(Reading time: 16 - 32 minutes)

சில நொடிகளில் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு புன்னைகைதான். எல்லாரையும் நோக்கி கரம் குவித்தான் 'மறுபடியும் எல்லாருக்கும் என்னுடைய நன்றிகள்'  எல்லாம் சரியாகி விட்டது என்பதை போன்ற நிம்மதி பரவியது அவனுக்குள்ளே.

அதே நேரத்தில் யாருமே அறியாமல் அந்த பெரிய கூடத்தின் ஒரு ஓரத்தில் இருந்து ஒரு பெண்மணியின் கண்கள் ரிஷியின் மீது, ரிஷியின் மீது மட்டுமே பதிந்து கிடந்தது. ஆனால்  அந்த பார்வையில் எந்த விதமான ஏக்கமோ, ஆசையோ, தவிப்போ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காவி நிறத்தில் மிக எளிமையான ஒரு சேலை. தங்க ஆபரணங்களின் ஒரு துளி அடையாளம் கூட இல்லாத ஒல்லியான தேகம். அன்பு மட்டுமே குடி இருக்கும் அமைதியான முகம். அந்த பெண்மணியின் பெயர் ஜானகி. இந்த மண்டபத்தில் இருப்பவர்களில், அவர் யாரென சரியாக அடையாளம் தெரிந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே.

எப்படியோ சமாளித்து கூட்டத்தை தாண்டி யாரும் கவனிக்காத வண்ணம் மேடையின் பின் பக்கம் வந்து ரிஷியை அருகில் பார்த்துவிட்டிருந்தார் அவர். ரிஷி நடித்த எந்த ஒரு திரைப்படத்தையும் இதுவரை பார்க்காமல் விட்டதில்லைதான் அவர். ஆனால் திரைப்படங்களில் இருப்பதை விட நேரில் அவன் இன்னமும் அழகாக, கம்பீரமாக இருப்பதை போலே தோன்றியது அவருக்கு.

மேடையின் மீது ரிஷியின் அருகில் நின்றிருந்தார் சந்திரிகா. மேடையின் மீது பரவியிருந்த புகையினாலே திடீரென இருமல் எழுந்தது அவரிடம். சில நொடிகள் தொடர் இருமல்.

பதறியே போனான் ரிஷி. அவரை ஓரமாக அழைத்து வந்து.... அவருக்கு தண்ணீர் கொடுத்து.... நெற்றியில் பூத்துவிட்ட வியர்வையை துடைத்து விட்டு.... சற்று தூரத்தில் இருந்து அவனை பார்த்துக்கொண்டிருந்த ஜானகியின் கண்களில் விழுந்தது இந்த காட்சி.

'அம்மா...  என்னமா ஆச்சு? என்னமா செய்யுது?

You might also like - Nesam niram maaruma.. Cute family drama

'ஒண்ணுமில்லடா... சாதாரண இருமல்தான்டா... இதுக்கு போய் ஏன்டா?

அம்மா... அதுக்கில்லைமா உனக்கு ஏதாவதுன்னா என்னாலே தாங்கிக்க முடியலைமா. ஒண்ணுமில்லைலமா' தவிப்புடனே கேட்டுக்கொண்டிருந்தான் ரிஷி.

பார்த்திருந்தார்.!!!! அதையே பார்த்திருந்தார்  ஜானகி.!!!!! தனது கண்கள் சந்தோஷத்தில் நிறைவதை அவராலேயே தடுக்க முடியவில்லை.

ஏதோ ஒரு உந்துதல் அவரிடம். தூரத்தில் இருந்து கொஞ்சமாக கையை முன் நீட்டி மானசீகமாக அவன் கன்னம் வருடி, தலை கோத விருட்டென அவர் இருந்த திசையின் பக்கம் திரும்பினான் ரிஷி.

யாரோ அவன் பெயர் சொல்லி அழைத்தது போல் தோன்றியது அவனுக்கு. வார்த்தைகளில் விவரிக்க முடியாத சிலிர்ப்பு அவனுக்குள்ளே பரவியது நிஜம். அவர் அவன் பார்வையில் படும் வாய்ப்பு இல்லை என்றாலும் இன்னமும் கொஞ்சம் மறைவாக நின்றுகொண்டார் அவர்.

நேற்றிலிருந்து இந்த மண்டபத்திலேயேதான் இருக்கிறார் அவர். ரிஷியின் ஒவ்வொரு அசைவுகளையும் அவனது சிரிப்பையும் அவனது திருமணத்தையும் கூட பார்த்து விட்ட நிறைவு அவரிடத்தில்.

