(Reading time: 43 - 85 minutes)

மாலை ஆறு மணி

மாலை சந்தியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு,

பூமாவின் ஓவியா குட்டியின் வருகையை  விட,

அடுத்த மாதம் தம்பதிகளாகப் போகும் சரண் – நேகாவின் வருகையை  விட,

நிருவின் தாயார் பிந்தியாவின் வருகையை விட,

எல்லாரும் எதிர்பார்த்து காத்திருந்தது....

மலேசியாவில் இருந்து வந்திறங்கிய தொழிலதிபர்  சிவாவைத் தான்....

ஊருக்கு வந்ததும் சிவாவை அழைத்தான் கார்த்திக்.

“மச்சி சந்தியா பிறந்த நாள் பார்ட்டிக்கு  கண்டிப்பா வந்துடுடா”,

“மாப்ளே, ஆக்சுவலா நான் பிஸி யு நோ.... ஆனா, என்ன இருந்தாலும் என் சிஸ்டர் பிறந்த நாள். நான் வாழ்த்து சொல்லாட்டி எப்படி? ஒரு ஐந்து நிமிசம் தலையை காட்டிகிட்டு போறேன். கோட், சூட் எல்லாம் போட்டு வர்றேன். என் பின்னாடியே என்னோட அசிஸ்டெண்ட் மூணு பேரு வருவாங்க. அதனால நான் உங்க வீட்டிற்கு என்ட்ரி ஆகிறப்போ பாட்சா பாட்டு போட்டுடு மச்சி. அதான் என் இமேஜ்க்கு ஒத்து வரும்” என்றான் பந்தாவாக.

இவ்வளவு சொன்னால் கார்த்திக்கிற்கு பொறுக்காதே! வம்புக்கென்றே சந்தியா அருகில் சென்று போய் நின்று கொண்டு,

“என்ன மச்சி இப்படி சொல்ற சந்தியா உன்னை எதிர்பார்க்கிறாடா.. உன் மேல பாசமா கூப்பிடுறா.. நீ பெரிய பிஸ்னஸ் மேன் ஆகிட்டன்னு நண்பனை மறக்கலாம் ஆனா தங்கச்சியை.. அது  தப்பு மச்சி”  என்று அறிவுரை கூற, அவனின் நோக்கம் புரியாமல்,

“நான் வர்றேன்னு தான்டா சொன்னேன்”, என புலம்பினான் சிவா.

“என்ன வரமாட்டியா? நீ பெரிய தொழிலதிபரா இருக்கலாம் ...அதுக்காக தங்கச்சிக்கு வாழ்த்து சொல்றதுல என்னடா குறைந்து போயிடுவ “ என்றான் சற்று குரலை உயர்த்தி.

அது சந்தியாவின் கவனத்தை கவர கேள்வியாய் கார்த்திக்கை பார்க்க, அதை உணர்ந்தவன், ஒன்னும் இல்லை என்பது போல தலையசைத்து சற்று நகர்ந்து சென்றான். சந்தியாவிற்கு இவன் எதையோ மறைகிறான் என தோன்ற அவன் பேச்சை கூர்ந்து கவனித்தாள்.

“ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3... கேக்குதாடா மாப்ளே?”

“டெஸ்டிங் 3 2 1... நல்லா கேக்குதுடா. சொல்லு மச்சி...” என்றான் கார்த்திக்.

“பின்ன ஏன் மாப்ளே கேக்காத மாதிரி நடிக்கிற... ”, என்றான் நொந்து வெந்து போய்.

“என்னது டைம் இருந்தா வர்றியா? ஐந்து நிமிஷமாவது வந்துட்டு போயிடு மச்சி. நீ இப்படி பேசுனது சந்தியாவுக்கு தெரிந்தது அவ்வளவு தான்”, என்றான் குரலை தாழ்த்தி. ஆனால், சந்தியாவிற்கு கேட்கும் விதத்தில்...

