(Reading time: 7 - 13 minutes)

 பிறந்த நாள் பரிசு - ந.கிருபாகரன்

ரந்து விரிந்து விஸ்தாரமாய் இருப்பதால் தான் கடற்கரைக்கு யாராலும் இன்னும் கட்டு சுவர் எழுப்பி நுழைவு கட்டணம் வாங்கவில்லை. அதனால் தான் என்னவோ சேது கடற்கரையிலேனும் உட்காரமுடிகிறது. இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பது தனக்கு மட்டும் தான் என சில சமுதாய சகதிகள் புரிந்து கொண்டதன் விளைவே தன் நிலையென ஓரெண்ணம். தொண்டை அடைக்கிறது. தனக்கு எதிரே தண்ணீர் இருந்தும் பருக முடியாத அவலம். அந்த ஆண்டவனை மட்டுமே அவனால் சபிக்க முடிகிறது.

குளிர்ந்த காற்று, ஓ யெனும் அலையோசை, கணமான மாலை நேரம் இவற்றில் எங்கும் லயிக்காத மனதோடு சட்டையின் ஓரத்தில் கிழிந்த தன் பாக்கெட்டை தொட்டு பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னை உபயோகப்படுத்தாமலிருக்கும் இவன் சட்டையில் ஓர் அங்கமாய் தன்னை வைத்த டெய்லரை நினத்து சபித்துக் கொண்டிருக்கிறதோ அந்த பாக்கெட் என. உதடோரத்தில் ஒரு ஈனச் சிரிப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்பு கனகராஜ் தைத்த இந்த சட்டைக்கு, தையல் கூலி கொடுக்கவே வக்கில்லை ஆனால் அதற்குள் சட்டையே கிழிந்து விட்டது.

எலும்புகள் நொருங்க என்னைக் காதலி என்னும் விதமாய் சுற்றிலும் அமர்ந்து ஆரத் தழுவிக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள். இதே இடத்தில் சூரியன் ஓங்காரமாய் ஒளி வீசும் நேரத்தில் குடை கூட இல்லாமல் சுடும் மணலில் முகம் முழுக்க வியர்வையோடு, அடிக்கும் அனல் காற்றில் சீதாவோடு சுகமாகவே இருந்த நினைவுகள் அவனை கணமாக தாக்கின. காரணம் அவனின் உள் மூச்சு அவளின் வெளி மூச்சாக இருக்கும் நெருக்கம் வரை அவளை அவன் அருகில் வைத்த கடந்த கால கடற்கரை. அதன் நிகழ்காலத்தில் சேது மட்டும் தனியாக. 

giftகாதலுக்குப் பின் ஆண்கள் பெண்களை காக்க வைப்பதே பொதுவாக வழக்கம் ஆனால் வேலையில்லாத காதலன் சற்றே காக்கட்டும் என அவள் நினைத்து விட்டால் போலும். தனக்கு வேலையிருக்கிறது என அவள் வராமல் போய்விடுவதே நல்லது என எண்ணுகிறான். 

சீதாவின் பிறந்த நாள். அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தாக எழுதிய அறை பக்க கவிதையை சொல்ல நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு ரூபாய் போன் பூத்தில் காத்துக் கொண்டிருந்த அதே கணமான ஒரு உணர்வு தான் இப்போதும் இவன் நெஞ்சை பீடித்துள்ளது. சரியாக பன்னிரண்டு மணிக்கு அவன் தொடுத்த அழைப்பு... அய்யோ பாவம் அந்த போன் அவனை விட ஏழ்மை போலும் அவள் பேசுவதற்குள்ளாகவே அது தன் அழைப்பைத் துண்டித்துக் கொண்டது. அதன் ஏழ்மையை எண்ணி அதை உடைக்க கூட மனம் வராமல் அவனும் அவன் அறைப்பக்க பிறந்த நாள் வாழ்த்தும் வீடு திரும்பியது தான் மிச்சம்.

