(Reading time: 43 - 85 minutes)

31. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ன்பமோ துன்பமோ காலம் நதி போல ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.....நாமும் அதன் ஓட்டத்திலே பயணிக்கிறோம்......உலகமே பனிக்கட்டியாய் உறைந்து உயிரினங்கள் பல சுவடே இல்லாமல் செத்து மடிந்த ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் கூட நம்பிக்கையுடன் போராடி உயிர் வாழ்ந்தது மனித இனம்!

ஜனனத்தில் ஆரம்பிக்கும் போராட்டம்..... எந்த நொடியில் இயற்கை வெற்றி கொள்கிறதோ அப்போது மரணம்! செல்வி சந்தியா திருமதி கார்த்திக்காக மாற முழு மனதாக ஒத்துக் கொண்டதும் ஒரு ஜனனத்தின் போராட்டத்தை கண்ட பின்  தான்.....

விபத்திற்கு பின் சில வாரங்களில் தோள்பட்டை கட்டுக்கள் அகற்றப் பட, சந்தியா – கார்த்திக் திருமண நிச்சயம் நடத்த முடிவு செய்தனர் பெற்றோர்கள்.... அப்பொழுதே திருமண தேதியும் ஆலோசித்தனர். கடத்தல் சம்பவத்திற்கு பின் மிகவும் பயந்து போயிருந்தார் தன்ராஜ்.

பூமா பிரசவத்திற்கு செல்லும் முன் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று தன்ராஜ்ஜூம், தன் உடல்நிலை நன்றாக இருக்கும் பொழுதே மகனின் திருமணத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் சதாசிவமும், அடுத்த முகூர்த்தத்திலே திருமணத்தை நடத்த நாள் குறித்தனர்...

திருமண நாளை குறித்துக் கொண்டு தன்ராஜ் மகளிடம் கேட்டார். கார்த்திக் கேட்கும் போதெல்லாம் பூமாவால் இப்பொழுது வர முடியாது. அதனால் அடுத்த வருடம் என்பாள். ஆனால், இப்பொழுதோ அப்பாவிடம் சரியென்றாள்! அவனுக்காக!!! சதாசிவம் கார்த்திக்கிடம் கேட்டார். வேண்டாம் என்றான்! அவளுக்காக!!!

ஒரு நல்ல நாளில் எளிய முறையில் நிச்சயம் மட்டும் நடந்தது! திருமண தேதி குறிக்கப் படாமல்... ஏன் என்று கேட்டாள் அவனிடம்.... “நீ மட்டும் என் பேயா இருந்தா, இந்த நேரம் என் மனைவியாகி இருப்ப” என்றான்... அவன் சொன்னதில் சிரித்தாள்... “ஏன் கார்த்திக்...நான் இப்போதும் பேய்  தான்...” என்றாள் பயமுறுத்தும் பாவனையில்...

கைகளை குறுக்காக கட்டி அவளை ஊடுருவி பார்த்தவன், ”உன் உதட்டுக் காயம் ஒரு வாரத்திலே ஆறி விட்டது”, என்றான் உணர்ச்சியற்ற குரலில்.... அவளிதழ்களை தன் கன்னத்திலாவது பதிக்கட்டாளா என்ற ஏக்கம் அவன் கண்களில் வெளிப்பட்டது! ‘நாமாக   அவனை நெருங்கவே இல்லையே’ என்பது அதன் பின் தான் அவளுக்கு உரைத்தது!  

அவன் அருகாமையில், அன்பில், அணைப்பில், சிறு சேட்டைகளில், செல்லப் பெயரிட்டு கொடுக்கும் மென்மையான முத்தங்களில் சந்தோஷத்தில் திளைப்பாள்....ஆனால், அவன் அகன்ற பின் மனதிற்குள் மீண்டும் கவலை சூழ்ந்து கொள்ளும்.... தனிமையில் இருக்கும் பொழுது....ஒவ்வொரு நாளும் குளிக்கும் பொழுது...அழுவாள்...ஏன் என்று தெரியாது.... காயங்கள் ஆறியது விரைவில்...ஆனால் கவலை! அவளால் அந்த சம்பவத்திலிருந்து வெளிவர முடியவில்லை...  அதே நேரம் கார்த்திக்குடன் இருக்கும் தருணங்களை தன் வருத்தத்தை காட்டி வீணடிக்க விரும்பவில்லை... ஆனால் அவளின் சிறு சிறு அசைவுகளையும் உள்வாங்குபவன் அதை அறிந்தான்...

