(Reading time: 43 - 85 minutes)

ஓராண்டிற்கு பின்னர்....

மே 13, இரவு மணி பன்னிரெண்டு பத்து:

பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என வீட்டில் அனைவரும் வாழ்த்து தெரிவிக்க நன்றி கூறி விட்டு படுக்க வந்தாள் சந்தியா தோழிகளுடன்...அவளுக்கு வலது புறம் நிறை மாத நிலாவாய் மதுவும், இடது புறம் பிறை மாத நிலவாய் சக்தியும்.... வெகு நாள் கழித்து இவர்கள் மூவரும் ஒன்று கூடியிருந்ததால் அரட்டை களைகட்டியிருந்தது!

“எல்லாரும் வாழ்த்து சொல்லிட்டாங்க. இந்த கார்த்திக் மட்டும் போன் செய்தானா பாரு... லவ் பண்றப்போ கெளதம் மேனன் பட ஹீரோவா இருந்தான்... கல்யாணத்துக்கு பிறகு” என்று அவள் முடிக்கும்  முன்,

சக்தி, “பாலா பட ஹீரோவாகிட்டார்லடி” என்று கலாய்க்க,

“சக்கு மக்கு... இன்னும் ஆறு மாதத்தில் உன் குட்டி வெளியே வந்த பிறகு உனக்கு ஆப்பு இருக்கு  ” என்றாள் கடுப்புடன்.

அந்த நேரம் இவர்கள் படுத்திருந்த அறைக்கதவு கதவு தட்டப்பட்டு “மது” என்றது  நிரஞ்சனின் குரல்....

சந்தியாவிற்கு மறுபுறம் படுத்து இருந்த மது கை முட்டி வரை அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் குலுங்க ஒரு கையை ஊன்றி சிரமப்பட்டு எழுந்தரிக்க முயன்றாள்.

“நீ இரு...நான் பார்க்கிறேன்” என அவள் பதில் எதிர்பார்க்காமல் சிட்டாக பறந்து போய் கதவைத் திறந்தாள்...

“மது.து... தூங்குது?”, கேட்டான் நிரஞ்சன்.

“அதான் எழுப்பி விட்டீங்களே.... என்ன விஷயம்?”, சந்தியா

“சட்டே இல்லே தூங்காது மது...” என்று அவனது சட்டையை ஒன்றை நீட்டினான்.

“உன் சேலையை பிடித்து தூங்க குழந்தை வரப் போகுது....இன்னுமா......ஹைய்யோ முருகா” என்று அலுத்துக் கொண்டு  மதுவைப் பார்த்தாள்.

அதைக் கேட்டு மது ரோஷமாய், “நான் பிக் கேர்ள் தான்! இந்த நிரு தான் எனக்கு குட் நைட் சொல்லறதுக்கு சட்டையை சாக்கு வைத்திருக்கார்” என்றாள்.

“இல்லே மது... நான் சந்தியா பர்த் டேக்கு தமில் கவிதே பாடுது... மது நீ ‘ல’ மட்டும் சரியா செக் பண்ணுது ப்ளீஸ்!”, என்றான் கெஞ்சலாக.

இவர்கள் சங்கேத வார்த்தை புரியாத சந்தியா,

“உங்க டமில் ஆர்வத்திற்கு நடுராத்திரி நிறை மாசத்தில் இருக்கிறவளை எழுப்பிவீங்களா... அவ ஆறே மாசத்தில் பெங்காலி கத்துகிட்டா..உங்களுக்கு என்ன?” என நிரஞ்சனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில் மெதுவாக எழுந்து கதவருகில் வந்து விட்டாள் மது. அந்த நேரம் கார்த்திக் சந்தியாவை அழைக்க ஓடி வந்து எடுத்தாள். “என் செல்ல பேய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....” என்றவன் மேல் இருந்த கோபத்தை மறைத்து, “மிக்க நன்றி உத்தம புருஷா” என்றாள்.

“ப்ளைட் லேட். அதான்... லேட்டா வாழ்த்து சொன்னதுக்கு  பேதி காபியை கொடுத்திடாத கண்ணு. இன்னும் மூணு மணி நேரத்தில் அங்க இருப்பேன். தூங்கிடாத..” என்றவன் “பெட்ரூம் பேர்த்டே கொண்டாடலாம்” என்றான் ரகசியமாக,

“ஆசை தோசை....இன்னைக்கு ப்ரண்ட்ஸ் கூட தூங்கப் போறேன்.... ஒன்னும் கிடையாது” என்றவளது பதிலுக்கு விஷமமாக சிரித்து விட்டு வைத்தான்...

