(Reading time: 12 - 24 minutes)

ன் மனோ?  அதுதான் நீ சொன்னியே அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு சந்தோஷமா இருக்கான்னு அப்புறம் என்ன ? என்றாள் தன் வளையல்களுடன் விளையாடியபடியே

'ஆமாமாம். நான் சொன்னதும் நீ அதை அப்படியே நம்பிட்டே பாரு.

'நிஜமாவே அவன் உனக்காகத்தான் காத்திருக்கான்னு உனக்கு புரியவேயில்லையா அர்ச்சனா'? சற்று கோபமேறிய குரலில் கேட்டான் மனோ.

பதில் சொல்லவில்லை அவள்.

'புரியாமலா இருக்கிறது?  ஒரு வேளை மனோ சொன்னது உண்மையாக இருக்குமோ என்று முதலில் அவள் நினைத்திருந்த போதிலும், ஒவ்வொரு முறை வசந்தின் கண்களை சந்திக்கும் போதும், அவை இரண்டும் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு தானே இருக்கிறது.

காரின் கியரை குறைத்த படியே ,திரும்பி அவள் முகத்தை திரும்பிப்பார்த்து நிதானமான குரலில் கேட்டான் மனோ,

'நீ அவனை விட்டு போனதும் அவனுக்கு என்ன நடந்ததுன்னு உனக்கு ஏதாவது தெரியுமா?

'ஏன் மனோ என்னாச்சு?' திடுக்கிட்டு திரும்பினாள் அர்ச்சனா

சில நொடி மௌனத்திற்கு பிறகு சொன்னான் மனோ ' நீ உன் வாழ்கையை பத்தின பெரிய முடிவை எடுக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை அவன் கிட்டே மனசு விட்டு பேசு. உனக்கே எல்லாம் புரியும்.'

'அதுக்கில்லை மனோ........'

'ப்ளீஸ் அர்ச்சனா'. வேற எதுக்காக இல்லைனாலும் எனக்காக அவன்கிட்டே ஒரே ஒரு தடவை பேசு. அவ்வளவுதான் என்னாலே சொல்ல முடியும்' என்று மனோ சொன்னபோது கார் அவன் வீட்டுக்கேட்டின் முன்னால் சென்று நின்றிருந்தது.

டுக்கையில் சென்று விழுந்தாள் அர்ச்சனா. மனோவின் வார்த்தைகள் அவள் மனதைச்சுற்றிகொண்டிருந்த நிலையில் ஒலித்தது அவள் கைப்பேசி

'அப்பா' என்று ஒளிர்ந்தது திரை.

நீ பெங்களூர் போய் சேர்ந்திட்டியா அர்ச்சனா?

'வந்திட்டேன் பா' என்றவள் நீங்க இன்னும் தூங்கலியாபா? என்றாள்  

'தூக்கம் வரலைம்மா. என்னமோ மனசு சரியில்லை'

'ஏன்பா? கவலை தோய்ந்த குரலில் கேட்டாள் அர்ச்சனா.

'எல்லாரும் சேர்ந்து உன்னையும்,என்னையும் பிரிச்சிடுவாங்களோன்னு பயம்மா இருக்குமா?

'எல்லாரும்னா யாருப்பா? யார் என்ன சொன்னங்க உங்ககிட்டே?

'எல்லாரும்னா எல்லாரும்தான். மனோல ஆரம்பிச்சு எல்லாரும்தான்'

திடுக்கென்றது அர்ச்சனாவுக்கு.

மனோ என்ன சொன்னானோ,? அப்பா என்ன புரிந்துக்கொண்டாரோ?

'இல்லைப்பா. அது......'

'அவளை பேசவிடாமல் சொன்னார் அப்பா 'அப்பா, உன்னை ரொம்ப நம்பறேன்மா. பார்த்து நடந்துக்கோ. அவ்வளவுதான். நான் வெச்சிடறேன்.'

ஆயிற்று. அன்றிரவுக்கான தூக்கம் மொத்தமாய் காணமல் போயிருந்தது அர்ச்சனாவுக்கு.

பெங்களூரின் காலைப்பொழுது பனிமூட்டதுடன் கவிதையாய் விடிந்திருந்தது.

அதை ரசிக்க கூட மனமில்லாமல் அலுவலகத்துக்கு கிளம்பி விட்டிருந்தாள் அர்ச்சனா.

தன் காரிலிருந்து மூன்றாவது முறையாய் ஒலிப்பானை அழுத்திவிட்டிருந்தான் வசந்த்

மெல்ல படியிறங்கினாள் அர்ச்சனா.

