(Reading time: 10 - 19 minutes)

 

கையில் காபி டம்பளருடன், ஏதோ நினைவில் புன்னகைத்துக்கொண்டிருந்த மகனின் முகபாவம் அம்மாவுக்கு எதையோ புரியவைத்தது. தான் சொல்லிவிட்ட வார்த்தைகளின் ஆழம் மெல்ல புரிந்தது.

'சட்டென என்ன சொல்லிவிட்டேன் நான்? இது சரியாக நடக்குமா? தாயின் மனம் கொஞ்சம் பதறியது.

பொருளாதார நிலையில் இவர்கள் குடும்பத்திற்கும், அவர்கள் குடும்பத்திற்கும் இமாலய வித்தியாசம். இருந்தாலும் அது பெரிய பிரச்சனையாக தோன்றவில்லை. இறைவன் தேவைக்கும் அதிகமாக அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் போது, வீட்டுக்கு வரும் மகாலக்ஷ்மியிடமிருந்து பெரிதாக எதுவும் எதிர்ப்பார்க்க போவதில்லை. ஆனால் மற்றவை எல்லாம்????

கோதையின் அக்கா ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக ஞாபகம். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவருக்கு தெரிந்தவரை இந்த கோதை பள்ளிப்படிப்பைக்கூட முடிக்கவில்லை. இவன் பி.எச்.டி முடித்துவிட்ட நிலையில் இருவருக்கும் எப்படி முடிச்சு போடுவது???

முகத்தில் சிந்தனை கோடுகள் பரவ மெல்ல 'ஆனா.... 'என்றார் அம்மா.

ம்???? அம்மாவின் பக்கம் திரும்பினான் கோகுல்.

'இல்லைடா கண்ணா . அந்த பொண்ணு பிளஸ் டூ கூட பாஸ் பண்ணலைடா'

அப்படியா? என்றபடியே காபியை முடித்து விட்டு டம்பளரை சிங்கினுள் வைத்தான் கோகுல்.  அவளை பற்றிய ஒரு கூடுதல் தகவலாகத்தான் அம்மா சொன்னதை அவன் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். முன்பிருந்த அவனது முக பாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அம்மாவினுள்ளே சின்னதாய் ஒரு தவிப்பு. 'அவ கோவில், தியானம், பாட்டு அப்படின்னு இருக்கிற பொண்ணுடா. ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்கு நீ சரியா வர மாட்டேடா.'

ஒரு அழகான புன்னகையுடன் அம்மாவை நோக்கி திரும்பியவன், மலர்ந்து சிரித்தான். உள்ளம் கொள்ளை கொள்ளும் அழாகான சிரிப்பு.

சிரித்தபடியே சமையலறையை விட்டு வெளியேறினான் கோகுல். அந்த சிரிப்பின் அர்த்தம் என்னவாம்??? புரியாமலே நின்றிருந்தார் அம்மா.

நேரம் மாலை ஐந்து மணி.

தனது இரு சக்கர வாகனத்தில் பறந்துக்கொண்டிருந்தான் கோகுல். வீட்டில் பல கார்கள் இருந்தும், எப்போதுமே பைக்கில் பறப்பதையே விரும்புவான் அவன். பின் சீட்டில் அமர்ந்திருந்தான் அவனது நண்பன் சரவணன்

சரவணனின் தந்தையும், தாயும் கிராமத்தில் இருக்க, இங்கே சென்னையில் கோகுலுக்கு சொந்தமான கல்லூரியில்  வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறான் சரவணன். .இங்கே ஒரு சின்ன வீட்டில் தங்கி இருக்கிறான்.

ஏதாவது ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்பது சரவணனின் இப்போதைய லட்சியம். அந்த லட்சியத்தில் இந்த நிமிடம் வரை படு தோல்வி.

அந்த வேலைக்கு தேவையான மதிப்பெண்களோ, திறமைகளோ அவனிடம் இல்லை. தோல்விகள் அவனை நிறையவே காயப்படுத்தி இருந்தன.

'ஏன்டா சைலெண்டா வரே. ஏதாவது பேசு' கேட்டான் கோகுல்.

'பச். ஒண்ணுமில்லைடா'

அவன் குரலில் படிந்திருந்த வெறுமையை உள்வாங்கிய படியே சொன்னான் கோகுல் 'விடுடா. வருத்தப்படாதே  இந்த கம்பெனி இல்லையானா இன்னொண்ணு. நான் நாலஞ்சு வருஷமா நாட்டிலே இல்லையா, இங்க இருந்த டச்செல்லாம் விட்டு போயிடுத்து. அப்பாவுக்கு யாரையானும் தெரியுமான்னு கேட்கிறேன். கவலைப்படாதேடா ஏதாவது பண்ணுவோம்'.

