(Reading time: 9 - 18 minutes)

னக்கு அப்பாவிடம் அத்தையைப் பற்றி விசாரிக்க ஆசை ஆனால் அம்மாவை ஆபத்தில் மாட்டி விடும்.. அவள் கோவிலுக்குப் போவதும்  தடை செய்யப்பட்டு விடும் என்ற பயம் எனக்கு! உண்மையில், எனக்கு அவ்வளவு துணிவும் இல்லை!

எனக்கு ஒரு  வேலை  கிடைத்ததும்  அம்மாவையும்  கூட்டிக்கொண்டு அந்த வீட்டை விட்டு போய்விடுவேன். என் மனதுக்குள் ஒரு எண்ணம் ஆனால் படித்து வேலை எடுக்க எவ்வளவு காலம் செல்லும்?

கொடியேற்றத்தில் தொடங்கிய அத்தையுடனான சந்திப்பு தேர், தீர்த்தம்,  பூங்காவனம் என்று தொடர்ந்தது. எனக்கும் ஷீலாவுக்கும் இடையே நட்பு பெருகியது. அம்மாவும் அத்தையும் நாங்கள் நெருங்கிப் பழகுவதை கண்டும் காணாத மாதிரி இருந்து விட்டார்கள். அவள்தான் எனக்கு மனைவி என்று தீர்மானித்து விட்டேன், ஆனால் அப்பா என்ன சொல்வாரோ! 

திருவிழா  முடிந்ததும் எப்படி அவளை சந்திப்பது என்பதுதான் எனது எண்ணம்!  

அந்த முருகன்தான் எங்களைச் சேர்த்து வைத்தானோ? ஒரு போதும் எழாத முருக பக்தி என் மனதில் எழத் தொடங்கியது!

அன்று காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழும்புகிறேன்.”நரேந்திரன்! இங்க ஓடி வா” என்று அம்மா கத்துவது கேட்டு ஓடுகிறேன். அப்பா படுக்கை அறையில் நிலத்தில் விழுந்து, இடது நெஞ்சைப்  பிடித்தபடி வலியில் இருக்கிறார்.

அப்பாவுக்க முதலுதவி செய்கிறான் அண்ணா! தொலைபேசியில் ஆம்புலன்ஸை அழைக்கிறேன். 

அப்பாவுக்கு  உடம்பு படபடப்பு, தாங்க முடியாத நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், வேர்வை. பக்கவாதம் அல்லது மாரடைப்பு என்று சந்தேகித்து, அவரை மருத்துவ மனைக்கு கொண்டு போய் விட்டார்கள்.

அவருக்கு பக்கவாதத்துக்கு, சிகிச்சை நடைபெறுகிறது. அறிவு வரும்வரை அவரைப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அம்மா தடுமாறிப் போய் விட்டாள். அவள் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது! "முருகா அவரைக் காப்பாற்று" என்று வேண்டுகிறாள்! 

அப்பாவுக்கு இரவு ஆறு மணிக்கு சிறிது அறிவு வருகிறது. ஏதோ சொல்ல நினைக்கிறார். முடியவில்லை. அவருக்கு இடது கையையும் காலையும் அசைக்க முடியவில்லை, அவரால் பேசமுடியவில்லை. அவரது நிலையைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது! எவ்வளவு  இறுமாப்புடன் இருந்தவருக்கு இப்படியா? 

ஏதோ பேச முயற்சிக்கிறார். அம்மா"என்ன? என்ன?" என்று திரும்பத் திரும்பக் கேட்கிறாள்!“க..ம..  லா..!” என்று தட்டு தடுமாறிச் சொல்லிவிட்டு எங்களைப் பார்க்கிறார். “நரேன் அத்தையை கூட்டிக் கொண்டு வா" என்று அம்மா சொல்கிறாள்.      

அத்தைக்கு இரண்டு அதிர்ச்சி! அண்ணா தன்னை சந்திக்க விரும்புகிறாரா?    அவருக்கு பக்க வாதமா? உடனே விரைகிறாள் மருத்துவ மனைக்கு!

அத்தை வந்திருப்பது அப்பாவுக்குத் தெரியாது அவர் கண்களை மூடியபடி இருக்கிறார். அம்மா அவரைத் தட்டி எழுப்பப் பார்க்கிறாள், முடியவில்லை. அத்தையைப் பார்க்க நினைத்தவருக்கு அவளைப் பார்க்கவும் பேசவும் முடியாமல் போய் விடுமோ? அவர் அவளுக்கு என்ன சொல்ல அழைத்திருப்பார்?

அத்தையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகிறது. அவளுக்கு அவரோடு பேச  முடியவில்லையே என்ற கவலை! அப்பா சிறிது கண்ணைத் திறக்கிறார். அவரால் வாயைத் திறக்க முடியவில்லை! வாயும் ஒரு பக்கம் இழுத்து விட்டது. 

பேச முடியும் போது பேசாமல் வரட்டுப் பிடிவாதத்தால், வருடக்கணக்காக  இருந்துவிட்டு, இப்போது பேச முடியாதபோது இவ்வளவு துடித்து என்ன பலன்? தங்கைப் பாசம் இப்போது எப்படி வந்தது?

அப்பாவுக்கு இப்படி நடக்கும் என்று அம்மா நினைக்கவே இல்லை! கடவுள்மேல் பாரத்தைப் போட்டு விட்டுத் தனது துக்கத்தை எங்களுக்கு காட்டாமல் இருக்கவே அவள் முயற்சி செய்தாள். எவ்வளவுதான் தனது உணர்வுகளை அவள் அடக்கினாலும், அவர் அவளது கணவன்!

கடையில் மளிகைச் சாமான்கள் வாங்குவதிலிருந்து வங்கிக்குச் சென்று காசு எடுப்பதுவரை எல்லாம் அப்பாதான். அப்பாவிடம் பல கிரேடிட் கார்ட்கள், அம்மாவிடம் ஒன்றுகூட இல்லை. அவளுக்கு இப்போது எல்லாவற்றையும் பழக வேணும். வங்கியில் எவ்வளவது காசிருக்கும்?, அப்பாவுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்?, ஏதாவது கடனிருக்குமா?, காப்புறுதி ஏதாவது எடுத்து வைத்திருக்கிறாரா?  சொத்தெல்லாம் யார் பெயரில்? இப்படிப் பல கேள்விகள்!.

அப்பா இவற்றையெல்லாம் முன்னரே யோசித்திருப்பாரா?

அவரிடம்தான் எல்லா அதிகாரமும், அவர் நினைப்பதும் சொல்வதும்தான் சரி, அவர் வைத்ததுதான் சட்டம், அவர்தான் பெரிது, மற்றவர்கள்அவர் சொல்வதைத்தான் கேட்கவேணும்.  

அம்மாவுக்கு வேறு வழியில்லை! அத்தையின் உதவியுடன், அவள் எல்லாவற்றையும் விரைவில் கற்றுவிட்டாள். அப்பா நினைத்ததற்கு எதிர்மாறாக, தன் காலில் நிற்கக் கூடிய நிலையை அடைந்து விட்டாள்.குடும்ப நிதிநிலை நன்றாகவே இருந்தது. அம்மாவுக்கும் சுதந்திரம் கிடைத்தது போன்ற உணர்வு.   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.