கார்த்திக்கின்  பார்வைக்கு பதில் சொல்ல இயலாமல், அவன் மார்பில் புதைந்து வெகு நேரம் அழுதாள்...ஆயிரம் சமாதானம் சொன்னான்.....இதமாக இருந்தது! கிண்டலடித்து சீண்டி சிரிக்க வைத்தான்....சிரித்தாள்... பாடினான்....ரசித்தாள்..... இதயம் லேசானது அவளுக்கு....

ஆனால் அவனுக்கு மனம் கனத்தது.... அவள் வலியை அவன் உள்வாங்கினான்... அவளை விபத்தில் பார்த்த காட்சி ஆழ்மனதில் அழியாத் தடமாய் பதிந்து போயிற்று....’எல்லாருக்கும் நல்லது செய்வாள்...அவளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? அன்று கோவிலில் ஒழுங்காக வழிபட்டு இருந்தால் இந்த கஷ்டம் வந்திருக்காதோ! ஒரு பத்து நிமிடம் முன்னர் தேடி இருந்தால் இதை தவிர்த்து இருந்திருக்கலாமே! அன்று அவளுடன் துணைக்கு சென்றிருக்கலாமே!’ என்னன்னமோ யோசித்தவன், பின் அவள் மனது மாறினால் மொட்டையடிப்பதாக சிங்காரவேலனிடம் வேண்டிக் கொண்டான்...

சந்தியா இயல்பு நிலைக்கு வர தன்னால் ஆன முயற்சிகளை செய்தான். அலுவலகத்திற்கு வரவிடாமல் அவளை அன்பு இல்லத்திற்கு செல்ல வைத்தான்.... சௌபர்ணிகாவுடன் சேர்ந்து  நடத்த திட்டமிட்டு, பின்னர் கைவிடப்பட்ட ஓவிய கண்காட்சியை மீண்டும் நடத்த ஊக்குவித்தான். கண்காட்சியில் கார்த்திக் எடுத்த புகைப்படங்களும் இடம் பெற்றது. வெற்றிகரமாக நடத்தி முடித்தாள். கூண்டுக்குள் தன்னை ஒளித்து கொண்டவள்  சிறிது சிறிதாக வெளியில் வந்தாள்.

தோழி சக்தியின் திருமண நாள் நெருங்க நெருங்க பிரியப் போகும் வருத்தம் இருவருக்கும்! அதனால் அவளுடனே அதிக நேரம் செலவிட, இவர்களைப் பிரித்து தங்களுக்கு தனிமையை உருவாக்கினான் கார்த்திக்....

க்தியின் திருமணத்தன்று இரவு, எம்.எஸ். க்கு சந்தியாவை மறுபடியும் கடத்தப்பட்டு விட்டதாக  கார்த்திக்கிடம் இருந்து செய்தி வர, திடுக்கிட்ட அவர்  உடனடியாக கிளம்ப, கூடவே சக்தியும் பதறி கொண்டு வந்தாள்.... கார்த்திக்கின் வீட்டிற்கு வந்த பின் தான் சந்தியா தலைமையில் நண்பர்கள் சேர்ந்து செய்த கலாட்டா என்று! இருவரையும் இரவோடு இரவாக தேனிலவிற்கு அனுப்பி வைத்தனர்....

இதற்கிடையில் நிரஞ்சன் வீட்டிற்கு சென்ற மது, பிந்தியாவின் அரவணைப்பில் நிரஞ்சனின் காதலில் மனதிலிருந்த பயம் நீங்கியிருந்தது! அங்கு தங்குவதற்கு பக்குவப்பட்டு இருந்தது அவள் மனம்!

