(Reading time: 18 - 36 minutes)

ஜோதியே தொடர்ந்து பேசினாள். “நீ அவரை மட்டும் தண்டிக்கவில்லை. உன்னையும் வருத்திக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே. நீ செய்யும் இந்த செயலால் யாருக்கு என்ன நன்மை என்பதை எண்ணிப் பார். அம்மாவும் வருந்துகிறார். இதை எல்லாம் ஏன் நீ யோசித்து பார்க்க மறுக்கிறாய”; என்றாள்.

“அக்கா நீ கூறுபவை எல்லாம் எனக்கு தெரியாமல் இல்லை. எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால் நீ என்னையும் சிறிது புரிந்து கொள்ள முயற்சி செய். எனக்கு அப்பாவிடம் பேச கூடாது என்றெல்லாம் எந்த எண்ணமும் இல்லை. ஆனால் என்னால் அவரிடம் சரியாக பேச இயலவில்லை. நான் என்ன செய்வது அக்கா” என வினவினாள் தங்கை.

“இப்படி சொன்னால் என்னடி செய்வது. ஊருக்கே கவுன்சிலிங் செய்யும் உன்னை வேறு எங்காவது தான் கவுன்சிலிங் கொடுக்க அழைத்து செல்ல வேண்டும் போல” என்றாள் தமக்கை.

“அவரிடம் சகஜமாக பேச முயற்சி செய் இனியா. நீ அப்பாவிடம் நார்மலாக பேசினால் தான் இந்த வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை நீ நினைவில் வைத்துக் கொள். கூடிய விரைவில் எல்லாம் சரியாகி விடும”; என்றாள்.

“அக்கா நிஜமாகவே நீ நன்றாக கவுன்சிலிங் செய்கிறாய். நீயும் வேண்டுமானால் என்னுடன் சேர்ந்து விடு” என்றாள் இனியா.

“பேச்சை மாற்றுவதற்கு உன்னிடன் தான் கற்றுக் கொள்ள வேண்டுமென அம்மா கூறுவார்கள். அது எவ்வளவு நிஜம் என்று நான் இப்போது தான் தெரிந்து கொள்கிறேன்.”

“சரி அக்கா நீ சொன்னதை நான் மனதில் வைத்துக் கொள்கிறேன். அப்படி இருப்பதற்கு முயற்சி செய்கிறேன் போதுமா?”

தற்குள் கீழே இனியாவின் தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜகோபால், “இனியா என்னை என்று தான் மன்னிப்பாள் லட்சுமி.”

“ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள். அவள் ஏன் உங்களை மன்னிக்க வேண்டும். நீ;ங்கள் அவளிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை.”

“இல்லை லட்சுமி. நீ பெரிய மனது இருப்பதால் இவ்வாறு கூறுகிறாய். நான் எந்த அளவு செய்துள்ளேன் என்று எனக்கு தெரியுமல்லவா? ஆதனால் தான் என் மனம் என்னை குத்துகிறது. அந்த குற்ற உணர்ச்சி எனக்கு என்று போகும் என்றே தெரியவில்லை.”

“உனக்கு தெரியுமா லட்சுமி ஜோதியின் திருமணத்தின் போது மாப்பிள்ளை நல்லவராக இருக்க வேண்டும் என்று நான் எந்த அளவு கடவுளிடம் வேண்டினேன் தெரியுமா? பெண்ணை பெற்ற எல்லா பெற்றோருக்கும் இந்த எண்ணம் இருக்குமல்லவா? உன் பெற்றோரும் இவ்வாறு தானே எண்ணியிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு நான் நடந்து கொள்ளவில்லை அல்லவா” என வருந்தினார்.

லட்சுமி அவருக்கு ஏதோ சமாதானம் கூறிக் கொண்டு இருந்தார்.

மாடி படிகளில் நின்று கொண்டு இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இனியாவிற்கு கொஞ்சம் மனம் திருப்தியாக இருந்தது.

தந்தையை நாம் அதிகமாக வருத்தப்பட வைக்கிறோமா என்று அவளுக்கும் வருத்தமாகவே இருந்தது.

கீழே சென்ற இனியா பெற்றோரை பார்த்து “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஏதாவது உங்களை டிஸ்டர்ப் செய்து விட்டேனா எனக் கேட்டாள்.”