கல்லூரி காலங்களில் அவளின் வீடேறி குதித்து நள்ளிரவு வாழ்த்து சொல்லியிராமல் இருந்தால் நேற்று அவள் தன் வாழ்த்தை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டாள்தான். அன்று அதை செய்யத் தூண்டிய துணிவு இன்று திருடியேனும் அவளுக்கு பரிசு கொடுக்கும் துணிவைத் தரவில்லை. ஒவ்வொரு பிறந்த நாளும் அவள் பெறும் முதல் வாழ்த்தும் பரிசும் என்னுடையது எனும் கர்வம் இப்போது என்னவோ காணாமல் போய்விட்டது.

சென்ற பிறந்த நாளில் இதே கடற்கரையில் “நீ கொடுக்கும் பரிசுக்காக உன்னைக் காதலிக்க வேசியல்ல நான்” என பேசிய அவளின் வீராவேசமான பேச்சு கூட இந்த பிறந்த நாளில் பரிசின்றி அவளை சந்திக்க இவனுக்கு ஆருதலாய் இல்லை. பணம் பத்தும் செய்யும் ஆனால் பணம் காதல் செய்யாது எனும் அவனின் அழுத்தமான நம்பிக்கையும் தளர்வு கண்டது.

அவனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மேகங்கள், அவன் நிலையை உண்ர்ந்து அவைகளால் முடிந்த, இதை உன் காதலிக்கு பரிசாக கொடு என மழைச்சாரலைத் தான் தூவமுடிந்தது. அவன் பின் கழுத்தில் விழுந்து முதுகுத் தண்டின் மேலே பட்டு கீழே இறங்கிய மழைத்துளி அவனை நிகழ்காலத்தில் பிடித்துத் தள்ளியது.

You might also like - Magizhum maram

சிறு வயதில் அவன் அம்மா வீட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அவள் இருப்பதை உணர்த்தும் அவளின் ஸ்பரிச பரீச்சயத்தின் உணர்வை இப்போது மீண்டும் முழுமையாக உணர்கிறான். சற்றே திரும்பி பார்க்கையில் சீதா.

இருவரும் கடற்கரையில் எழுந்து நடக்கிறார்கள். அவன் அவளிடம் இருந்து சற்றே தள்ளியே நடக்கிறான். ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும் தன் காலை சற்றே உள்வாங்கும் கடற்கரை மணலே, என்னை மொத்தமாக உள்வாங்கிவிடு என்பது போல் இருந்த அவன் முகத்தையும் அவனுக்கும் தனக்குமான இடைவெளியையும் சற்று முறைப்போடு கவனித்த சீதாவின் பார்வை சேதுவை அவளுக்கு அருகில் இழுத்தது. அவள் அவனின் கையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொள்கிறாள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. மேகங்கள் கூட தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டன. அவன் தன் கையை எடுத்து தன் மணிக்கட்டைப் பார்க்கிறான் முதல் முறையாக அவன் அவளின் தோளிள் கைப் போட்டதற்கு “இதெல்லாம் எனக்குப் பிடிக்காது” என்பவலாய் வெடுக்கன தன் கையை எடுக்கையில் அவளின் கூரிய நகங்கள் கீரிய வடு அவன் மணிக்கட்டில் இருந்த்து. இருவருக்குள்ளும் ஒரு மென் புன்னகை. மீண்டும் அவள் அவனின் கையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொள்கிறாள். அவள் தொடுவது அவள் பேச நினைக்கும் ஆயிரமாயிரம் வார்த்தைகளை இவனுக்கு உணர்த்தியது. 

“உஹீம்.. உனக்காக வந்தா மைனர் பேச கூட மாட்டீங்களோ..” என்றாள் சற்றே செல்லமாக. அவள் தன்னை செல்லமாக அழைப்பதைக் கூட கவனிக்காது “ம்.. என்ன பேசறது நீயே சொல்லு” என்றான். அவன் குரல் முழுவதும் இருந்த விரக்தியை அவள் கவனிக்க தவறவில்லை. 

“எதாச்சும் சொல்லுங்களேன்”

அவன் தன் தொண்டையை சற்றே கரகரத்துக் கொண்டான்.

“நான் நேத்து நைட்டு போன் பன்னேன்..” அவன் குரல் தழுதழுத்தது.

