(Reading time: 18 - 36 minutes)

 

சொ...சொல்லுங்க நான் என்ன செய்யணும்?

விஷ்வாவையும், அவரோட மாமா பொண்ணையும் சேர்த்து வைக்கணும். அவங்களாலேதான்  அவருக்கு ஒரு நல்ல வாழ்கை அமையும்ன்னு நான் நினைக்கிறேன்.

மாமா பொண்ணா?

ம். இந்துஜா, என்றவன் விஷ்வாவை பத்தி எல்லாம் தெரிஞ்சும், அவரை மனசார நேசிக்கிற பொண்ணு. 'எனக்கு தெரிஞ்ச வரைக்கும், இப்போ விஷ்வாவுக்குன்னு இருக்கிறது நீங்க மட்டும்தான்னு நினைக்கிறேன். நீங்கதான் ஏதாவது செய்யணும் அபர்ணா.'

'கண்டிப்பா. கண்டிப்பா செய்யறேன்' என்றாள் அவள்.

ஒரு நல்ல friendஆ அவர் உங்களுக்காக தன்னோட காதலையே விட்டுக்கொடுத்திட்டார். ஒரு நல்ல தோழியா அவருக்கு மறுபடியும் ஒரு நல்ல வாழ்கையை அமைச்சு கொடுக்க வேண்டியது உங்க கடமை அபர்ணா.

அவன் சாதாரணமாக சொன்ன அந்த வார்த்தைகளில்  அவள் உடல் மொத்தமும் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது. 'என்ன சொல்கிறான் இவன்?

உடல் நடுங்க, குரல் தடுமாற கேட்டாள் எ...என....க்கா...கவா?

என்ன அபர்ணா தெரியாதா உங்களுக்கு?

எனக்கு தெரியாது. நிஜம்மா தெரியாது. என்னாச்சு? ப்ளீஸ் சொல்லுங்க. விஷ்வா என்கிட்டே எதையுமே சொல்லலை.

அவளையே சில நொடிகள் பார்த்தவனிடம் சின்ன பெருமூச்சு எழுந்தது

ஜனனி அவன் மனைவி. அவள் செய்தது தவறு என்று சொல்லத்தோன்றவில்லை அவனுக்கு. அவளை குறை சொல்லவும் விரும்பாமல், ,அதே நேரத்தில் அபர்ணாவுக்கு  சொல்ல வேண்டியதை சொல்லியும் ஆக வேண்டிய கட்டாயத்தில் கவனமாய் வெளி வந்தன அவன் வார்த்தைகள்

.'எஸ். உங்களை பிரிய மனசில்லாம, உங்க நட்பை இழக்க மனசில்லாமல்தான் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்திட்டார் விஷ்வா  புரிஞ்சுக்கோங்க அபர்ணா,

உண்மை கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்குள் இறங்கியது.

வார்த்தைகள் அற்றுப்போய் நின்றவளை பார்த்து சொன்னான் 'ஏதாவது செய்யுங்க அபர்ணா. என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னை கேளுங்க.' தனது கார்டை அவளிடம் நீட்டியபடியே சொன்னான் சுதாகர்

வாங்கிக்கொண்டாள் அதை, அவன் அவளிடமிருந்து விடைபெற்று அறையை விட்டு வெளியேறினான்.

இது எதுவுமே அவள் அறிவுக்கு எட்டவில்லை. அவள் அறிவு மனம் எல்லாவற்றையும் மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தான் விஷ்வா.

வி..ஷ்...வா அவள் உதடுகள் மெல்ல உச்சரிக்க, இமைகளை தாண்டி வழிந்தது வெள்ளம்.

தனது திருமணதிற்கு அப்பா சம்மதித்துவிட்ட மகிழ்ச்சி கூட மறந்துப்போய், தனது நண்பனின் வாழ்கையை சரி செய்யும் எண்ணம் மட்டுமே அவளிடம் நிறைந்திருந்தது

ரவு சென்னைக்கு ரயில் ஏறி விட்டிருந்தாள் அபர்ணா.

அவள் கிளம்பி சில நிமிடங்கள் கழித்து, அவள் அப்பாவை அழைத்தான் விஷ்வா.

'அபர்ணா கிளம்பிட்டாளா அங்கிள்.? அவள் நம்பருக்கு ட்ரை பண்ணேன் லைன் கிடைக்கலை ஏனோ அவளை பார்த்தால் மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும் என்றே தோன்றியது அவனுக்கு.

கிளம்பிட்டாளே பா என்றவர், என்னப்பா உன் friendக்குஇவ்வளவு தைரியம் வந்திருச்சு. பெத்த அப்பாகிட்டேயே வந்து நான் லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்கிறா?

யா...ரு? அப்பு.....வா? லவ் ப....ண்.....றாளா? வியப்பு கலந்த மகிழ்ச்சியில் ஒலித்தது அவன் குரல். 'யார் அங்கிள் அவ கிட்டே மாட்டினது? நீங்க என்ன சொன்னீங்க?