சிவாவிடம் பேசி முடித்த பின், அவனிடம் வந்த சந்தியா “யார்கிட்ட கார்த்திக் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க?” என சந்தேகமாய் கேட்க,

“அது ஒன்னும் இல்ல.” தயங்குவது போல நடித்தான். அவள் மீண்டும் மீண்டும் கேட்க, உயிர் நண்பன் தனது வேலையை செய்தான். அதைக் கேட்ட சந்தியா கோபமாக, “விடு விடு...ஐந்து நிமிஷம் வர சொல்லி கெஞ்சியிருக்கேன்... இதுக்காக அவனுக்கு பேதி காபியை கொடுத்துடாத... பந்தாவா கோட் சூட் எல்லாம் போட்டு வர்றான்” என்றான் சிவா மீது  கரிசனமாய்...

“தங்கச்சி தங்கச்சின்னு சும்மா வாய் வார்த்தைக்கு சொல்லிட்டு திரியுறாரா? உங்க நண்பன்! வரட்டும் இன்னைக்கு இருக்கு!” என்று சந்தியா சொல்ல, மனதிற்குள் குத்தாட்டம் போட்டான் கார்த்திக்.

“மச்சி நீ இன்னைக்கு பஜ்ஜி தான்” என்று.

மாலையில் நட்பு, உறவுகள் என வீடே நிறைந்து இருந்தது. சிவா மட்டும் இன்னும் வரவில்லை...

“மந்தி மட்டும் இல்லைன்னா நேஹா மனசு இவ்வளவு சீக்கிரம் மாறி இருக்காது” என்று விட்டு அவள் அன்று உதிர்த்த தத்துவம் வேலை பார்த்து விட்டதென அவளுக்கு நன்றி சொல்ல, அதற்கு கார்த்திக், “அதை சொன்னது நான்...” என தம்மட்டம் அடிக்கும் பொழுது சிவா அழைத்து இன்னும் ஐந்து நிமிடத்தில் பாட்சா பாட்டை போட்டு  தயாராக இருக்கும் படி முன்னறிவிப்பு கொடுக்க, சந்தோசமாய் சந்தியாவை அழைத்து சொன்னான் கார்த்திக். அவள் அதை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை.

“ஒரு வேளை மன்னிச்சு விட்டுட்டாளோ...” என எண்ணிக் கொண்டிருக்கும் போது... சிவா படையுடன் இறங்கினான். ‘

(நம்ம ஹீரோ சிவா வருகிறார்....பின்னணியில்  பாட்சா பாட்டு ஓடுகிறது...)

சிவா அவனது கையாள்கள் புடை சூழ கோட் சூட் சகிதம்  புயலென வந்தான். சூ தரையில் உராயும் பொழுது தீப்பொறி பறக்க சிங்க நடை போட்டு உள்ளே வந்து சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் லாவகமாக கோட்டை சற்று விலக்கி இடுப்பில் கை வைத்து ஒய்யாரமாக நின்று கொண்டே  “ஸ்டான்டடீஸ்” என கட்டளையிட, அவனது கையாட்கள் கையை பின்னால் கட்டி ஸ்டன்டடீஸ்ஸில் போஸ் கொடுத்து நின்றனர்...

சிவாவின் விஸ்வரூபத்தை பார்த்து அனைவரும் அசந்து போன நேரம், எங்கிருத்தோ  புற்றீசல் போல நான்கு வாண்டுகள் துப்பாக்கியோடு அவனை நோக்கி ஓடி வந்தனர்... “வில்லன் வந்துட்டான்டா..... போட்டு தள்ளுங்கடா” என சரமாரியாக சாயத்தை அவன் மேல்  பீச்சி அடித்து விட்டு மாயமாய் மறைந்தனர்....

சிங்கமாய் நெஞ்சை நிமிர்த்தி நின்றவன் நனைந்த ஆடாய் துவண்டு போக... குனிந்து பார்த்தான் உச்சி முதல் பாதம் வரை நான்கு நிற சாயங்களில் குளித்திருந்தான். திரும்பி தனது கையாட்களை பார்த்தான், அப்போதும் கொஞ்சம் கூட அசைவின்றி இப்போதும் ஸ்டேன்டீஸ்ல் நின்று கொண்டிருந்தனர்.