'கவலை படலைடா. வெறுத்தே போயிட்டேன். இந்த நாட்டிலே ஜெயிக்கறவன் மட்டும் தான் ஆம்பிளைன்னு ஒரு கணக்கு. ஹீரோன்னா நிறைய படிச்சு இருக்கணும், ஸ்மார்ட்டா இருக்கணும், நிறைய பணம் இருக்கணும், எப்பவும் ஜெயிச்சிட்டே இருக்கணும். இது எதுவுமே என்கிட்டே இல்லையே. நானெல்லாம் ஜீரோதான்டா.

டேய்... நான் எத்தனை தடவை உன்கிட்டே சொல்லி இருக்கேன்..... கோகுல் எதோ சொல்லத்துவங்க.....

நீ சொல்லுவேடா. உனக்கென்ன??? நீ மகாராஜா. பிறக்கும் போதிலிருந்தே ஜெயிச்சிட்டே இருக்கே. என்னை மாதிரியா???? என்றான் முகத்தை சுருக்கிக்கொண்டு......

அவனுடைய கல்லூரி கால நண்பன் சரவணன் . இந்த நொடி வரை அவன் முன்னால் ஒரு பணக்காரனாக நடந்துக்கொண்டதே இல்லை கோகுல். அவன் பேசிய வார்த்தைகளில் ஒரு நொடி தன்னையும் அறியாமல் கோகுலினுள்ளே கொஞ்சம் கசப்பு பரவத்தான் செய்தது.

அதன் பிறகு எதுவுமே பேசவில்லை அவன்.

சரவணனின் சின்ன வீட்டின் முன்னால் அவனை இறக்கி விட்டான் கோகுல். நண்பனின் முகத்தை பார்த்த மாத்திரத்தில் மனதில் இருந்த இறுக்கமெல்லாம் தளர்ந்து போக புன்னகைதான் கோகுல்.

இறங்கியவன் கோகுலை கண்களால் அளந்தான். 'பளபளக்கும் செயின், மோதிரம், ப்ரேஸ்லெட், கண்களில் தைரியம், பேச்சில் தன்னம்பிக்கை. பணம் இருந்தால் எல்லாமே தன்னால் வந்துவிடுமோ?

சரி. நான் கிளம்பட்டாடா? பைக்கில் அமர்ந்தபடியே கேட்டான் கோகுல்..

எதுவுமே பேசவில்லை சரவணன். பைக்கின் மீதிருந்த கோகுலின் கையில் இருந்த ப்ரேஸ்லெட்டை மெல்ல வருடின சரவணனின் விரல்கள். 'தங்கமாடா?'

விழி நிமிர்த்தி அவன் முகம் பார்த்தான் கோகுல். பிடிச்சிருக்கா உனக்கு?

இல்லை. அதுக்கில்லை...

தனது கையிலிருந்து அதை கழட்டியே விட்டிருந்தான் கோகுல். 'இந்தா  போட்டுக்கோ'

டேய்... அதெல்லாம் வேண்டாம்டா....

போட்டுக்கோடா... அவன் கையை பிடித்து அதை அணிவித்தான் கோகுல்.

டேய்... எதுக்குடா?

'பிடிச்சிருக்கு இல்லையா? வெச்சுக்கோ' புன்னகைத்தான் அழகாக

கவலை படாம தைரியமா இரு. இனிமே நீ நினைக்கறது எல்லாம் நடக்கும். எல்லாம் கிடைக்கும். நான் இருக்கேன் சரியா.? நான் கிளம்பட்டுமா? வண்டியை கிளப்பிக்கொண்டு தனது வீட்டை நோக்கி பறந்தான் கோகுல்.

தே நேரத்தில், தனது வீட்டு வாசலில், கோலம் போட்டுக்கொண்டிருந்தன அந்த வளைக்கரங்கள். காலையில் கோகுலின் மனக்கதவை லேசாக தட்டிப்பார்த்த அந்த வளைக்கரங்கள்.

கோலத்தை முடித்துவிட்டு, அந்த மாயக்கண்ணன் வரவை நோக்கி, அவன் பாதங்களை வரைய துவங்கின அந்த கரங்கள். 

இன்று ஏனோ அப்படி ஒரு சந்தோஷம், பரவசம் அந்த வளைக்கரங்களுக்குரியவளின் உள்ளத்தில். சின்ன புன்னகையுடனே சின்ன சின்னதாய், அழகழகாய் ரசித்து ரசித்து வரைந்துக்கொண்டிருந்தாள் அந்த கண்ணனின் பாதங்களை.

கீதம் தொடரும்.....

Episode # 02

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.