சக்தியின்  திருமணத்திற்கு வந்த மதுவிடம், சௌபர்ணிகா இனி அவள் நிரஞ்சன் மனைவியாக தான் மலேசியா செல்ல வேண்டும் என்று உறுதியாய் சொல்லி விட்டார். மதுவும் எந்த தயக்கமும் இன்றி  திருமணத்திற்கு சம்மதித்தாள். சதாசிவத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சி! அவரும் சௌபர்ணிகாவும் சந்தியாவின் முயற்சியன்றி மதுவின் திருமணம் இவ்வளவு எளிதில் கை கூடி இருக்காது என்று முழுமையாக நம்பினர். அவளிடம் நன்றிகளை தெரிவித்ததோடு, திருமணம் முடியும் வரை அவர்களுடனே தங்கி, மீராவுடன் சேர்ந்து திருமண வேலைகளை முன்னின்று நடத்த வேண்டும் என்றும் சொல்லி விட்டனர்.  

தடபுடலாக மதுவின் திருமண ஏற்பாடு நடந்தது. ஒரு வாரத்திற்கு முன்பே சந்தியா கார்த்திக்கின் வீட்டிற்கு வந்து விட்டாள். சௌபர்ணிகாவின் கண்காணிப்பில் இருந்த சந்தியாவை, அவர் கண்ணில் மண்ணை தூவி தினமும் ஒரு முறையாவது தன் தோள்களுக்குள் சிறை பிடித்து செல்லமாய் சைவ முத்தமிட்டு செல்வான் கார்த்திக். மற்றவர்கள் முன்னிலையில் தன் பார்வைக்குள் சிறை பிடித்து, செல்லமாய் சீண்டிச் செல்வான்.  ஆனால், இன்னும் அவளாக அவனைத் தேடவில்லை! அதை அவனும் உணர்ந்தான்.

அதே சமயம் பூமாவுக்கு அதிக ஓய்வு தேவைப்பட உதவிக்கு லக்ஷ்மி  மட்டும் உடனடியாக அமெரிக்கா புறப்பட்டார். தன்ராஜ்ஜூம், சந்தியாவும் இன்னும் சில மாதங்கள் கழித்து செல்வதாக இருந்தது!

மதுவின் திருமணத்தன்று கார்த்திக்கின் கிண்டலுக்கு பயந்து சேலை உடுத்தாமல் கை வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த  தாவணியை உடுத்தினாள். அது அவனை புரட்டி போடும் என்று அறியாமல்! அவள் அருகில் வரும் பொழுதெல்லாம் “இஞ்சி இடுப்பழகி” பாட்டை முணுமுணுத்தான். தன்ராஜ்ஜிடம் பொறுப்பான மருமகன் போல காட்டிக் கொண்டான்.

து திருமணம் விமரிசையாக நடந்து முடிந்தது! மதுவும் நிருவும் காதலில் கனிந்து இல்லற வாழ்க்கையை துவங்குவதில் ஆர்வமாய் இருந்தனர். அவர்களுக்கு முதல் இரவு அறையை சந்தியாவும், மீராவும் தயார் செய்ய, வேண்டுமென்றே நிக்கியை கில்லி அழ வைத்து மீராவை சாமர்த்தியமாக அந்த அறையை விட்டு கிளப்பி, சந்தியாவிடம் வந்தான் கார்த்திக். அந்த அறையில் தன்னவள் இருப்பது அவன் உணர்வுகளைத் தூண்டியது.

“யேய்...ரோமியோ இங்க எதற்கு வந்த?”, என்றாள் அருகில் வந்தவனின் பார்வையின் நோக்கத்தை அறிந்தவாறு.

“தயவு செய்து இப்பிடி கிளுகிளுப்பா உடுத்தாதம்மா...” என்று சொல்லிக் கொண்டே கட்டி கொள்ள போகிறவளை கட்டி அணைத்து கொண்டான். ரோஜா இதழ்கள் படுக்கையை  அலங்கரிக்க, மல்லிகை தோரணம் கட்டிலை சுற்றி கட்டப்பட்டிருக்க அந்த ரம்யமான சூழல் இருவரையும் கிறங்கடித்தது! அவன் அணைப்பில் சொக்கி போய் கண்களை மூடிக் கொண்டாள். எப்பொழுதும் போல் இதமாய் கன்னத்திலோ, நெற்றியிலோ முத்தமிட்டு செல்பவன், அன்று அதோடு நிறுத்தாமல்,

”மை ஏஞ்ஜி” என அவன் அவள் இதழ்களை நெருங்க படக்கென முழித்தவள் தனது விரல்களால் தடுத்தாள் “ப்ளீஸ்...வேண்டாம்...நான்...இது...எச்...சுத்தமானது இல்லை..” என்றாள் திக்கி திணறி தேய்ந்த குரலில் கலக்கத்துடன்...  எப்பொழுதும் அவள் வருத்தம் அவன் சினத்தை வெல்லும்... அன்றோ தலைகீழ்....

