(Reading time: 18 - 35 minutes)

 

தேன்மொழி கிளாஸ்க்கு செல்லும் போது தான் தௌலத் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தார். அவருக்கும் முதல் வகுப்பு இருக்கிறதாம். அவசரமாக பேகை வைத்து விட்டு கிளாஸ்ஸிற்கு சென்றார்.

இன்று ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் ஏனோ உற்சாகமாக இருந்தார்கள். என்னவென்று கேட்டால் இன்று ஏதோ பேட்ச் பிரிக்கிறார்கள் என்று உற்சாகமாக கூறினார்கள்.

தேன்மொழியும் அத்தோடு விட்டு விட்டு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தாள்.

பதினொன்று முப்பதுக்கு கிளாஸ் முடிந்து விட்டது.

தேன்மொழிக்கு அடுத்தும் வேற கிளாஸ் போட்டிருந்தார்கள். 5 நிமிடம் ஓய்வெடுத்துக் கொண்டு அந்த வகுப்பிற்கு சென்றால் கௌதம் அங்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

நடந்துக் கொண்டே நோட்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

இந்தப் புறமும் அந்தப் புறமும் ஏதோ அச்சு பிசகாமல் நடந்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்த சேரில் அமர்ந்துக் கொண்டான்.

அவன் நடையில் எந்தவொரு தடுமாற்றமும் இல்லை. அதே போல சேர் எங்கிருக்கிறது என்றுக் கூட அவன் தடுமாறாமல் சென்று அமர்ந்தான். எல்லாம் ஏதோ சிஸ்டமேட்டிக் போல நன்றாக பழகி செய்வது போல இருந்தது.

ஏனோ அவள் மனம் வருந்த அங்கிருந்து சென்று ஜமுனாவுடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் தௌலத்தும் வந்து சேர்ந்தார்.

காலைல லேட் ஆகிடுச்சி என்று அதற்கு காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணா முன்னே வர, கௌதம் பின்னே வந்தான்.

கௌதம் கிருஷ்ணாவை பிடித்துக் கொண்டு கூட வரவில்லை. சாதாரணமாக தான் வந்தான். இப்போதும் அவன் பார்வை இல்லாதவன் என்பதை தேன்மொழியால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

அவன் இருக்கைக்கு வந்த பிறகு, கிருஷ்ணா நின்று கௌதம் தோள் மேல் கை வைக்க அவன் நின்று பிறகு, கிருஷ்ணா சேரை இழுக்க, கௌதம் அதைப் பிடித்து அட்ஜஸ் செய்துக் கொண்டு அமர்ந்தான்.

கௌதமை காலையில் பார்க்காமல் இருந்திருந்தால் தேன்மொழிக்கு இது ஒரு சாதாரண நிகழ்வாக தான் இருந்திருக்கும். ஆனால் அதைப் பார்த்த பிறகு உண்மை தெரிந்த பின் மனம் அவனுக்காக வருந்தியது.

பின்பு அவள் எழுந்து கிளாஸ்ஸிற்கு சென்று விட்டாள்.

அன்று முழுவதுமே கௌதமைப் பற்றி ஜமுனாவிடமோ இல்லை தௌலத்திடமோ பேச அவளுக்கு நேரமே கிடைக்கவில்லை. யாராவது ஒருவர் கூட இருந்துக் கொண்டே இருந்தனர்.

அதைப் பற்றி கேட்க அவளுக்கு அடுத்த நாள் தான் நேரம் கிடைத்தது.

டுத்த நாள் மதியம் கௌஷிக், பிரதாப், சுந்தர் எல்லோரும் வெளியில் சாப்பிட சென்று விட கௌதமும், கிருஷ்ணாவும் சாப்பிட வெளியில் சென்று விட்டனர்.

இவர்கள் மூன்று பேர் மட்டும் அமர்ந்திருக்க, தேன்மொழிக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சாப்பாட்டையே அளந்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து இவளிடம் சத்தமே இல்லாததை கவனித்தனர் இருவரும்.

“என்னாச்சி தேன்மொழி. ஏதோ யோசனையிலேயே இருக்க” என்றார் தௌலத்.

“ஒண்ணுமில்லை” என்று அவள் சமாளிக்க,

“என்ன ஒண்ணுமில்லை. நீ ஏதோ கன்ப்யூஸா இருக்கன்னு உன் முகத்துலேயே எழுதி ஒத்திருக்கு” என்று ஜமுனாவும் வாற

மெதுவாக தேன்மொழி “கௌதமை பத்தி ஏன் நீங்க ரெண்டு பேரும் என் கிட்ட ஏதும் சொல்லலை” என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பின்பு ஜமுனா “நாங்க என்ன சொல்லணும் டா. நீயா ஒரு நாள் தெரிஞ்சிப்பன்னு எங்களுக்கு தெரியும். பொதுவா நாங்க யார் கிட்டவும் இப்படின்னு சொல்ல மாட்டோம். அவங்களா தான் ஒரு நாள் தெரிஞ்சிப்பாங்க. நீயும் அப்படி தெரிஞ்சிப்பன்னு நாங்க நினைச்சோம். அவ்வளவு தான்” என்றாள்.

