(Reading time: 34 - 68 minutes)

ஒரு தோழி, ஒரு காதலி - பார்த்தி கண்ணன்

வெறுப்பின் உச்சகட்டத்திற்கே சென்று விட்டேன். மணி எட்டைத் தாண்டியிருந்தது. ஹார்னை இன்னொரு முறை பலமாக அழுத்தினேன்.

வாட்ஸேப்பில் ஒரு மெசேஜ் பளிச்சிட்டது. “ One min darling..pls “

“ஆமா...அப்டியே ஒரு நிமிஷத்துல வந்துடப் போற நீ” ..

Oru thozhi oru kathaliசில நொடிகள் கழிந்தன.

ரொம்பவும் போரடிக்கவும் காரின் ம்யூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தேன்.

 “நீ பாதி , நான் பாதி கண்ணே“ ஜேசுதாசின் குரல் ஒலிக்கத் துவங்கியது. அப்பாவின் கலெக்ஸன்.

பாட்டை மாற்றலாமென ரிமோட்டைத் பார்க்க , அதையும் காணோம்.

“இன்னிக்கு என்ன நேரத்தில் கெளம்பித் தொலைச்சேனொ தெரியல“,என வெறுப்பை உமிழ்ந்து கொண்டே குனிந்து சீட்டுக்கடியில் ரிமோட்டைத் தேடத் துவங்கினேன்.

ரிமோட்டைக் காணோம்..அப்போது பின் சீட்டுக்கடியில் இருந்த ஒரு ட்ராவல் பேக் கண்ணில் பட்டது.

நேற்று தான் புது வீட்டிற்கு மாறினோம். என்னுடைய அரையை மட்டும் நானே காலி செய்து , அதிலிருந்த அனைத்தையும் காரில் ஏற்றி புது வீட்டிலிருந்த என் அரையில் வைத்தேன். அதில் இந்த பேக்கை மட்டும் எடுத்து வைக்க மறந்து விட்டேன் போலும்.

“ஹாய் டா.. வந்துட்டேன் “ ..

திவ்யாவின் குரல் கேட்டதும் , ரிமோட்டைத் தேடும் படலத்தை கைவிட்டுவிட்டு நிமிர்ந்தேன்.

 திவ்யா...அவ்வளவு பிரமாதமாய் ஒன்றும் இல்லாத என் வாழ்க்கையின் ஒரே சுவாரஸ்யம்..சிவப்பு ஸ்லீவ்லெஸ் டாப், நீல ஜீன்ஸில்  எடுப்பாக நின்று கொண்டிருந்தாள். குழந்தைத்தனமான முகம். அதே பளீச் அழகு. நஸ்ரியா என்ற செல்லப் பெயருக்கு அவ்வளவு பொருத்தமாய் இருந்தாள். பார்த்த மாத்திரத்தில் இருந்த கோபமெல்லாம் பறந்துவிட்டது. இருந்தாலும் அப்படி காட்டிக்கொள்ளவில்லை.

“வாமா... என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட? “

“டேய்,,நான் என்ன உன்ன மாதிரி குளிக்காம கெளம்புற ஆளா? அதும் பொன்னுங்க கெளம்ப கொஞ்ச நேரம் ஆகத்தான் செய்யும்.. இந்தா இத உள்ள வை” என ஒரு பெரிய ஃபேக்கைக் கையில் கொடுத்தாள்.

“இது வேறயா?” ... அதை வாங்கி பின் சீட்டில் தூக்கிப் போட்டேன்.

“ பாத்துடா எருமமாடு..அதுல என்னென்ன இருக்கு தெரியுமா? “

“அது அப்புறம் பாத்துக்கறேன். நீ சீக்கிரம் ஏறு. போலாம்”

அவள் சுற்றி வந்து முன் சீட்டில் என்னருகே அமர்ந்தாள்.

“போலாமா?”

“ம்ம்ம்.. ஸ்டார்ட்”

காரை ஃபர்ஸ்ட் கியரில் மெதுவாக நகர்த்தினேன்.