“சகுனி ஏதோ ப்ளான் பண்றான்...சிக்க மாட்டா சந்தியா“ என்று எண்ணிக் கொண்டே படுக்க  வர, “என்னடி மதுவை இன்னும் காணோம்... “ழ” சொல்ல நிரு ஏன் அவ்வளவு சிரமப்படுறார்?” என சக்தி கேக்க,

“என்னத்தை சொல்லிக் கொடுக்கிறாளோ... ஆனா குருவை மிஞ்சின சிஷ்யையா பாடம் கத்து கொடுத்த நம்மளை மிஞ்சிட்டா பாத்தேல்ல... இன்னும் ரெண்டு வாரத்தில் டெலிவரி!” என்று கிண்டலடிக்க இருவரும் சிரித்தனர்...

அங்கே மது, “நிரு அதான் படிக்க வேண்டியது எல்லாம் படித்து விட்டீங்க, இப்போவாவது விடலாமே... என்னை சந்துவும் சக்குவும் ஏற்கனவே கலாய்த்துகிட்டு இருக்காங்க“ என செல்லமாக சிணுங்கினாள் மது.

“மது இன்னைக்கு என் கூட இருந்தா சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்குது” என்று ஆசை காட்டினான் நிரஞ்சன்.

“இப்படியே ஒரு வருஷமா ஏமாத்திட்டீங்க. இனிமே நான் ஏமாற மாட்டேன்” என்றாள் அவன் கைவளைவிற்குள் ஒரு சாய்ந்து படுத்த படி...

“உன்னே விட்டு தனியா இருக்க பேயமா இர்க்குது மது...ஊருக்கு போக பிடிக்கலே... இதிலே நம்ம  பேபி வந்தது இன்னும் குஸ்டம்” என்று  என்றான் வருத்தமாக அவளது மேடான வயிற்றை வருடி கொடுத்த படி.

வருடிக் கொடுத்த அவன் கரத்தை பற்றியவள், லேசாக திரும்பி அவனைப் பார்த்து, “எனக்கும் தான் நிரு...”, கவலையாக சொன்னாள்.

“அப்போ மது என் கூட வருது? நான் எல்லாம் உனக்கு பாக்குது” என கேட்டான் ஆர்வமாக. அதற்கு மறுப்பாக தலையாட்டியவள்,

“எனக்கு இங்க இருந்தா பாட்டி என் கூடவே இருக்கிறது போல இருக்கு. அவங்க உயிரோட இருந்தா எனக்கு அவங்க தானே பிரசவம் பார்த்து இருப்பாங்க. இங்க ஒரு திருப்தி இருக்கு நிரு.... நம்ம குழந்தை பிறந்த பிறகு அங்க வந்துடுவேன்... உங்களுக்காக இல்லைன்னாலும் அம்மாக்காக” என்றாள் மது.

“நீ என் அம்மாவே கல்வெட்டிட்ட”

“கல்வெட்டு இல்ல... களவாடி... “ என்று சிரித்துக் கொண்டே திருத்தியவள், “நீங்க என் மனசை களவாண்டு விட்டீங்க....நான் உங்க அம்மாவை களவாண்டு விட்டேன்” என்று மேலும் சிரித்தாள்.

“லக்ஷ்மி ஆண்ட்டி, பட்டு மாமி எல்லாம் பார்த்தப்போ மனசுக்குள்ளே ஏங்கி இருக்கேன்... எனக்கே எனக்குன்னு அம்மா இல்லையேன்னு. எனக்கு பிந்தி மா, எனக்கே எனக்கான அம்மா. அவங்களால் தான் அங்கே இருக்க முடிந்தது நிரு! உங்களை பிரிந்து இருக்க முடியாம பிளைட்டில் ஏறிட்டேன். பகல்ல சிவா அண்ணாவும் நீங்களும் பேசி பேசி சிரிக்க வைத்துடுவீங்க. புது இடத்தில் ராத்திரி அங்க தூங்க சிரமப்படுறப்போ நான் லேசா அசைந்தாலும் கவனித்து, “மது”ன்னு கூப்பிடுற தொனியிலே அவங்க நம்ம அம்மாவா இருக்க கூடாதான்னு ஏக்கம் வரும்... இப்போ அம்மாவே தான்...“ என்று சொன்னவளுக்கு லேசாக மூச்சு வாங்க.... தன்னை ஆசுவாசப் படுத்தியவளிடம்,

“போதும்.. பேசுனது. மது இனி தூங்குது”, என்றான் பரிவுடன்.

