(Reading time: 22 - 44 minutes)

டுத்த தினம் நிறைய மனநிறைவோடும்  எதிர்பார்ப்போடும் விடிந்தது அனைவருக்கும் .. காலை மணி 6 ஆகியும் எழாமல் இருந்தார் லக்ஷ்மி .. மனம் முழுவதும் ஷக்தியின்  ஞாபகங்கள் .. என்னத்தான் முகில்மதி, கதிர் இருவரும் அவர் பார்க்கும்  தூரத்தில் இருந்தாலும் அவர் மனதில் எப்போதுமே ஷக்திதான்  நிறைந்து இருந்தான் .. என்றாவது விடுமுறை என்று அங்கு வருபவனின் கை பிடித்து தடுத்து இனி போகாதே என்று சொல்ல துடிப்பார் அவர் .. ஆனால் அவனது சந்தோசம் அந்த வேலையில்  தான் இருக்கிறது என்பதினால் எதுவும் எதிர்த்து பேசவில்லை அந்த தாய் .. எனினும் சில நேரங்களில் அவரால் பிரிவாற்றாமையை எதிர்கொள்ளவே முடிவதில்லை ..

என்னை விட்டு இரண்டு எட்டு

தள்ளி  போனால் தவிக்கிறேன்

மீண்டும் உன்னை அள்ளி எடுத்து

கருவில் வைக்க நினைக்கிறேன் "

அண்மையில் கேட்ட பாடல்களில் அவருக்கு மிகபிடித்த பாடல் இது .. அவரும் இதுபோல தான் அவன் தன்னுடனேயே வைத்து கொள்ள வேண்டும் என்றே விரும்பினார் .. மனைவி இன்னும் எழாமல் படுத்திருப்பதை பார்த்து அவரது நெற்றியில் கை வைத்தார் நாராயணன் ..

" லக்ஸ் "

" என்னங்க ?"

" உடம்புக்கு ஏதும் பண்ணுதா ? ஏன் மா ஒரு மாதிரி இருக்க ?"

" ..."

" அச்சோ ஏன் அழற ? பெரியவன் ஞாபகம் வந்திச்சா ??"

" ஆமாங்க .. இன்னைக்கு புது வருஷம் .. என் புள்ள என்ன பண்ணுறானோ ? அவனை பார்க்கனும்னு மனசு துடிக்கிது "

Related Read: என்ன தவம் செய்து விட்டேன் – 04

"எனக்கு மட்டும் அப்படி இல்லையா லக்ஸ் ?? என்ன பண்ணுறது ? பசங்க வளர்ந்துட்டாங்க ... அவங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுறாங்க "

" ஆனா ... அவன் அங்க தனியா இருக்கானே "

" இன்னும் கொஞ்ச நாள் தானே லக்ஸ் .. அதான் நம்ம மித்ரா சொன்ன மாதிரி கடை திறக்குற வேலை ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்குல .. காலையிலேயே நீ இப்படி கண்ணை கசக்கிட்டு நிற்கலாமா ...? போ மா ... போயி குளிச்சிட்டு உன் புள்ள எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோ "

கணவரின் பேச்சை கேட்டு திவ்யலக்ஷ்மி கதவை திறக்கவும், ஷக்தியும்  முகில்மதியும்  அவர்களுக்கு காபி எடுத்து கொண்டு வரவும் சரியாய் இருந்தது .. என்ன நடக்கிறது என்று புரியாமலே மலங்க விழித்தார் லக்ஷ்மி .. நாராயணனும் இன்ப அதர்ச்சியில் இருந்தார் .. இருவருமே

" ஷக்தீ " என்று அழைக்க

" ஷக்திதான்  அப்பா .. ஏன்மா இப்படி பார்க்குறிங்க ? காபியை முதலில் பிடிங்க " என்று கொடுத்தான் .. அதை ஓரமாய் வைத்தவர் ஆசையாய் மகனின் தலை கோதினார் ..

" எப்போய்யா வந்த ? வரன்னு சொல்லவே இல்லையே " என்றவர் அதற்க்கு மேல் பேசவில்லை .. அவருக்கு பதிலாய் அவரது கண்ணீர்துளிகளே பேசியது .. பெற்றோரை கண்ட மகிழ்வில் அவனும் கண் கலங்கியே நின்றான் ..

" சரி ..போதும்மா .இப்படியே அழுதா நான் கெளம்பிடுவேன் சொல்லிட்டேன் " என்றான் ஷக்தி .. ஷக்தி வந்திருப்பது மித்ராவிற்கு தெரியுமா ? அவளை காணோமே என்று தேடினார் நாராயணன் ..

" எங்கடா என் மருமகள் ? " என்று அவர் கேட்கும்போதே

" இதோ வந்துட்டேன் மாமா " என்று அங்கு வந்து நின்றாள்  வைஷ்ணவி .. ஊதா நிற புடவையில் மிக அழகாய் இருந்தாள்  அவள் ..

" அடடே வாம்மா .. என்ன புடவை எல்லாம் கட்டி இருக்க ? அழகா இருக்கம்மா மகாலக்ஷ்மி  மாதிரி " என்றார் ..