“டேய்..ஒரு நிமிஷம் இரு..அம்மா வராங்க..” என்றாள்.

திரும்பிப் பார்க்க, திவ்யாவின் அம்மா வீட்டிலிருந்து அவசரமாக எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். கையில் வாட்டர் பாட்டில். ப்ரேக்கை மிதித்தேன்.

காரின் அருகே வந்து ,“என்ன சார்? வீட்டுக்குள்ள வர மாட்டீங்களோ?“ என்னைக் கேட்டவாறே பாட்டிலை திவ்யாவிடம் நீட்டினார்.

“இல்ல ஆண்டி..ரொம்ப லேட் ஆயிடுச்சு..அதான்..”

“சரி சரி..பாத்துப் போங்க.. நாளைக்கு லஞ்ச்க்கு இங்க வந்திடுங்க..கண்டிப்பா இன்னிக்கு நைட் ஸ்டே பண்ணியே ஆகனுமா?”

“ஆமா ஆண்டி.. சுஜி எங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்.. அவ இல்லாம நாங்க இல்ல. நாங்க இல்லாம அவ இல்ல. கண்டிப்பா கல்யாணம் முடிய வரைக்கும் நாங்க அங்கயே தா இருக்கனும்”

“சரிப்பா.. ஊட்டி ரீச் ஆனதும் நீ கால் பண்ணு,, இவ பண்ண மாட்டா”

“ஒகே ஆண்டி,,,பை..அங்கிளைக் கேட்டேன்னு சொல்லுங்க..” .. ஆண்டிக்கு டாட்டா சொல்லிய படியே காரைக் கிளப்பினேன்.

திவ்யாவின் குடும்பத்தில் நானும் ஒருவன் போல. இந்த ஐந்து வருடங்களில் எத்தனை நாட்கள் அவள் வீட்டிலேயே இருந்திருப்பேன் என்று கணக்கேயில்லை. எக்ஸாம் டைம் என்றால் இரண்டு வாரம் டென்ட் அடிப்பேன். இங்கே சமயத்தில் திவ்யாவை விட எனக்கு அதிகம் உரிமை இருப்பதாய் உணர்வேன். உண்மையில் என் வீட்டில் இருப்பதைவிட எனக்கு இங்கே இருப்பதில் அலாதியான மகிழ்ச்சி. போதாக்குறைக்கு திவ்யாவின் அம்மா அவ்வளவு ஜாலி டைப்.  அவளின் அப்பா ரொம்ப ரொம்ப ஜாலி டைப்.

அந்தத் தெருவினைக் கடந்து பிரதான சாலையில் பயனிக்கத் தொடங்கினோம்,

“ ஏண்டா மூஞ்சிய இப்பிடி உர்ர்ருனு வச்சிருக்க? பத்து நிமிஷம் லேட்டானதுக்கு இவ்ளோ சீன் போட்ற”

“ப்ச்..அதுக்கில்லடி.. இப்பிடி அடிக்கடி உங்க அம்மாவ ஏமாத்திட்டு வெளிய சுத்துறது எனக்கு கஷ்டமா இருக்கு”

“பாருங்கப்பா,,நல்லவரு பேசுறாரு... நானே அதைப்பத்தி கவலைப்படல..நீ ஏன் ஃபீல் பண்ற? நா எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? ரெண்டு நாள் செம எஞ்ஜாய்மென்ட் தான் “ என்று செல்லமாக என் தலையில் கொட்டினாள்.

“என்னமோ போ” .. டாப் கியருக்கு மாற்றினேன். சாலையில் பறக்கத் தொடங்கியது கார்.

“ டேய்..அப்புறம் நம்ம பிளேன்ல ஒரு சின்ன சேஞ்ச்.. நா ரயில்வே ஸ்டேசன் முன்னாடி இருக்கிற சிக்னல் கிட்ட இறங்கிக்கிறேன். ப்ரேம் அங்க வந்து பிக் அப் பண்ணிக்குவான் “

எனக்கு கொஞ்சம் ஷாக்கடித்த்து.