“பிந்தி மா தனியா இருப்பாங்க நிரு. அவங்களையும் இங்க விட்டுடுறீங்களா? என் டெலிவரிக்கு கூட இருந்தா எனக்கும் தைரியமா இருக்கும்” என கேட்க,

“ஹே....சிரியா சொல்லுது.. நான் சொன்ன சர்பரைஸ் அது தான்” என்றான் வியப்பு காட்டி.

“பிந்தி மா வர்றாங்களா” என்றாள் விழிகள் விரிய. ஆமாமென தலையாட்டினான் நிரு.

“நான் தான் சொன்னேன்ல, எங்கிட்ட ரகசியமே மறைத்து வைக்க முடியாது. எல்லாத்தையும் கரக்ட்டா க்ராக் பண்ணிடுவேன்” என்றாள் பெருமையாக. அவள் குழந்தைத் தனத்தை ரசித்தவன்,

“ஜீரா ஒன்ஸ் மோர் ழ் சொல்லுது” என்று சொல்லிக் கொண்டே அவளை நோக்கி குனிந்தான்..

மூன்று மணிக்கு அலாரம் வைத்து விழித்த சந்தியா கார்த்திக் வந்திருப்பான் என்று மனதிற்குள் ஆவல் வந்தாலும் அவனாக வரட்டும் என இருக்க அவனோ போனில் கூட அழைக்கவில்லை. இவள் பலமுறை அழைத்தாலும் எடுக்கவில்லை. கார் ஓட்டுனரை அழைத்தால், அவர் அவன் வருவதே தெரியாது என்றார். அதிகாலை நான்கு மணி ஆகி  விட்டது... அவளுக்கு பயம் வர அவன் வந்து விட்டானா என்று தங்கள் அறைக்கு ஓடினாள்.

அவன் வந்த சுவடே இல்லை..... என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே அறைக் கதவை நோக்கி நடக்கும் பொழுது கதவில் சாய்ந்து கையை குறுக்காக கட்டிக் கொண்டு  அவள் வழியை மறித்து நின்று மந்தகாச புன்னைகையை உதிர்த்து நின்று கொண்டிருந்தான். அவன் பார்வையில் அவளின் உயிர்ப்பூ மலர, “ஊருக்கு போனாலே நீங்க பத்திரமா வந்து சேரும் வரைக்கும் நிம்மதியே இருக்காது... இதில் ஏன் கார்த்திக் விளையாடுறீங்க?” என்று கோபம் மெல்லிய சிணுங்கலாய் மாறியது. சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவளை நெருங்கி அவள் கண்களை கையில் வைத்திருந்த துணியால் மூடி. அவளைத் தூக்கிக் கொண்டு படுக்கையில் அமர்த்தினான்...

”என்ன கார்த்திக் செய்றீங்க”, பதறினாள்...

“ம்ம்....விளையாடுறேன்...” என்றான் காதருகில் ரகசியமாய்....

“ரொமாண்டிக்கா ஏதாவது பண்ண போறியா மயக்கு மன்மதா”, என்றாள் ஆசையாய்.

“இப்போ இல்லை...தூங்குற வரைக்கும் சும்மா  ஒரு பதினாரு  நிமிசம் மொக்கை போடு...“ என்றவனிடம், “அதென்ன பதினாறு நிமஷ கணக்கு!” என கேட்க பதில் வராததால் கண் கட்டை அவிழ்க்க போனாள்....அவள் கரத்தை பற்றி தடுக்க நெருங்கியவனின் ஸ்பரிச வாசனை அவளை செயலிழக்க வைக்க, அதை கண்டு கொண்டவனாய் பற்றியிருந்த அவள் கரங்களில் முத்தமிட்டான்... அவள் சிலிர்த்து போய் கையை அவனிடமிருந்து உருவ முயன்றாள்... அது அவன் தேக தேடலை மேலும் தூண்டியது.... அவளது கரத்தை விடுவித்து அவளை சிறை பிடித்தான்  தன் அகன்ற தோள்களுக்குள்...

அவன் தோள்களுக்குள் புதைந்து,

“யேய்...என்ன பண்ற?” என்றவளின் குரல் குழைந்தது...

