை வழக்கம் போல் அவளது தரிசனத்துக்காக வீட்டை சல்லடையாக சலித்துக்கொண்டிருந்தது.

கீழே வரவேயில்லை அவள்.

மதிய உணவிற்கு பிறகு, அனைவரும் உறங்கி விட, யாருமறியாமல் மெல்ல மாடிப்படி ஏறினான் ஹரீஷ்.

அவளது அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள் ஹம்ஸத்வனி. அவள் அருகில் வந்து அமர்ந்தான் அவன்.

வான மழை போலே புதுப் பாடல்கள்

கான மழை தூவும் முகில் ஆடல்கள்

அவள் குரலில் ஒலித்த அந்த பாடலின் நினைவில், அவளையே ரசித்தபடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான் ஹரீஷ்.

அவளை சுற்றிலும் இசைக்கருவிகள்.  அந்த அறை மேஜையின் சில, நோட்டுப்புத்தகங்கள். சில நிமிடங்கள், கழித்து திரும்பிய அவன் பார்வை அந்த நோட்டு புத்ததகங்கள் மீது விழ அதை எடுத்து புரட்டிய அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.

க்காவின் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிந்திருந்தன.

இந்த நான்கு மாதங்களில் ஹரீஷ் அவளை ஒரு முறை கூட நேரில் வந்து பார்க்கவில்லை.. அவளை சந்தித்தால் அந்த நல்ல செய்தியுடன் வந்துதான் சந்திக்க வேண்டுமென்ற எண்ணத்திலேயே வரவில்லை அவன்

அதே நேரத்தில் அவளுடன் தொலைப்பேசியில் பேசாத நாள் என்று ஒரு நாள் இதுவரை வந்ததில்லை. அவன் மெல்ல மெல்ல அவளுக்குள் நுழைவதை அவளும் உணராமல் இல்லை.

அந்த காலைப்பொழுது அழகாக விடிந்திருக்க அவள் அவனது அழைப்புக்காக காத்திருந்த நேரத்தில் பளீர் புன்னகையுடன் அவள் முன்னே வந்து நின்றான் ஹரீஷ்.

அவனைப்பார்த்து அழகாக விரிந்தன அவள் கண்கள்.

அவள் முகத்தில் குடியேறியிருந்த தெளிவும், கம்பீரமும் அவனை வியக்க செய்தன. இசை இந்த நான்கு மாதங்களில் அவளை இன்னமும் மெருகேற்றி விட்டதோ.

'வாங்க ஹரீஷ். உட்காருங்க' சொன்னாள் ஹம்ஸத்வனி

இப்போ உட்காரவெல்லாம் டைம் இல்லை. நீ உடனே என் கூட சென்னை கிளம்பறே.

எதுக்குபா?

அதெல்லாம் அங்கே போய் சொல்றேன் கிளம்பு.

மறுநாள் காலை சென்னையை அடைந்திருந்தனர் இருவரும்.

அவர்கள் தங்கப்போகும் ஹோட்டல் அறையை அடைந்தவுடன் கேட்டாள் 'எதுக்கு வந்திருக்கோம் இப்போவாவது சொல்லுங்க.

'சொல்றேன் ஈவனிங் சொல்றேன்.' சரியா நாலு மணிக்கு இந்த புடவையை கட்டிட்டு, நீ ரெடி ஆகுற. அவளிடம் ஒரு புடைவையும், சில நகைகளையும் கொடுத்துவிட்டு. விலகினான் அவன்.

மாலையில் தயாராகி இருந்தாள் அவள். அந்த காட்டன் புடவை அவளுக்கு இன்னமும் கம்பீரத்தை கொடுப்பதை போலே தோன்றியது அவனுக்கு.

காரில் போகும் போது மெல்ல சொன்னான் ஹரீஷ்.

நான் ஒரு கதை சொல்லவா? எங்க ஊரிலே ஒரு பொண்ணு இருந்துச்சாம். அதுக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்குமாம். அது தனியா ஒரு ரூமிலே உட்கார்ந்து புதுசு புதுசா நிறைய பாட்டுக்கு மெட்டு போட்டு வெச்சிருந்ததாம். நான் அந்த நோட்புக்கை எடுத்திட்டு போய் ஒரு ஜெராக்ஸ் எடுத்து, சினிமாலே இருக்கிற என்னோட ரெண்டு friends கிட்டே கொடுத்தேனாம். அதை அவங்களோட மூணு  படத்திலே போட்டுட்டாங்க பாரு. எல்லா பாட்டும் சூப்பர் ஹிட். இப்போ யார் அந்த மியூசிக் டைரக்டர் அப்படின்னு எல்லாரும் தேடிட்டு இருக்காங்க. ஊரு முழுக்க இப்போ அதுதான் பேச்சு. அந்த பொண்ணு பேர் என்ன தெரியுமா?

அவன் சொல்ல வருவது அவளுக்கு புரிந்து விட்டிருந்தது. இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் ஹம்ஸத்வனி.

அந்த பொண்ணு பேரு ஹனி  என்கிற ஹம்ஸத்வனி மலர்ந்து சிரித்தான் அவன்.

மாற்றமே இல்லை அவள் முகத்தில். சின்னதான ஒரு புன்னகையுடன் மலர்ந்து போயிருந்த அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அவள். என்னுடைய வெற்றியில் இவ்வளவு மகிழ்ச்சியா இவனுக்கு.?

ஹேய்! என்னடா அப்படி பார்க்கிறே நீ ஜெயிச்சிட்டடா ஹனி. நான் சொன்னேன் தானே நீ சீக்கிரமாவே மேடை ஏறுவே அப்படின்னு.? இப்போ பாரு. அந்த மூணு படத்தோட டைரக்டர்களும் சேர்ந்து ஒரு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. இன்னைக்கு உன்னை எல்லாருக்கும் அறிமுக படுத்த போறாங்க. பெண் இசை அமைப்பாளர்கள் ரொம்ப கம்மிடா. நீ சாதிச்சுட்டே  எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா.

அவன் சொன்னது எதுவுமே அவளை பாதிக்கவில்லை. அவளை உருக்கிப்போட்டது அவனது அன்பு. தன்னலமில்லாத அவனது நேசம். அவள் கண்களில் நீர் சேர்ந்தது.

ஏதாவது பேசுடா என்றான்.

சட்டென அவன் தோளில் சாய்ந்தவள் மனதார சொன்னாள். 'லவ் யூ' ஹரீஷ்

விழா துவங்கி இருந்தது. மேடையின் கீழே அமர்ந்திருந்தனர் அவள் குடும்பத்தினர் அனைவரும். மேடையிலேயே அமர்ந்திருந்தான் ஹரீஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.