“ஏன்டி? ஊட்டில தானே நாம மீட் பண்ண போறதா ப்ளேன்? “

“ இல்ல டா.. லாஸ்ட் மினிட்ல ஒரு ட்விஸ்ட் .ப்ரேமோட அண்ணா யூ.எஸ்ல இருந்து வந்திருக்கான்.  ஸோ இன்னிக்கு ஃபேமிலியா திருப்பதி கெளம்புராங்க...இவன் மட்டும் ப்ராஜெக்ட் ஒர்க் இருக்குனு சொல்லி சமாளிச்சிட்டான். ஸோ.. இன்னிக்கு அங்க தான் ஸ்டே..யே “ என்று என்னைப் பார்த்து கண்ணடித்தாள்.

“ஹேய்...நைட் அங்க இருக்கப் போறியா நீ? “ எனக்கு உண்மையாகவே அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன் பல முறை இந்த மாதிரி பொய்களைச் சொல்லி அவளைக் கூட்டி வந்து ப்ரேமுடன் ஊர் சுற்ற உதவியிருக்கிறேன். ஆனால் இந்த முறை எதோ தப்பாகத் தோன்றியது.

“ ஆமா டா.. ஏன்? “

“ இல்ல.அது...நைட்...ஸ்யூரா?“ வார்த்தை வரவில்லை எனக்கு.

“ டோன்ட் வொரி டார்லிங்க். ஜஸ்ட் ஸ்டேயிங் தான். இப்போதைக்கு எனக்கு குழந்தை பெத்துக்கிற ஐடீயா இல்ல “ என்று சொல்லி கலகலவென சிரித்தாள்.

எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நெருங்கிய தோழிதான் என்றாலும் அவளது காதல் விஷயத்தில் முடிந்த அளவுக்கு விலகியே இருந்தேன்.

‘அப்போ சுஜி கல்யாணம்?” நான் கேட்டேன்.

“அதான் எனக்கும் சேர்த்து நீ போகப் போற“,என்றவள் பலமாக சிரித்தாள்.

“போடி இவளே..எதாவாது சொல்லிடப் போறேன்..அந்த மொக்க ஃபிகர் கல்யாணத்துக்கு அவ்ளோ தூரம் நான் போகனுமா? அவ மூஞ்சிக்கு கல்யாணம் ஒரு கேடு. அதுவும் நான் மட்டும் போகனும். நோ சான்ஸ்“

“ ஹேய் ப்ளீஸ் டா... போ. . அவ அம்மாவுக்கு ஃபோன் பண்ணிட்டா மாடிக்குவோம். நீ போய் எதாவது சமாளிச்சிடு”

“மாட்டிக்குவோம் இல்ல. மாட்டிக்குவ...நீ மட்டும் தான் “

“அய்யே..என்ன யாரு வீட்லருந்து கூட்டிட்டு வந்தாங்களாம்? ரெண்டு பேரும் தான் மாட்டுவோம். ஸோ ஒழுங்கா போயிட்டு வா.. போ டா செல்லம்“ என்று என் முடியைக் கலைத்தாள்.

“சரி..போய் தொலைக்கிறேன்”

“ தேங்க்ஸ் டா ...நிச்சயமா என் பொன்னுக்கு உன் பையன் தான் மாப்பிள்ளை”

“வெறுப்பேத்தாதடி. ஒழுங்கா வா” என்றேன்.

“ ம்ம்மஹ்ம்ம்,,பெரிய இவன்”, முகத்தை சுளித்துக் கொண்டே இயர்ஃபோனை காதில் செருகிக்கொண்டாள்..

காலை நேரமானதால் ரோட்டில் போக்குவரத்து நிரம்பி வழிந்தது. கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெதுவாக ஓட்டிச் சென்றேன். அவள் கண்களை மூடிக் கொண்டு பாடலில் மூழ்கியிருந்தாள்.

ஏனோ என் நினைவுகள் பின்னோக்கிச் செல்லத் தொடங்கின.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.