'அப்பா உன்னை ரொம்ப நம்பறேன்மா' அவள் மனதிற்குள் அந்த வார்த்தைகள் ஓடிக்கொண்டே இருந்தன. சாவிக்கொடுக்கப்பட்ட பொம்மையாய் நடந்தாள் அர்ச்சனா.

வசந்தின் காருக்கு அருகில் வந்தவள் 'இனிமேல் நான் ஆட்டோவிலே போய்க்கிறேன். நீ எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். என்றாள் நிதானமாய்.

எதுவுமே புரியவில்லை வசந்துக்கு.'

சட்டென காரிலிருந்து இறங்கினான்  'திடீர்னு என்னாச்சு உனக்கு?'

'ப்ளீஸ் வசந்த். வேண்டாம்னா விட்டுடு. நான் கிளம்பறேன் நடந்தாள் அர்ச்சனா.

எங்கிருந்தானோ'? சட்டென்று அங்கே வந்து நின்றான் மனோ.

'என்னாச்சுடா இவளுக்கு' என்றான் வசந்த் நடந்து செல்பவளை பார்த்தப்படியே.

'ம்'? என்றவன் 'அவ அப்பா ஏதாவது செண்டிமெண்ட் ஸீன் போட்டிருப்பாரு. அதான் ' என்று நேற்று சென்னையில் நடந்தது எல்லாவற்றையும் அவனிடம் விளக்கினான் மனோ.

ரண்டு நாட்கள் கடந்திருந்தது. வசந்துடன் காரில் செல்வதையும், அவனுடன் தேவையில்லாமல் பேசுவதையும் மொத்தமாய் தவிர்த்துவிட்டிருந்தாள் அர்ச்சனா.

அன்று காலை அர்ச்சனா அலுவலகத்துக்கு வந்து அவள் இருக்கையில் அமர்ந்த போது வந்தது அந்த செய்தி.

'வசந்துக்கு பதவி உயர்வு'

அதை கேள்விப்பட்டவுடன் அந்த நிமிடத்தில் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டவளாய் அப்படியே மகிழ்ந்துப்போனாள் அர்ச்சனா. அவளேயறியாமல் அவளுக்குள்ளே அத்தனை உற்சாகம் பொங்கியது.

வசந்த் இன்னும் வந்திருக்கவில்லை .அவனிடம் அதை இப்போதே சொல்ல வேண்டுமே. தவித்தது அவள் உள்ளம்.

அப்போதுதான் உரைத்தது 'அவன் கைப்பேசி எண் கூட அவளிடம் 'இல்லை. வாங்கிக்கொள்ளவே இல்லையே.

அவள் இடத்தில் உட்கார்ந்தபடியே ஜன்னல் வழியே கார் நிறுத்துமிடத்தை பார்க்க முடியும்.

வசந்தின் கார் வருகிறதா? அவள் திரும்பி பார்த்த நிமிடத்தில் வந்து நின்றது அவன் கார்.

திடீரென்று குழந்தையாய் மாறிப்போனவளாய், மின்தூக்கிகாகக்கூட காத்திராமல், படிகளில் இறங்கி ஓடி, கிட்டத்தட்ட அவன் மேல் மோதிக்கொள்வது போல் நின்றபோது........

'ஹேய்... என்னாச்சுடா இப்படி ஓடி வரே?

அவன் முகத்தைப்பார்த்த நொடியில் அவளை சட்டென பிடித்து நிறுத்தியது அவள் மனதிற்குள் ஒலித்த அப்பாவின் வார்த்தைகள். அவள் உற்சாகம் அப்படியே கரைந்து விட்டிருந்தது.

அப்படியே நின்று விட்டாள் அர்ச்சனா.

அடுத்த சில நொடிகளுக்குள் 'கங்ராஜூலேஷன்ஸ் வசந்த்' கைகுலுக்கலுடன் ஒரு சக ஊழியர் விஷயத்தை உடைத்து விட்டிருந்தார்.

அவருடன் கை குலுக்கியப்படியே அவளைபார்த்தான் வசந்த். 'இதற்குதான் இப்படி ஓடி வந்தாயா?

அவர் நகர்ந்தவுடன் ' கங்க்ராட்ஸ் வசந்த்' மெலிதான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.

தன் இருக்கையில் வந்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தாள் அர்ச்சனா. அப்பாவின் வார்த்தைகள் அழுத்தின,.

'ஏன் இப்படி தடுமாறுகிறேன்? 'என் அப்பாவிற்காக என் மனதைக்கூட கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதா என்னால்?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.