(Reading time: 16 - 31 minutes)

08. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

நிச்சயமாக தன் அத்தையை அங்கு எதிர்பார்க்கவில்லை தயனி.

வெறுப்பும், கசப்பும், கடுங்கோபமும் கனன்றது கண்ணிமைக்கும் நேரத்துள் அவளுள். எத்தனை தைரியம்? இது என் வீடு. என் கோட்டை. உன்னை என்ன செய்றேன் பார்? வயிறெறிய கருவினாள்.

ஆனால்..இத்தனைக்கும் பிறகு இங்கு வருவதென்றால்...? அபிஷேக்....

Katraga naan varuven

திரும்பி தன் அருகில் வந்து கொண்டிருந்த அபிஷேக்கின் முகம் பார்த்தாள். அவன் முகத்தில் அப்பியிருந்தது உருவமற்ற சோர்வு. துக்கம்.

சட்டென அவளுக்கு அபிஷேக்கின் அப்பா என வந்த அந்த ஆவியின் வார்த்தைகள் ஒருவிதமாக புரிந்தது. அவர் இறந்துவிட்டார் போலும். அதற்குதான் இவன் சென்றிருக்கிறான். அப்பா இறந்தபின் ஒரே மகன் தன் அம்மாவை எங்கு விடுவான்? அதனால் வேறு வழியின்றி கூட்டி வந்திருப்பான்.

‘இதற்காகத்தான் இவளை இன்னும் மருத்துவமனையில் தொடர சொன்னானோ?’ ஒரு மனம் இப்படி சிந்திக்க

மறு மனமோ  ‘ஆக கொல்ல வந்த அம்மாவை தனியா விடமுடியாது, உன்னை மட்டும் தள்ளி வைக்கலாம் போல...!’ என குமுறியது. 

அவன் முகத்தை மீண்டுமாய் பார்க்க அவன் இப்பொழுது இவளைப்பார்த்தான். “ சாரி...”

அவன் சுய வருத்தம் மீறி இவளுக்காக வருந்த, அதன் பாரம் தாங்காமல்” நீங்க ஃபீல் பண்ணாதீங்க அபிப்பா...” என் ஆறுதல் சொல்லத்தான் குழைந்தது மனது.

“உங்க அப்பா....” அவன் முகம் பார்த்து முழுதாக கேட்க முடியவில்லை தயனிக்கு. தகப்பனை பறிகொடுக்கும் வலி அறியாதவளா அவள்? அவளை பற்றி இருந்த அவன் கையை பலமாக பற்றினாள் பெண்.

மறு நிமிடம் அவளை சுற்றி வளைத்தது அவனது ஒரு கரம்.

 “தயூமா..” அவன் முகம் இவள் யூகம் முற்றிலும் உண்மை என்பதை பறையறிவிக்க தயனிக்கு சர்வமும் மறந்துபோனது அவனது வலியைத்தவிர. பாவம் என்ன பாடு பட்டிருப்பான்? அங்கு அவன் அப்பாவுக்கு இறுதி சடங்கு....இங்கு இவள் மருத்துவமனையில்....

இவள் மனம் நோக கூடாது என இவளிடம் சொல்லாமல் சென்றிருக்கிறான்...

இத்தனையிலும் இவள் சுகத்தை பற்றி மட்டுமே கவனித்து இப்பொழுதுவரை அவன் சோகம் சொல்லவில்லை...

என் அபி..அந்த உணர்வு மனம் நிறைக்க மாமியாரைப் மனதிற்குள் அனுமதிக்காமல் முழுகவனமாக படி ஏறினாள்.

தங்கள் படுக்கை அறைக்குள் நுழைந்தனர்.

ரவி இருந்த படுக்கையில் சென்று விட்டான் தன் மனைவியை அபிஷேக். சாய்ந்து படுக்கவும் மனம் மீண்டும் சஞ்சலித்தது தயனிக்கு.

அடுத்தது என்ன? இந்த அத்தை என்னவெல்லாம் செய்ய கூடும்?

இவளோடு முழு தேகம் உரச, முகம் இவள் இட கழுத்தில் பதிய, அணைப்பாய் வந்து படுத்தான் அவனும் அருகில்.

“அபிப்பா...”

இவள் அழைப்பிற்கு பதிலாக தன் இட கரத்தால் அவளை மென்மையாய் வளைத்தான். ஆறுதல் தந்து ஆறுதல் கொண்டது அவ்வளைப்பு.

அவன் இதழ் கொண்ட மௌனம் இவள் இதயம் கொண்டது.

இது போதும்.

இவன் அருகாமை இது போதும்.

தூங்கிப்போனாள் தயனி.

மீண்டும் விழிப்பு வந்தபோது எதிரில் அவளது அத்தை இவளது லாக்கரை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவசரமாக அருகில் தேடினால் அணைத்திருந்தவனை காணவில்லை.