அவன் பார்ப்பதைக் கண்டதும் “நனைந்தாலும் சார் நெஞ்சை நிமிர்த்தி நிக்கிற அழகே தனி” என்று ஒருவன் ஏத்தி விட, மற்றவர்கள் ஆமோதிக்க, சூப்பர் ஸ்டார் ஆக நினைத்தவனை கைப்பிள்ளை ஆக்கிக் கொண்டிருந்த எடுபிடிகளை நினைத்து தன்னை நொந்தான் சிவா.

“டேய் அண்ணா! இந்த டம்மி பீஸ்ஸுங்களை கழட்டி விட்டுட்டு கெஸ்ட் ரூம்ல புது ட்ரஸ் வைத்திருக்கேன். சீக்கிரம் மாத்திட்டு வாங்க. ஒரு குட் நியூஸ் காத்திருக்கு!” என அவனை விரட்ட,

“என்ன நியூஸ் சிஸ்டர்? நான் மாமன் ஆகப் போறேனா ?”, என்றான் ஆர்வமாக.

“இல்லை...மாப்பிளை ஆகப் போறீங்க.. கேள்வி கேக்காம சீக்கிரம் வாங்க” என்று அனுப்பி விட்டு வந்த சந்தியாவை, ஆலிவ் பச்சை வண்ணப் புடவையில் புத்தம் புது ரோஜாவாக மிளிர்வதை ஆசையுடன் கார்த்திக் கண்கள் வலம் வந்தன.

அவனருகில் சென்றவள், “ஹே... ரோமியோ  என்ன புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிற” என்றாள் காதலுடன்.. பதிலுக்கு மன்மதப் புன்னகையை உதிர்த்து, “நீயும் தான் நான் பார்க்கிறேனான்னு பார்க்கிற!” என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் முகம் இறுகியது.

அவன் எதிரே பாண்டியன் வந்து கொண்டிருந்தான். ஒரு கண் செயலிழக்க, ஒற்றை கண் பார்வையில் வாழ்கையை ஓட்டுகிறான்.  கருப்பு கண்ணாடி அணிந்து அதை மறைத்திருந்தான். கார்த்திக் அவனைக் கண்டதும் சினந்து வெகுண்டு எழுந்து,

“உன்னை யாரு உள்ள விட்டா?...”, கர்ஜித்தவாறு அவனிடம் பாய்ந்தான் அதற்குள் இடை புகுந்த சந்தியா,.

“நான் தான் வரச் சொன்னேன் மாமாவை“ என்றாள் நிதானமான குரலில்.  

கோபம் எல்லாம் அவள் மீது பாய, ஆட்காட்டி விரலை ஆட்டி, “அவன்  என் கண்ணில் முழிப்பது இதுவே கடைசி முறையா இருக்கட்டும். மீறி ஏதாவது செய்த நடக்கிறதே வேற!” என கண்களில் சினம் பொங்க எச்சரிக்கை விடுக்கும் பொழுதே அவன் காலில் விழுந்தான் பாண்டியன். கார்த்திக்கிற்கோ ஆத்திரம் குறையவில்லை. காலை உருவிக் கொண்டு சென்று விட்டான்.  

அவன் சத்தத்தில் அனைவர் கவனமும் அவர்களிடம் திரும்ப தன்ராஜூம், லக்ஷ்மியும் ஓடி வந்தனர்.  

கார்த்திக் கோபத்தில் பாண்டியன் வருந்தி கலங்க அவனை ஆறுதல் படுத்தி விட்டு, “ஆதரவில்லாத பெண்ணை கல்யாணம் பண்ண போறீங்கன்னு கேள்வி பட்டேன். சந்தோஷமா இருக்கு மாமா.”,  என்றாள் புன்னகையுடன்.

அதற்குள் அவளருகில் வந்து மருமகனுக்கு பிடிக்காததை செய்ததற்கு  சந்தியாவைக் கடிந்தார் தன்ராஜ். அவரிடமும் மன்னிப்பு கேட்டான் பாண்டியன். “இப்போ தான் அவ நல்லாயிருக்கா... அது உனக்கு பொறுக்கலையா! கிளம்பு...கிளம்பு” என அவனை அங்கிருந்து அப்புறப் படுத்துவதிலே குறியாக இருந்தார்.