“தெரியுமே.. இந்த பொறந்த நாளுக்கும் உங்களோடதுதான்… முதல் பொறந்த நாள் வாழ்த்தும் பரி...” தன் பேச்சை முடிக்காமல் நிறுத்துகிறாள்.

அவன் எதுவும் பேசாமல் நடந்து வருகிறான். தான் அவனை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது அவளை உறுத்த இன்னும் நெருக்கமாக அவன் கையை தன் தோளில் போட்டுக்கொண்டு அவன் தோளிள் சாய்ந்து கொள்கிறாள். அவள் சூடியிருந்த கனகாம்பரத்தின் மணமும் அவள் கேசத்திற்கே உரித்தான மணமும் குழைந்து அவனை வேறு உலகத்திற்கு கொண்டு சென்றன. தன்னை அறியாமல் அவனின் கை அவளின் கேசத்தை துழாவியது. விரல் நுனிகளின் வழியே பட்டை விட மென்மையான அவளின் கேசம் நுழைந்து வளைந்து அவனை கிரக்கத்திற்குள்ளாக்கியது. இவ்வளவு நேரம் அருகில் இருந்தாலும் தூரமாக உணர்ந்து உணர்வு இருவருக்குள்ளும் முழுமையாக மறைந்து மிகவும் நெருக்கமாக உணர்கிறார்கள். சீதா தன் வலது கையால் சேதுவின் இடையைப் பிடித்துக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தவாறே நடக்கிறாள். அவள் பிறந்தநாளில் அவளுக்கு பரிசு கொடுக்க முடியாமல், தன் ஏழ்மை தன்னைப் படுத்திய பாடு அறவே இல்லாத, எவ்வித கணமான உணர்வுகளும் பீடிக்காத மனதோடு அவனும் அவளோடு நடந்து செல்கிறான். “எவள் ஒருவளின் முன்னால் என் ஆன்மா அதன் அழுக்குகளை துறந்து நிர்வாணமாய் உணர்கிறதோ அவளிடம் நான் என்னை முழுமையாய் அர்ப்பணிக்கின்றேன்” என்று அவன் முன்னொரு நாளில் அவளிடம் பேசிய பேச்சின் உணர்வு வழி அனுபவத்தை முழுமையாய் உணர்கிறான். சற்றே நிலா தென்படுகிறது. மேகங்களற்ற தெள்ளத்தெளிவான வானம், கொழுத்த பல்லாயிரம் காதல் ஜோடி விண்மீண்களை மட்டுமே கொண்டுள்ளதாக தோன்றியது.

“வேற யாரும் எனக்கு தர அனுமதியில்லாத ஒரு பொறந்த நாள் பரிசு உன்னால மட்டுந்தான் தர முடியும்..” இதை சொல்லிய உடனே அவள் உதடுகள் துடிக்கின்றன. இருவரின் கைகளும் ஒன்றையொன்று ஆழத் தழுவிக் கொள்கின்றன. சீதாவின் கை விரல்கள் நொறுங்கும் அளவுக்கு சேதுவின் விரல்கள் அவளை அழுத்தின. அவள் தன் கண்களை மூடுகிறாள். 

சேது, தான் ஒரு சமாதியின் அருகில் இருப்பதை உணர்கிறான். சற்று திரும்பி தான் நடந்து வந்த பாதையைப் பார்க்கிறான். அவன் நடந்து வந்த காலடித்தடங்கள் மட்டுமே தென்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைசியாக தன்னோடு பிறந்த நாள் கொண்டாடிய சீதா அவன் நினைவுக்கு வருகிறாள். இவ்வளவு நேரம் தன்னை நடத்திக் கொண்டு வந்த சீதாவின் கல்லறையை ஆரத்தழுவி முகர்ந்து பார்க்கிறான் கனகாம்பரத்தின் மணமும் அவள் கேசத்திற்கே உரித்தான மணமும்..முத்தமிடுகிறான்.. அவன் மட்டுமே அவளுக்கு தரக்கூடிய தரமுடிந்த பிறந்த நாள் பரிசு...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.