”உனக்கு என்ன பைத்தியமா?....சை” கோபத்தில் அவளை உதறி இரண்டு எட்டு வைத்தவன், மனது கேட்காமல், சோர்ந்து கட்டிலில் உட்காரப் போனவளை வந்து அணைத்துக் அவளது கழுத்துக்குள் முகம் புதைத்தான்...

”சீக்கிரம் அமெரிக்காவுக்கு கிளம்பு” என்றான் மெல்லிய குரலில்... புரியாமல் அவனை திரும்பி பார்த்தாள்....., “இடமாற்றம் மனமாற்றம் தரும்...இல்ல.... தரலாம்” என்றான் கவலையுடன். சொன்னவன் அதோடு நிற்காமல் தன்ராஜிடம் பேசி அவருடன் அந்த வார இறுதியிலே அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தான்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் முன்  தன்ராஜ்ஜே  அவர்கள் தனியாக பேச வாய்ப்பு அளித்து, செக்கின் செய்ய சென்று விட்டார்.

விமான நிலையத்தில், அவள் கரத்தைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு  எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதே ஏக்கம் தாங்கிய விழிகள்! ஆனால், சந்தியாவின் மனதோ  அன்று கடல்காற்றில், நிலவொளியில் அவனுக்கு தந்த முத்தங்களை புதிப்பிக்க முன் வரவில்லை.  ‘எச்சில் பொருளை என்னவனுக்கு எப்படி கொடுப்பேன்’, என்ற தயக்கம் அவளை பின்வாங்க வைத்தது! தன் இயலாமையை நினைத்து பார்வையை தாழ்த்தி கண் கலங்கினாள். அவள் முகவாயைப் பற்றி, கன்னத்தை கிள்ளிய கார்த்திக்,

“ஹே... உங்க பூமாக்காவுக்கு பெண் குழந்தை பிறந்தால் கிஸ் பண்ணுவேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்க! அதுவரைக்கும் வெயிட் பண்றேன்”, என்றான் கண்களை சிமிட்டி. அவன் குறும்பு அவளை தொற்றி கொள்ள,

“பையன் பிறந்தால்???” என்று கண்களால் சிரித்தாள்.

அதற்கு பதில் சொல்லாமல் அவளை தனக்குள் இழுத்து போர்த்திக்  கொண்டவன், “எந்த குழந்தை பிறந்தாலும், உனக்கு எப்போ விருப்பமோ அப்போ கொடு! போதும்!”, என்று அவள் கேசத்தை கோதி, அவள் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தான். அவள் உருவம்  அவன் விழியில் இருந்து மறைந்ததும் கண்ணீர் திரை போட்டது!

பின், கார்த்திக் அன்பு இல்லத்திற்கு திறம் வாய்ந்த ஆசிரியர்களை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தான். அவன் கனவு மென்பொருள் மிகச்சிறப்பாக உருவாகி இருந்தது.  அதனை ஒட்டு மொத்தமாக உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்றிற்கு விற்று விட்டு, அவனது பங்கிற்கு வந்த தொகையை முழு மனதோடு சந்தியாவின் ஆர்ம்ஸ் பவுண்டேஷனுக்கு நன்கொடையாய் கொடுத்து விட்டான் அவளுக்கு தெரியாமல் வேறொரு நண்பன் மூலம். அவன் இதற்கு முன் கொடுத்ததை விட பல மடங்கு மக்களுக்கு பசியாற்ற போகிறது!

காரியத்திற்காக தானம் செய்ததால்  தான் சந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற உறுத்தல் நிவர்த்தியான திருப்தி....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.