(Reading time: 7 - 13 minutes)

 

மணநாள் இரவு

மலர்ந்தது புது உறவு

விடைபெறும் நாளும் விடிந்தது

வாடிய மலர்முகம் அவனை வருத்தியது (17)

 

என்னவள் நீ

என் கண்கள் தரிசித்த  உன் முகம்

என் கைகள் ஸ்பரிசித்த உன் தேகம்

என்னுடைமை அன்றோ! அதை நீ நோகச் செய்வாயோ (18)

 

என் உணர்வை விட்டுச் செல்கிறேன் உன்னிடம்

என் இதயத்தில் சுமந்து செல்கிறேன் உன் மன(ண)ம்

என் நினைவில் நீயிருக்க எவ்விடமும் சொர்க்கலோகம்

என் உடலுக்கு ஏற்படலாம் துன்பம் உயிரோ உன்னிடம் பத்திரம் (19)

 

பாலும்  கசக்கவில்லை பாயும் நோகவில்லை

பசலை நோயும் பிரிவுத் துயரும் தாக்கவில்லை

பாவையின் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏனோ

பல வஞ்ச நெஞ்சங்களுக்குப் பொறுக்கவில்லை (20)

 

போற்றுவார் தூற்றுவார்

பாரினில் பலரும்  இருப்பார்

போகும் பாதை எதுவோ

பிறரா சுமந்து செல்வார் (21)

 

மேகம் மறைத்து சென்றால்

மங்கியா போகும் சூரியன்

மண்ணுக்குள் புதைந்து போனால்

மதிப்பிழந்தா போகும் வைரம் (22)

 

உன்னில் மகனைப் பார்க்கிறோம்

உன் மகிழ்ச்சியில் புன்னகை பூக்கிறோம்

எந்நிலையிலும் மாற்றாதே உன் தனித்துவம்

எவருக்கும் நிரூபிக்க வேண்டாம் உன் மகத்துவம் (23)

 

அறிந்தான் அனைத்தையும்

அவள் சொல்ல சொல்ல

பேசி வழியே யானை பலம்

பாய்ந்ததாய் உணர்ந்தான்  

அவனுள்  மெல்ல மெல்ல (24)

தானில்லா  நிலை

தன்னைச் சேர்ந்தோருக்கு துயரம்

தவிப்பாய் இந்நினைப்பே மனதின்

தன்னம்பிக்கை தைரியம்

தகர்த்து விடும்  அபாயம் (25)

 

போர் முனையில் நாட்டை பேணும்

பெருந்தவப் புதல்வர் ஒவ்வொருவரும்

உத்வேகமாய் ஓர் மனமாய் தேசம் காக்க வைக்கும்

உணர்ச்சியை எழுச்சியை தருவது அவர்தம் சொந்தம் (26)

 

இமயமலை பனி சிகரம் - அங்கு

இருக்கிறது  தீவிரவாத இருப்பிடம்

தொலை தொடர்ப்புக்கு அப்பால் - செல்கிறேன்

திரும்ப ஆகும் வெகு நாள் (27)

 

குண்டு வெடிப்புகள் ஆயுத தாக்குதல்கள்

கள்ளமில்லா மக்களை கொன்று குவிக்கும் அரக்கர்கள்

வேரோடு தகர்த்து பூண்டோடு அழித்தான் மகரந்தன் என

வாகை சூடி உன் மஞ்சரியிடம் ஓடி வா நீ!! (28)

 

தன் எண்ணத்தை அவள் மொழியில்

தன் இலட்சியத்தை அவள் சொல்லில்

இதைத் தானே கேட்க காத்திருந்தான்

இல்லாள் விருப்பம் நிறைவேற்ற புறப்பட்டான் (29)

 

காலம் சுழன்றது கார்காலம் வந்தது

காதல் கணவன் நினைவே

மழைச் சாரலாய் அவளை நனைத்தது (30)

 

வெண்மதியின்  பட்டொளியில்

வெண் சாமரமாய்  தென்றல் வீசுகையில்

மாலை மயக்கும் வேளை

முறுவல் செய்தது முல்லை (31)

 

வருவான் என் தலைவன்

விரைவில் உன் அகம்பாவதைக்  கிள்ளி

விரிந்த என் கூந்தலில் சிறை வைக்க (32)

 

தகவல் வந்தது ஒழிந்தது தீவிரவாதம்

தன்னந்தனியே துணிச்சலாய் மகரந்தன் வீரம்

தேடியும் கிடைக்கவில்லை அவள்  கணவன்

தேகம் மரித்ததோ உயிர் சுமந்து மறைந்ததோ!!!(33)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.