லக்ஷ்மியும் " என் மருமக எப்பவும் அழகுதான் ... அப்டிதானே ஷக்தி " என்று அவனை கேட்டார் ..

" ம்ம்ம்ம்ம் " என்று அவன் எந்த முகபாவனையும் காட்டாமல் ஆமோதிக்கவும், சங்கமித்ரா அவர்கள் வாசலில் நிற்கவும்  சரியாய் இருந்தது . கண்கள் கலங்கிவிட அங்கேயே நின்றுவிட்டாள்  அவள் .. ஷக்திகாக  டீ  கொண்டு வந்தவள் அதை எடுத்துக் கொண்டு திரும்பி நடந்தாள் ...

 " ஹே பிசாசு " என்று அவள் தலையில் தட்டினான் அன்பெழிலன் ..

" நீ எப்போடா வந்த ?"

" நீ பாதி வழியில் திரும்பி வரும்போதே வந்துட்டேன் .. ஏன் என்னாச்சு இப்போ ?"

" அதெப்படிடா எனக்கு எதும்னா உடனே வந்து நிற்குற ?"

" பேச்சை மாத்தாம என்னாச்சு சொல்லுடி "

" அதை நான் சொல்லுறேன் " என்று அங்கு வந்தான் ஷக்தி .. துளைக்கும் பார்வையை மித்ரா மீதுசெலுத்திவிட்டு அவள் கையில் காபியை கொடுத்துவிட்டு தனக்காக அவள் கொண்டு வந்த டீயை வாங்கி கொண்டான் .. ஒரே நொடியில் பூவாய் மலர்ந்துவிட்டது மித்ராவின் முகம் ..

"எப்படி இருக்கீங்க ஷக்தி ?"

" நான் நல்ல இருக்கேன் அன்பு .. நீங்க ? ஆன்டி அங்கிள் நலமா ?"

பொதுப்படையாக இருவரும் பேசிக்கொண்டு இருந்தாலும் அடிகடி மித்ராவையே  பார்த்து கொண்டு இருந்தான் ஷக்தி .. தூக்கத்தில் இருந்து அதிரடியாய் எழுப்பிய தங்கையை துரத்தி கொண்டே வாசலுக்கு  ஓடி வந்த கதிர் அன்பெழிலனை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான் .. முகில்மதியொ  அவன் முகம் கண்டு காதலோடு ஒரு கள்ளப்பார்வை பார்த்து வைத்தாள் ..

" இப்படி கூட லுக்கு விடுவியா நீ " என்று எண்ணி வியந்தான் அன்பெழிலன் .. அதே நேரம் வாசலுக்கு வந்தார் மித்ராவின் தாயார் சித்ரா .. ஷக்தி, கதிர் , அன்பு மூவரையும் பார்த்த சந்தோஷத்தில் புன்னகையுடன் அங்கு வந்தார் .. அனைவரிடமும் பேசிவிட்டு காலைஉணவு உண்ண  வரும்படி அழைத்துவிட்டு சென்றார் .. கதிர் அன்புடன் பேசிக்கொண்டு வீட்டினுள் செல்ல முகில்மதி அவர்களை பின் தொடர்ந்தாள் ... ஷக்தியுடன்  தனியாய் நின்றாள்  மித்ரா ... அவன் இன்னமும் அவளை தாக்கும் பார்வையை பார்த்து கொண்டு நின்றான் ..

" எதுக்கு டா இப்படி முறைக்கிற நீ ?"

" ஏன் உனக்கு தெரியாதா ?"

" தெரியாது "

" ம்ம்ம் சரி "

" ஷக்தி "

" என்ன ?"

" ப்ச்ச்  ஆரம்பிக்காதே டா "

" ஹ்ம்ம் ஓகே "

" டேய் ..என்னை கடுப்படிக்காதே "

" நான் என்ன பண்ணினேன் ?"

" ஏன் உனக்கு தெரியாதா ?"

" உன்னை கொல்ல  போறேன் பாரு "

" சரி நேராவே கேக்குறேன், வாசல் வரைக்கும் வந்துட்டு ஏன் டீ திரும்பி போன ?"

" அது .. நீ ............ நீ அதை பார்த்துட்டியா ?"

" ஏன் பார்க்க மாட்டேன் .. அப்படியே ஓடிடலாம்னு நெனச்சியா ?"

" ஷக்தி "

" ம்ம் சொல்லுங்க லாயாரம்மா "

என்று  சொல்லி கை கட்டி நின்றான் ஷக்தி .. என்ன சொல்லுவது என்று விழித்தாள்  சங்கமித்ரா ..இங்கும் அங்கும் பார்ப்பது, பெருமூச்சு விடுவது, கூந்தலை சரி செய்வது இப்படி ஒரு நிலையில் இல்லாமல் இருந்தவளை மனதிற்குள் ரசித்தான் ஷக்தி .. ஆனால் முகத்தில் மட்டும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தான் .. ( நீங்க நிலா மேடமை விட கேடியாக இருக்கிங்களே ஷக்தி சார் .. )

" நீ வைஷ்ணவியை பார்த்துட்டுதான் உள்ளே வரலன்னு எனக்கு தெரியும் மித்ரா "

"...."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.