“அப்பா மாமாவை நான் தான் கூப்பிட்டேன்.” என்று தன்ராஜிடம் சொன்னவள், பாண்டியனிடம், “நீங்க இருங்க மாமா. கார்த்திக் கோபம் வந்த நிமிஷத்தில் காணாமல் போயிடும். அவரை கூப்பிட்டு வாரேன். தப்பா நினைக்காதீங்க” என்று பாண்டியனிடம் ஆறுதலாக சொல்லி விட்டு அவனை அழைக்க சென்றாள்.

அவள் சென்ற மறு கணமே தன்ராஜிடம் “நான் போயிட்டு வர்றேன் மாமா. என்னால எந்த கஷ்டமும் சந்தியாக்கு வரக் கூடாது” என்று குரல் தழுதழுக்க சொல்லி விட்டு விடை பெற்றான் பாண்டியன்.

ங்கள் அறைக்கு சென்ற சந்தியா, அங்கு படுக்கையில் கிடந்த கார்த்திக்கின் அருகில் சென்று, “பழனியப்பா... இப்படி பொம்பளை பிள்ள மாதிரி குப்புற படுத்துகிட்டு...என்ன அழுகுறியா?” என்று அவன் புஜத்தை ஒரு கையால் பற்றி, மறு கையால் வம்பு கட்டி அவன் முகவாயை பிடித்து  தன் வசம் திருப்பினாள். அவன் கண்களில் வேதனை தெரிய பதறிப் போய்,

“அதான் எம். எஸ். டவுசரை ஒரு வருஷமா கண்காணித்து அவன் திருந்திட்டான்னு சொன்னாரே! “, என பரிவாக சொல்லிக் கொண்டே அவனருகில் அமர்ந்தாள்.

தன்னருகில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவனின் கண்கள் சொல்ல முடியாத வலியை சுமக்க, அவன் விரல்கள் அவளது உதடுகளை மென்மையாக வருடின. அவன் வலியின் காரணம் உணர்ந்தாள்.

அவனின் முடியை கோதியவாறு, “இங்க பாருங்க கார்த்திக், நம்ம கெட்ட நேரம், லேசா கால் இடறி பாலியல் கொடுமை என்னும் பள்ளத்தின் முனையில் விழுந்தேன்... உள்ள விழாததுன்னால நான் பெரிதளவு பாதிக்கபடலை. ஆனா, அதன் ஆழம் தெரிந்தது... அதில் விழுந்தவங்க மனசும், உடலும் என்ன பாடுபடும்ன்னு புரிந்தது! அவங்களுக்கு உதவி பண்ண தான் எனக்கு  முருகன் அதை காட்டியிருக்கான். அதற்கான வேலையை ஆரம்பித்தும் விட்டேன். எல்லாம் நல்லதுக்கு தான்.“

“உண்மையிலே என் மனதில் எந்த உறுத்தலும் இல்லை. நான் நல்லாயிருக்கேன். நீங்க இனி அதைப் பற்றி நினைக்கவே கூடாது... சரியா?” என்று கனிவை குழைத்து  கேட்க, அவளையே பார்த்த வண்ணம் பேசாமல் இருந்தான். அவனது நெற்றியில் முத்தமிட்டு, தனது பேச்சை தொடர்ந்தாள்.

“உங்க சொந்தக்காரங்க என் காது படவே சுமாரான குடும்பத்தில் இருந்து வந்தவ... வேலை பாக்க வந்து உங்களை வளைத்து போட்டேன்ன்னு பேச தான் செய்றாங்க. அவங்களை பிடிக்காது தான். தூரத்தில் வைப்பேனே தவிர ஒட்டு மொத்தமா  ஒதுக்க முடியாது. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. என் அக்கா உயிரோட இருக்க காரணம் டவுசர். அவர் கல்யாணத்திற்கு கண்டிப்பா போவேன். பிடிக்காட்டின்னாலும் என் கூட வந்து நிக்கணும்.“ என்றாள் நிதானமான அழுத்தமான குரலில்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.