(Reading time: 10 - 19 minutes)

 

நீ அழக்கூடாது இக்பால்..இதெல்லாம் நம்ம எல்லோரோட வருங்காலம் நல்லா இருக்கத் தான்..சரி எனக்கும் அப்பாவுக்கும் சத்தியம் பண்ணிக்கொடு..நீயும் குமரனும் இந்த ஊருக்காகவும் நாட்டுக்காகவும் அந்த நிலவறை பொக்கிஷத்தை உயிரை கொடுத்தாவது காப்பாதுவீங்கனு..எனக்கு இப்ப சத்தியம் பண்ணி கொடுப்பியா இக்பால்!” என்று அவனைத் தழுவி அழ ஆரம்பித்து விட்டார் பழனிவேலன்.

தன் கண்களிலும் நீர் வழிய மகனையே பார்த்துக் கொண்டிருந்தார் அப்துல்லா.

தன் தந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு,பின் பழனிவேலனின் கைகளைப் பிடித்து சத்தியம் செய்தான் அந்த பத்து வயதே நிரம்பிய இக்பால்.

“சரி அம்மா கிட்ட நாங்க சீக்கிரம் வந்திடுவோம்னு சொல்லு இக்பால்..நீ எதுக்கும் பயப்படக்கூடாது.நாங்க கெளம்பட்டுமா ?”என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டு அவனைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர் அப்துல்லாவும் பழனிவேலனும்.

அழுத படியே அவர்கள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இக்பால்.

ந்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன்,இந்த செய்தியை அரசாங்கத்திடம் சொல்லி,பணம் பெறலாம் என்று நினைத்தான்.யாருக்கும் தெரியாமல் விரைந்து சென்று ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டான்.

பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாய் தாம் தேடி வந்தது இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று நினைத்திடாத அந்த ஆங்கிலேய அதிகாரி ஸ்டீவ் பிரவுன் என்பவன் தனது ஆட்களை விட்டு அன்றிரவே அவன் கூறிய இடத்தில் தோண்டச் சொன்னான்.தேடி வந்த பொக்கிஷம் கிடைத்ததும் சொல்லவியலாத மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் துள்ளி குதிக்க ஆரம்பித்தான் பிரவுன்.

“ஐயா அப்புறம் எனக்கு...” பல்லை காட்டினான் அந்த தேசத்தின் விடம்.

“பாய்ஸ்! அரெஸ்ட் ஹிம் !” என்றான் பிரவுன் சிரித்தபடியே.

“ஐயா நான் என்ன தப்பு பண்ணேன் ...என்ன விட்ருங்க..ஐயா”என்று கதற ஆரம்பித்தான்.

அவன் சொல்வதை எதையும் காதில் வாங்காமல் அவனை பிடித்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான் “என்பதிற்கு ஏற்பே சுயநலமாய் சிந்தித்த ஒருவன்,அரசாங்க சிறையில் அழுது புலம்பிக்கொண்டிருந்தான்.

விஷயம் அறிந்த பழனிவேலனும் அப்துல்லாவும் ஒடிந்து போயினர்.இது எப்படி நடந்தது என்று அவர்கள் இருவரும் மாறி மாறி தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினர்.இனி என்ன செய்வது என்பதறியாமல் குழம்பித்தவித்தனர்.

“காத்து வைத்ததெல்லாம்

காற்றுக்கொண்டு போனதே!

உயிருருக்கிச் சேர்த்ததெல்லாம்

ஊருக்கில்லை என்றானதே!

நீதிசொன்ன என்மன்னன்

வாழுகின்ற வீடதுவே!

உடனதனைப் பெறாவிடில்

உறக்கமது விழிக்கில்லையே!”

என்று தன் உள்ளம் ஓடிய எண்ணங்களை நினைத்து நினைத்து துடித்து கொண்டிருந்தார் பழனிவேலன்.

“சரி வா கிளம்புவோம்” எழுந்து நின்றார் பழனிவேலன்.

எங்கே என்று கேட்க அப்துல்லாவிற்கு தோன்றவில்லை.ஏனெனில் அதையே தான் அவரும் நினைத்தார்.உடன் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அப்துல்லா.

“அப்துல்..”

“சொல்லு வேலா..”

“இன்னைக்கு நாம ரெண்டு பேர்ல யாரோட உயிர் வேணும்னாலும் போகலாம்”

“தெரியுமே வேலா”

“ஆனா நாம எதை இழந்தாலும் நம் குலப்பெருமையா இத்தன ஆயிரம் வருஷம் காப்பாத்தினத மட்டும் அவங்க கைக்கு போக விட்டுட கூடாது”

“ம்ம்..கண்டிப்பா அதை மீட்காம இந்த உயிர் போகாது”வேலனின் கைகளை இறுகி பிடித்துக் கொண்டார் அப்துல்லா.

“கொஞ்சம் இரு அப்துல்”என்று மீண்டும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்றார் வேலன்.

“இந்தா இதை மறந்துட்டியே! “என்று அப்துல்லா அணிந்திருந்த தலைத் தொப்பியை அப்துல்லாவிற்கு அணிவித்தார் வேலன்.

சிரித்தபடியே இருவரும் மரணத்தை தேடி சென்று கொண்டிருந்தனர்.

ரசாங்க அதிகாரிகள் தங்கும் இடத்தை இரவு பதினோரு மணிக்கு அடைந்திருந்தனர் அப்துல்லாவும் வேலனும்.

“எந்த அறைன்னு உனக்கு தெரியுமா வேலா?”

“இல்ல அப்துல்..ஆனா இங்க இருக்க 30 அறைல 15 அறை கவலாளிகளுக்குனு இங்க போட்டிருக்கு”

“இப்ப எப்படி உள்ள போறது?”

“இங்க பாரு ஒரு சின்ன புதர் இருக்கு.இது வழியா எதாவது வழி இருக்கானு பாக்குறேன் ..நீ இங்கேயே இரு அப்துல்”என்று சற்று நகர முற்பட்டபோது யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது.

“வேலா யாரோ வர மாதிரி இருக்கு..சீக்கிரம் ஒளிஞ்சிக்கோ “என்று காற்று வழி எச்சரித்தார் அப்துல்லா.

காலடி சத்தம் வெகு சமீபத்தில் கேட்க ஆரம்பித்தது.

விரைந்து சென்று புதரின் பின் ஒளிந்து கொண்டார் வேலன்.

அங்கே இருந்த அரசாங்க ஊர்தியின் பின் ஒளிந்து கொண்டார் அப்துல்லா.

யாரோ ஒருவரின் கைகள் தன் தோளின் மீது வைப்பதை கண்டு அதிர்ச்சியாகி மெல்ல திரும்பிப் பார்த்தார் அப்துல்லா.

அந்த இருட்டில் முகம் சரியாக தெரியாததால்,குழம்பிய அப்துல்லா “யாரது?”என்று கேட்க துணிந்த போது அவரின் வாய்கள் இன்னொருவரின் கைகளால் ஓசை வராதபடி இறுக்கி  மூடப்பட்டது.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:846}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.