(Reading time: 10 - 19 minutes)

மாலையில் வந்தவன் ஷ்யாமோடு விளையாடும்போது அவளையும் சேர்த்துக் கொண்டான். அவன் அலுவலக வேலையை வீட்டில் பார்க்கும் போது அவளை அருகிலேயே அமர வைத்தான். இரவு உணவிற்கு பின் சற்று நேரம் அம்மா அப்பாவோடு அரட்டை அடித்து விட்டு தங்கள் அறைக்குச் சென்றவன், ஷ்யாமை அவனுடைய அறையில் படுக்க வைத்தான்.

பால் எடுத்துக் கொண்டு வந்த மைதிலி திகைத்து நின்றாள். அவளை அணைத்து தன் அறைக்கு அழைத்து வந்த ராம் “மிது நீ நடுவில் படுத்துக் கொள்” என்றான்.

அவள் தயங்கவும் “நீயும், நானும் கணவன் மனைவி. நாமிருவரும் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டும். உன்னிடம் சொன்னது போல் நான் காத்திருப்பேன். ஆனால் விட்டுக் கொடுக்க மாட்டேன். உடை மாற்றி விட்டு பேசாமல் படு மிது.” என்றான்.

அவள் போய் உடை மாற்றி வரவும் அவளை உள்ளே படுக்க விட்டு அவள் அருகில் ராம் படுத்தான். முதலில் சற்று நேரம் தூங்காமல் இருந்தவள், அவன் அவள் தலையை வருடவும் ஆழ்நது உறங்கி விட்டாள். காலையில் அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கொரு பக்கம் அவள் மீது கையைப் போட்டுத் தூங்கினர். அவள் சற்று நேரம் அசையாமல் இருந்து விட்டு அவர்கள் உறக்கம் கலையாமல் எழுந்து விட்டாள். அவள் வெளியே வரும் போது விழித்திருந்த ராம் அவளை அணைத்து “தேங்க்ஸ் மிது…. நான்கு வருடங்கள் கழித்து நிம்மதியான உறக்கம்” என்றான். இதுவே தினமும் தொடர்ந்தது.

நாட்கள் சென்று கொண்டிருந்தன. சந்தோஷின் திருமணம் வந்தது. எல்லோரும் வழக்கம் போல் கலந்து கொண்டனர். ராம் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும், நெருங்கிய நண்பர்களின் விசேஷங்களுக்கும் மட்டுமே கச்சேரி செய்வான். சந்தோஷ் ராமின் உறவு மட்டுமல்ல, நெருங்கிய நண்பனும் கூட. அதனால் அவன் திருமணத்தில் கச்சேரி செய்தான். இந்த முறை அப்பாவும் பையனும் சேர்ந்து இரண்டு மூன்று பாடல்களை பயிற்சி செய்திருந்தனர்.

முதல்நாள் ரிசப்ஷன் போது கச்சேரியில் ராமின் காதல் பாடல்களே பிராதனம். “ராஜ ராஜ சோழன் நான், காதலின் தீபம் ஒன்று, என்னைத் தாலாட்ட வருவாளா, என் இனிய பொன் நிலாவே” போன்ற பாடல்களும், இடையிடையே “புது மாப்பிளைக்கு வந்த யோகமாடா, நூறு வருஷம்” போன்ற பாடல்களையும் பாட கச்சேரி களை கட்டியது. ஓரே ஆட்டம் கொண்டாட்டம் தான். ஷ்யாமிற்கு சில சின்ன பாடல்கள் சொல்லிக் கொடுத்து பாடச் செய்தான்

றுநாள் திருமணத்தில் ராமை ஸ்ருதிக்குச் சகோதரனாகச் சடங்குகளை செய்ய வைத்தனர். சடங்குகள் எல்லாம் முடிந்து சந்தோஷ், ஸ்ருதியுடன் மறு வீட்டிற்கும் சென்று வந்தனர். அவர்கள் மறுவீடு முடிந்து சென்னைக்குத் திரும்பிய அன்று ராமின் அம்மா, அத்தை குடும்பம் எல்லா பெரியவர்களும் வடஇந்தியாவிற்கு ஆன்மீக டூர் செல்ல முடிவு செய்தனர்.

ராமின் அம்மா கௌசல்யா “ராம் இந்த முறை நாங்கள் எல்லோரும் டூர் போகிறோம். அதனால் நீயும் மைதிலியும் வேறு எங்காவது சென்று வாருங்கள்”

“ஏன் அம்மா?”

“இல்லடா. இதுவரைக்கும் நீயும், மைதிலியும் தனியாக எங்கும் சென்றதில்லை. மேலும் சந்தோஷ்ம் ஹனிமூன் செல்கிறான். அதனால் நீ வேறு எங்காவது டூர் போட்டுக் கொள்” என்றார்

தாத்தா “அத்தோடு ஷ்யாமை நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” எனவும், மைதிலி “அவன் என்னை விட்டு இருக்க மாட்டானே தாத்தா” என்றாள்.

“அதெல்லாம் இருப்பான். எங்களோடு சபரி, சைதன்யாவும் அவர்கள் வீட்டுப் பெரியவர்களோடு வருகிறார்கள். அதனால் குழந்தைகளோடு அவன் விளையாடுவான். ஒருவாரம் தான். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

மைதிலி ராமின் முகத்தைப் பார்க்க, அவனும் அவர்களிடம் சொல்லிப் பார்த்தான். பெரியவர்கள் ஒரே பிடிவாதமாக ஷ்யாமை அவர்களோடு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டனர்.

இரவில் ஷ்யாம் உறங்கி விட மைதிலி பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். ஷ்யாமே அவளுக்கு எல்லாமாக இருந்தாலும் அவனை கைக்குள் அடக்க மாட்டாள். அவனின் மீது கவனத்தை மட்டும் வைத்து அவனை சுதந்திரமாக விளையாட விடுவாள். இரவிலும் அவனை தட்டி தூங்கச் செய்தால் போதும். இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளருகே ஊஞ்சலில் அமர்ந்த ராம் “மிது கவலைப்படாதே. வீட்டில் எல்லாரும் ஷ்யாமை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்” என்றான். அவள் ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தாள்.

“மிது உன்னிடம் நான் கொஞ்சம் பேசலாமா?” எனவும், மைதிலி என்ன என்பது போல் அவனைப் பார்க்க “ஸ்ருதியைப் பற்றி” எனவும், ஒரு நிமிடம் விரைத்தவள், பிறகு “சொல்லுங்கள்” என்றாள்.

தொடரும்

Episode 10

Episode 12

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.