'அவ கூட வேலை பார்க்கிற பையன்பா'. ஒருத்தன் தானா வந்து நம்மகிட்டே சிக்கி இருக்கான் நாம விட்டுடுவோமா? சரின்னு சொல்லிட்டோமில்ல' சிரித்தார் அப்பா.

மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டிருந்தான் விஷ்வா. 'என் அப்புவுக்கு திருமணமா? அதை தவிர வேறேதுமே அவன் மனதில் இல்லை. அவள் மனதை கவர்ந்தவனின் பெயரைக்கூட கேட்க தோன்றவில்லை விஷ்வாவுக்கு. எதையுமே கேட்காமல் அழைப்பை துண்டிதிருந்தான் அவன்.

தனக்கு நடந்தது எல்லாவற்றையும் கூட மறந்து, தனது  தோழியின் மகிழ்ச்சியில் பங்குக்கொள்ளும் எண்ணம்  மட்டுமே இருந்தது அவனிடம்.

றுநாள் காலை ஐந்தரை மணிக்கு, ரயில் நிலையத்தில் வந்து இறங்கினாள் அபர்ணா. இரவு முழுவதுமே விஷ்வாவை பற்றிய எண்ணங்கள். கொஞ்சமே கொஞ்சமான உறக்கம்.

.உருகி உருகி நேசித்து விட்டு எனக்காக எல்லாவற்றையம்..... விஷ்வா.... ஏனடா இப்படியெல்லாம்..... அவள் கண்களில் நீர் சேர்ந்தது.

இந்த நிமிடமே விஷ்வாவை பார்க்க வேண்டுமென்று தோன்றியது. இப்போதே அவன் வீட்டுக்கு போகலாமா? யோசித்தபடியே தலைக்குனிந்து நடந்தவளின், முன்னே முட்டிக்கொள்வதைப்போல் யாரோ வந்து நிற்க, நீர் கோர்த்த விழிகளுடனே நிமிர்ந்தவளின் எதிரே நின்று தலைசாய்த்து சிரித்தான் விஷ்வா. 'குட் மார்னிங்'

வி... வி..ஷ்...வா....  அவனை எதிரே பார்க்காதவளாய் வியப்புடனே தடுமாறி வெளிவந்தன வார்த்தைகள்.

'குட் மார்னிங் சொன்னா, திருப்பிச்சொல்லணும். இது என்ன ரியாக்ஷன் 'வி... வி..ஷ்...வா....' ? என்றவன் , அது சரி இப்போ நீ இருக்கிற நிலைமையிலே ரியாக்ஷன் மாத்தி மாத்திதானே வரும்.' என்று சிரித்தவன் அவளை கண்களால் அளந்தான்.

அவளை கல்லூரியில் முதன் முதலில் பார்த்ததுதான் அவன் நினைவிலாடியது. 'அப்போது எவ்வளவு அப்பாவித்தனம் அவளிடத்தில். இப்போது காதலிக்கவெல்லாம் செய்கிறாளா இவள்?

அவள் பார்வை அவனை விட்டு விலகவில்லை. 'என்னவென்று கேட்பது இவனிடம்? என்னவென்று சொல்வது இவன் நட்பை.

'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.'  பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் அவள்.                                                            

ஹேய்! எந்த உலகத்திலே இருக்கே நீ? என்னமோ என்னை புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறே? ஆமாம் யாருடா அது உன்னோட  ஹீரோ? எனக்கு தெரியாத ஹீரோ?

சின்ன புன்னகை ஓடியது அவள் இதழ்களில் 'அதுக்குள்ளே உனக்கு யார் சொன்னது?'

'அப்பா...' சிரித்தான் அவன். அதுதான் காலங்கார்த்தாலே உன்னை பார்க்கணும்னு ஓடி வந்தேன் 'சொல்லு சொல்லு யார் அவன்?

பதில் சொல்லவில்லை அவள். உன் மகிழ்ச்சியை புதைத்துவிட்டு என் மகிழ்ச்சிக்காக புன்னகைத்து... அது எப்படி விஷ்வா உன்னால் முடிகிறது?

சொல்லுடா... யார் அது? கேட்டான் அவன்

அப்புறம் சொல்றேன் வா. உன் வீட்டுக்கு போலாமா விஷ்வா?

என் வீட்டுக்கா?

ம். ஆமாம். கொஞ்ச நேரம் உன்கூட இருக்கணும் போலே இருக்கு. வா போலாம். நடந்தார்கள் இருவரும்.

உற்சாகமாய் பேசிக்கொண்டே, ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தான் விஷ்வா. அவன் கேட்ட கேள்விகளுக்கு எதற்கும் சரியாய் விடையளிக்ககூட தோன்றவில்லை அவளுக்கு.

'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.