ராஜகோபாலுக்கு மகிழ்ச்சியாக “இல்லைம்மா நீ போய் எங்களுக்கு தொந்தரவு என்று நாங்கள் எண்ணுவோமா என்றார்.”

“ஆனால் அம்மா ஒன்றும் சொல்லவில்லையே அப்பா. ஒருவேளை நான் அம்மாவிற்கு இடைஞ்சலாக இருக்கிறேனோ” எனக் கேட்டாள்.

“என்னடி இன்று உனக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? என்னிடம் வம்பு வளர்க்கிறாய்” என்றார் லட்சுமி.

“பார்த்தீங்களாப்பா, அம்மா அப்பவும் அப்படியெல்லாம் இல்லை என சொல்லவில்லை. அப்படியென்றால் என்ன அர்த்தம் நான் உங்களை தொந்தரவு பண்ணிட்டேனு தானே அர்த்தம்” என்றாள் மீண்டும்.

இந்த முறை ராஜகோபால் தலையிடும் முன்பே லட்சுமியே இடைபுகுந்து “அவ்வாறெல்லாம் இல்லை, போதுமா” எனக் கூறினார்.

“ம் இப்ப சரி எனக் கூறி இனியா சிறித்தாள்.”

வள் தந்தைக்கு இனியாவின் இந்த செயலே போதுமானதாக இருந்தது. அவர் முகமெல்லாம் சிரிப்பாக இருந்தது. அதை பார்த்த அவர் தாயின் முகமும் பிரகாசித்தது. இனியாவிற்கும் இதை எல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் இந்த நிகழ்வை இன்னும் மகிழ்வாக்க விரும்பினாள். என்ன செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே அபிக்குட்டி அங்கு வந்து சேர்ந்தாள்.

இனியா அபியிடம் “அபி உனக்கு ஐஸ்கிரீம் வேண்டுமா” எனக் கேட்டாள்.

“ஆமா சித்தி எனக்கு ஐஸ்கிரீம் வேணும்.”

“சரி அப்ப தாத்தாவை கிளம்ப சொல்லு. நாம மூணு பேரும் கடைக்கு போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவோம்.”

அதற்குள் ராஜகோபால் “நிஜமாகவா இனியா” எனக் கேட்டார்.

“அபி தாத்தா கிளம்பாம ஏன் பேசிட்டிருக்காங்கனு கேளுடா செல்லம்.”

அபி, “தாத்தா போய் கிளம்புங்க தாத்தா, ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரலாமென்று அவரை துரத்தினாள்”

அவரும் சரியென்று சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக எழுந்து சென்றார்.

“ஐ ஐ ஐஸ்கிரீம் சாப்பிட போறேன்” என குதித்துக் கொண்டே அபி வீட்டையே சுற்றி வந்தாள்.

அபியின் சத்தத்தை கேட்டுக் கொண்டே வந்த ஜோதி ஐஸ்கிரீமை பற்றிக் கேட்டுவிட்டு “ஐஸ்கிரீம் எல்லாம் வேண்டாம். உனக்கு யார் ஐஸ்கிரீம் வாங்கி தரேன்னு சொன்னது” எனக் கேட்டாள்.

இடையில் புகுந்த லட்சுமி, “விடு ஜோதி இன்று ஒருநாள் சாப்பிட்டு போகட்டும்” என்றார்.

“அம்மா அதெல்லாம் முடியாது.  அவ தினமும் இப்படி தான் எப்படியாவது யாரையாவது ஏமாற்றி ஐஸ்கிரீம் சாப்பிடறா” எனக் கூறினாள்.

லட்சுமி “இனியா தான் ஐஸ்கிரீம் பற்றி ஆரம்பித்தா, இனியா, அபி, உங்க அப்பா மூன்று பேரும் போய் வாங்கிட்டு வர போறாங்களாம். இதுக்கு மேலயும் ஏதாவது சொல்ல போறியா” எனக் கேட்டார்.

இல்லையென தலையசைத்தாள் ஜோதி.

மூவரும் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்து அனைவரும் சாப்பிட்டனர். அதற்குள் பாலுவும் வந்திருந்தான். அனைவரின் மனமும் நிறைவாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.