“ஹேய்....நீ...நீங்க...என்ன செய்ற...றீங்க...?” தயனி அலறலாய் அதட்ட

“ம்....தெரியலையோ? “ எந்த அதிர்வும் இல்லாமல படு அலட்சியமாக தான் செய்து கொண்டிருந்ததை தொடர்ந்தார் அபிஷேக்கின் அம்மா.

“பச்...தெரிஞ்ச எல்லாத்தையும் ட்ரை பண்னியாச்சு...இன்னும் ...” அத்தையம்மா தொடர அவசரமாக ஆக்ரோஷமாக இளையவள் எழுந்தாள்.

“இந்த மரகதவீணைக்காக உங்க அப்பாவ கொன்னு, இன்னும் என்ன பாடெல்லாம் பட்டாச்சு....அது என் கைக்கு வராம விடுவனாமா?” அவர் பேசிக்கொண்டு போக பற்றி எரிந்தது தயனிக்குள்.  உயிர் உடையும் வலி. மனதிற்குள் கடும் காற்றழுத்த தாழ்வு மண்டலம். இடமின்றி இடி, மின்னல், மழை. இழந்த எதுவும் இழப்பாக தோன்றவில்லை இதன் முன். அப்பா!!!

படுக்கையில் இருந்து பாய்ந்து இறங்கியவள் கால் வழுக்க..... “ஹேய்....” தடுமாறியவளை இடையோடு தாங்கிப் பிடித்தது அவளது அபிஷேக். பாத்ரூமிலிருந்து அப்பொழுதுதான் வந்து கொண்டிருந்தான் அவன்.

“என்னடா...நீ...” அவன் கரிசனையாகத்தான் கேட்டான், ஆனால் கொதித்துக்கொண்டிருந்த தயனிக்கு இன்னமும் கோபம் தான் கூடியது.

உங்க அம்மா...அந்த ராட்சசியை நான் சும்மா விடமாட்டேன்...”   இவள் அலறலில் அஸ்திவாரம் தொடங்கி ஆடியது அவ்வீடு.

அவன் பிடியை முரட்டுத்தனமாக விலக்க முயன்றாள் தயனி...எதிரில் நிற்கும் அந்த அத்தையை அடித்து துவைத்துவிடும் ஆத்திரம். ‘அப்பா...என் அப்பா..’ கொதிகலனாகியது மனம்.

அவனோ “தயனி!!!!” என்ற ஒரு அதட்டலுடன் அவளை ஆணின் முழுபலத்துடன் பிடித்தான்.

அபிஷேக்கின் அம்மாவோ புருவம் உயர்த்தி ஒரு அலட்சிய பாவத்துடன் பார்க்க இன்னுமாய் துடித்தாள் தயனி. அபிஷேக்கின் பிடி முன்னிலும் அதிகமாய்  இறுகியது. அதில் உடலும் கூடவே மனமும் வலித்தது அவன் மனைவிக்கு.

‘ஆக எப்படி பார்த்தாலும் அம்மாதான் அவனுக்கு முக்கியம். பின் இவள் எதுக்கு?’

“உங்கம்மாவை நான் சும்மா விட மாட்டேன்...” இப்பொழுது இவள் கத்தவில்லை அவன் கண்களை ஆழ பார்த்து முழு குரோதத்துடன் சொன்னாள். மூச்சிரைத்தது. இவள் கண்களை அப்படியே தன் பார்வையில் வாங்கிய அவன் மெல்ல தன் பிடியை தளர்த்திக் கொண்டான்.

“குரோதமும் பழிஉணர்ச்சியும் ஒரு நாளும் நல்லதில்ல தயனி” அமைதியாக ஆனால் அழுத்தமாக வந்தது வார்த்தைகள் அவனிடமிருந்து. அதுவும் இப்போ...” அவன் வாக்கியத்தை முடிக்க விடவில்லை தயனி.

“ஆங்....உங்கப்பா இறந்துட்டாங்கன்னா உங்களுக்கு வலிக்கும், நான் அதுக்காக எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க தயாரா இருக்கனும்.......ஆனா எங்கப்பாவ கொன்னுட்டாங்கன்னு தெரிஞ்சா கூட உங்களுக்கு சாதாரணமா இருக்கும்....அதுக்கும் எனக்கு எந்த உணர்ச்சியும் வரவே கூடாது என்ன?”

“இப்போ என்னதான் செய்யனுங்கிற நீ...?”

ஆராய்தலாய் இவளை அவன் பார்க்க,

நச்சென்று விழுந்தது அவள் நடு இதயத்தில் ஒரு வெட்டு.

அந்த ஒற்றை வரி இவளுக்கு இவன் தாய் செய்த அனைத்தையும் நியாயபடுத்தி விடவில்லையா?.

வள் அப்பா கொல்லபட்டது வரை அவனுக்கு தெரிந்திருக்கிறது...இருந்தும் இவள் வலி உணராமல்.....

எவ்வளவு எளிதாய் ‘சோ வாட்?’ என கேட்டுவிட்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.