“என்ன பண்ணனும்?” ரகசியமாய் கேட்டவாறு அவள் கன்னத்தோடு கன்னம் உரசியவாறு... கரங்களோ உலா வர துவங்கின...

அவளோ கூச்சத்தில் நெளிந்தாள்... “சொல்லு” என்று மீண்டும் ரகசியமாய் கேட்க அவளிடம் பதில் இல்லை...

இப்படியே சில நொடிகள் அவளை  மோகத்தில் திளைக்க வைத்த அவன் கரங்கள் தனது செய்கையை நிறுத்தி, கண் கட்டை அவிழ்த்து விட்டது!

“ஹேப்பி பர்த்டே மை பேய்” என்றான் காதருகில்.... மோகச் சிறையில் சிக்குண்டவள் மெதுவாக விழிகளைத் திறக்க கண் முன்னே மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட கேக்... வெண்ணிற ஆடையில் பூக்களை பொறுக்குவது போல பெண் உருவம் போட்ட ஐஸ்ஸிங்.. அதைக் கண்ட ஆச்சரியமும், சந்தோஷமும் மனதில் பொங்க, காதல் சிறைக்குள் தாவினாள்....

“ஹே... நான் எதிர்பார்க்கவே இல்லை... தேங்க்ஸ்”, என்றவள் உற்சாகம் பொங்க, அவனை கட்டியணைத்து  கன்னத்தில் முத்தமிட.... அவனுக்கோ பற்றியிருந்த மோகத்தீ அவள் முத்தத்தில் மேலும் கொழுந்து விட்டு எரிந்தது!

“சரியா காலையில் நாலு மணி நாப்பத்தாறு நிமிடத்தில் தான் நீ பிறந்திருக்க.... இப்போ தான் கொண்டாடணும்....சீக்கிரம்... கெட்ட நேரம் முடியப் போறதுக்குள்ள ஊதி விட்டுடு” என்று குறும்பாக சொல்லிக் கொண்டே அவசரப்படுத்தினான்.

கேக்கை வெட்டி ஊட்டி விட்டவளின் விரல்களில் ஒட்டியிருந்த கேக்கை காண்பித்து “இதுவும் எனக்குத் தான்” என, “ஹே... ச்சீ” கையை மறைத்தாள்... அவனோ படக்கென தட்டில் இருந்த கேக்கை எடுத்து அவள் முகத்தில் தடவி, “இதுவும் எனக்கு தான்” என்று சொல்லிக் கொண்டே அவளது இடையைப் பற்றி தன் வசம் இழுத்தான்.

அவன் சேட்டைகளை ரசித்தாலும் வெளிக்காட்டாமல்,

“உன் இம்சைக்கு அளவே இல்லை பழனியப்பா” என்று போலியாக சலித்துக் கொண்டவளை மேலே பேச விடாமல் சிறைப்படுத்தி இம்சித்தது அவனிதழ்கள்.

விடியற்காலையில் இருவரும் அசந்து போய் தூங்க செல்வதற்கு முன், சென்ற ஆண்டு பிறந்த நாள் அன்று அவளை காபி கடைக்கு விரட்டி வந்து கொடுத்த பரிசை திறந்து பார்க்கவே இல்லை என சந்தியா சொல்ல, அதைக் கேட்டவன் பயந்தவனாய் “வேண்டாம் வள்ளிக் கண்ணு, திட்டுவ”

“அதற்காக தான் உங்க முன்னாடி திறக்கணும் ஆசைப் பட்டேன்” என சொல்லிக் கொண்டே அதை எடுத்து வந்து திறந்து பார்த்தாள்... பெட்டிக்குள் ஒன்றுமே இல்லை... வெறும் காற்றடைத்த பெட்டி....அவள் அவனைக் கண்டு விழிக்க,

“எல்லாத்தையும் நீ எடுத்துகிட்ட.... என்கிட்ட கொடுக்க எதுவுமே இல்லைன்னு குறிப்பா உணர்த்த தான் இந்த கிப்ட்” என்று அவன் தயங்கிய படி விளக்கம் அளிக்க, அவனை முறைத்த வண்ணம், “ஏற்கனவே லேட்டா வாழ்த்து சொன்னதுக்கு தண்டனை கொடுக்கணும்னு நினைத்தேன். இப்போ ரெண்டாகி விட்டது!” என்று மிரட்டல் விட்டு படுத்தாள். “பேய்க்கு வாக்குப்பட்டா...” என தனக்குள்ளே முனங்கிக் கொண்டே அவள் போர்வைக்குள் ஒளிந்தான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.