யோசித்துப் பார்த்தால் அவளுக்கும் அது சரியாக தோன்றியது. இருந்தும் அவள் முகம் மட்டும் தெளிவாகவில்லை.

அதை கவனித்த தௌலத் “நீ இப்ப எப்படி பீல் பண்றன்னு எனக்கு தெரியுது. பட் இதுல நம்ம அந்த அளவுக்கு வருத்தப் படறதுக்கு ஒன்னும் இல்லை. அந்த குறையையும் மீறி கௌதம் இந்த அளவுக்கு இருக்கிறான்றதை நினைச்சி நாம சந்தோசம் தான் படனும். சோ அவனுக்கு இருக்கிற குறையை நினைச்சி நீ வருத்தப் படாத” என்றார்.

அவளுக்கு எல்லாம் புரிந்தும் அவளால் ஏனோ அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை.

அதற்குள் வெளியில் சாப்பிட சென்ற எல்லோரும் ஒவ்வொருவராக திரும்ப வந்தனர்.

கிருஷ்ணாவும் கௌதமும் வந்த பிறகு கௌதம் தேன்மொழியிடம் “தேன்மொழி மேடம், நான் லாஸ்ட் கிளாஸ் டெஸ்ட் சொல்லிருக்கேன். உங்களுக்கு இப்ப கிளாஸ் இருக்கு இல்ல, எனக்கு ஒரு அரை மணி நேரம் உங்க கிளாஸ் டைம் வேணுமே” என்றான்.

“ஓ ஓகே சார். தாராளமாக எடுத்துக்கோங்க” என்று தட்டுத் தடுமாறி கூறினாள்.

அவளின் தடுமாற்றம் அவனுக்கு புதிதாக தோன்றியது. அவள் சேர்ந்த நாளிலிருந்து அவளின் குரலில் இது போன்ற தடுமாற்றங்கள் இருந்ததில்லை. அவள் பேசுவது குறைவாக இருந்தாலும் அதை தெளிவாக உரைப்பாள்.

ஆனால் இன்று என்று யோசித்தவன், ஏதோ தோன்ற இன்னும் அவளிடம் பேச்சை வளர்த்தான்.

“என்ன நீங்க. இப்படி சீக்கிரம் ஓகே ன்னு சொல்லிட்டீங்க. நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டீங்கன்னு கிருஷ்ணா சொன்னானே”

“இல்லை அப்படி எல்லாம் இல்லை. நீங்க கேட்கறீங்க. எப்படி முடியாதுன்னு சொல்றது” என்று திரும்பவும் தடுமாறினாள்.

ஒரு நிமிடம் ஏதும் பேசாமல் அமைதி காத்தான் கௌதம்.

அவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன மேடம். என்னை பத்தி தெரிஞ்சி போச்சோ”

என்ன சொல்வது இதற்கு என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

“என்னைப் பத்தி இப்ப உங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. அவ்வளவு தானே, அதுக்கு ஏன் இப்ப இப்படி நடந்துக்கறீங்க. உங்களை மாதிரியே நானும் இங்க கிளாஸ் எடுக்கறேன். இப்ப அப்படி என்ன டிபரன்ஸ் இருக்கு நமக்குள்ளே. எதுக்கு நீங்க இப்படி என்னை பார்த்து பரிதாபப் படறீங்க”

“இல்ல சார் அப்படி இல்லை” என்றவளால் வேறு ஏதும் பேச இயலாமல் போகவே அமைதி காத்தாள்.

“கௌதம்” என்று அவன் கையைப் பிடித்தார் தௌலத்.

“கிளாஸ்க்கு டைம் ஆச்சி பாரு. நீ போம்மா” என்று அவளிடம் கூறினார்.

பின்பு கௌதமிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு டெஸ்ட்டை ஜமுனாவிடம் வைக்கும் படி கூறி விட்டு கௌதம் கிளம்பி விட்டான்.

அவன் கூறிய படியே அரை மணி நேரம் முன்னதாகவே கிளாஸ் முடித்துக் கொண்டு வந்த தேன்மொழி அவன் கிளம்பி விட்டதைக் கண்டு வருந்தினாள்.

அவள் முக வாட்டத்தை அறிந்த தௌலத் தான் அவளிடம் பேசினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.