(Reading time: 8 - 15 minutes)

ண்ணாடியில் தன் முழு உருவத்தையும் ஒருமுறைப் பார்ந்தாள். மறுமுறை பார்க்கத் தூண்டும் அளவுக்கு அழகாக இருப்பதாகவே பட்டது. அப்படி என்ன என்னை விட அதிரூபசுந்தரி அந்தப் பெண், அவசியம் அவளைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். வெள்ளிக் கிழமை காலை எட்டுமணிக்கே தயாரான மகளை ஆச்சரியத்துடன்  பார்த்தார் அவளது தந்தை பத்மநாபன்.

"என்னாச்சுமா இன்னிக்கு இவ்வளோ சீக்கிரம் கிளம்பிட்டே" என்றார்.

“ஒரு முக்கியமான வேலை இருக்குப்பா போயிட்டு அப்பிடியே ஆபீஸ் போயிடுவேன்" என்றாள்  நிஷிதா. 

வெளியே கார் ஹார்ன் சத்தம் கேட்டது.’ ஒருவேளை வருணாக இருக்குமோ? பெண் பார்க்க காரில் போகிறானோ? சரி அப்பாவுக்கு தெரிந்தால் பிரச்னை. உடனே வெளியே இறங்கிவிட வேண்டியதுதான்’ என்று நினைத்தபடி அவசரமாக செருப்பை மாட்டினாள்.

அப்போது பத்மநாபன் "நிஷிதா ஒரு முக்கியமான விஷயம், மொதல்ல அம்மா படத்துக்கு இந்தப் பூவை மாலையா போட்டுட்டு வா சொல்றேன்” என்றார்.

பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அவர் சொன்னதை செய்துவிட்டு வந்தாள் நிஷிதா. அதற்குள் உள்ளே வந்து  நாற்காலியில் சிலர் உட்கார்ந்திருந்தனர்.

அவர்களை நிமிர்ந்து கூட பாராமல் " அப்பா எனக்கு லேட்டாச்சு, நா வர்றேன் என்றபடி புறப்படப் போனவளை “இரும்மா, இவுங்களுக்கெல்லாம் காபி கலந்து கொடு , அப்புறம் போகலாம்" என்றார்.  

இப்போதுதான் அவர்களைப் பார்த்தாள் நிஷிதா. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் பட்டுச் சேலை மற்றும் பட்டு வேட்டிகளில் ஜொலிக்கும் நகைகளுடன் உட்கார்ந்திருந்தனர். அப்பாவிடம் தணிந்த குரலில் “யாருப்பா இவங்கல்லாம்? நம்ம சொந்தக்காரங்களா?” என்றாள். 

"இல்லம்மா எனக்கு தெரிஞ்சவங்க. உன்னை பெண் பாக்க வந்திருக்காங்க" என்றார் அப்பா.

அதிர்ந்து நின்றாள் நிஷிதா. அவளால் எப்படி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள முடியும்?மனம் முழுக்க அவளது வருண் நிறைந்திருக்கும்போது? ஒருக்காலும் முடியாது. இந்த அப்பா ஏன் அவசரப்பட்டு இப்படி ஒரு காரியத்தை செய்தார்? கலங்கிய  கண்களால் அப்பாவைப் பார்த்து "என்னைக் கேக்காம எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தீங்க? எனக்குக் கல்யாணமே வேண்டாம் நா யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை. ப்ளீஸ் அவுங்களை திரும்பி போயிட சொல்லுங்க” என்றபடி உள்ளே செல்ல திரும்பினாள் நிஷிதா. 

அப்போது  உள்ளே நுழைந்த வருண் "அதாவது என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை. சரிதானே நிஷி" என்றான் .ஒருநிமிடம் நிஷிதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“வருண்...நீங்க என்ன சொல்றீங்க? நீங்க வேற எங்கேயோ பெண் பாக்கப் போறதா  தான சொன்னீங்க?”

“அது சும்மா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னுதான் சொன்னேன்  நிஷிதா. உன்னை பிரிஞ்சு போன அந்த பத்துநாள்ல நா எப்படி தவிச்சுப்  போயிட்டேன்னு தெரியுமா? சாப்பிட முடியாம தூங்க முடியாம சதா உன் ஞாபகம் தான். நீ இல்லாம வாழ முடியாதுன்னே முடிவுக்கு வந்துட்டேன்.  உன்கிட்ட சொல்லி உன் விருப்பத்தை தெரிஞ்சுக்கதான் அன்னிக்கு ஆபீசுக்கு வந்தேன். என்னைப் பாத்ததும் கலங்கிய உன் கண்ணீர் துளிகள் நீ சொல்லாமலே உன் மனசை எனக்கு புரிய வைத்தன. அதான் உனக்குத் தெரியாமலேயே அங்கிள் கிட்டேயும் எங்க வீட்டுலேயும் சொல்லி சம்மதம் வாங்கினேன். இப்போ உனக்கு சந்தோஷம் தானே? இதோ இவுங்க தான் எங்க அப்பா அம்மா, இவுங்க என் அக்காவும் மாமாவும்" என்று அறிமுகப் படுத்தினான் வருண்.

"எங்களுக்கு இப்போவாவது காபி கிடைக்குமான்னு கேட்டு சொல்லுப்பா வருண்" என்று அவனது அக்கா சிரித்துக் கொண்டே கேட்க வெட்கத்துடன் அவர்களுக்கு காபி எடுத்துவர உள்ளே ஓடினாள் நிஷிதா. சந்தோஷ சிரிப்பலை அந்த அறை முழுக்கப் பரவியது.

 

This is entry #50 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை...

எழுத்தாளர் - K.சௌந்தர்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.