நேற்று நடந்தவை எல்லாவற்றுக்கும் மௌனசாட்சியாக நின்றுக்கொண்டிருந்தார் அவர். எல்லாம் தெரிந்திருந்தும், அந்த குழந்தை யாரென புரிந்திருந்தும் எதையும் தடுத்து நிறுத்தும் சக்தி அவரிடத்தில் இல்லை. தன்னால் எந்த குழப்பம் விளைவதையும் எப்போதும் விரும்பியதில்லை அவர். சில நொடிகள் அங்கேயே நின்று பார்த்துவிட்டு சந்தோஷ புன்னகையுடனே அங்கிருந்து நகர்ந்தார் ஜானகி.

அதே நேரத்தில் செங்கல்பட்டில் இருந்த அவனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான் திவாகர்.  நடந்ததை அவனால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு தேவையான பணத்தை கொடுத்து எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்வோம் என்று சொல்லி அவனை அப்படியே திருப்பி அனுப்பி விட்டிருந்தார் அரவிந்தாட்சன்.

'எப்படியாம்??? இவர் வா என்றால் வர வேண்டும். போ என்றால் போய் விட வேண்டுமா?????' பொங்கியது அவன் மனம்.

அவனை பொறுத்தவரை குழந்தையை வைத்து ரிஷியை நெருங்கி விட வேண்டும் என்பதே அவனது லட்சியமாக இருந்தது. இவர்கள் எல்லாரும் இப்படி திடீரென ஒன்று கூடி விடுவார்கள் என்று அவன் எதிர்பார்திருக்கவில்லை. என்ன செய்வது என்பதை யோசித்தபடியே பயணித்துக்கொண்டிருந்தான் அவன்.

மாலை நான்கு மணி. மண்டபத்தை விட்டு கிளம்ப அனைவரும் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். ரிஷி குடும்பமும் எல்லாரிடமும் விடைபெற்று கிளம்ப தயாரானார்கள். காலையிலிருந்தே குழந்தையுடனே சுற்றிக்கொண்டிருந்தான் சஞ்சா. எல்லார் முன்னிலையிலும் அது கொடுத்த அந்த ஒற்றை முத்தம் அவனை மகிழ்ச்சியின் உச்சிக்கு தள்ளி இருந்தது.

'நான் கிளம்பறேண்டா'  குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த சஞ்சா - அஹல்யா அருகில் வந்து சொன்னான் ரிஷி.

'சரிடா ...'

'தீக்ஷாவை நான் கூட்டிட்டு போறேண்டா  ரெண்டு நாள் அவ என் கூட இருக்கட்டுமே.' என்று  ரிஷி சொன்னபோது அவர்கள் அருகில் வந்து நின்றாள் அருந்ததி.

உன் கூடா வா? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். என் பொண்ணு என் கூடவே தான் இருப்பா. என்னடா பட்டு செல்லம்???' தனது அருகில் நின்ற குழந்தையை இறுக்கமாக கட்டிக்கொண்டு சொன்னான் சஞ்சா.

'அதுக்கில்லைடா... இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் ஆயிருக்கு. உனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்டா. அவ கொஞ்ச  நாள் எங்ககூட இருக்கட்டுமே'

ஒரு முறை அஹல்யாவை பார்த்துவிட்டு ரிஷியின் பக்கம் திரும்பியது அவன் பார்வை . 'ஏன்டா மாப்பிள உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பத்து வருஷம் இருக்குமா?

ரிஷி அவள் பக்கம் திரும்ப சின்ன புன்னகையுடன் பார்வையை தாழ்த்திக்கொண்டாள் அருந்ததி.

'அதுக்கில்லைடா.. .' ரிஷி ஏதோ சொல்ல துவங்க

'எதுக்குமில்லை என் பொண்ணு என் கூடத்தான் இருப்பா. எல்லார் முன்னாடியும் அவ என் கூடத்தான் இருப்பான்னு சொல்லியாச்சு. இனிமே இதை யாராலேயும் மாத்த முடியாது.  நீ கிளம்பு...'

'சரி......  உன் பொண்ணுதான்டா. அதுக்காக அவ ரெண்டு நாள்கூட என்கூட இருக்ககூடாதா? நாம தீக்ஷா கிட்டேயே கேட்போம். அவ யார்கூட இருக்கணும்னு சொல்றாளோ அவங்க கூடவே இருக்கட்டும்' என்றான் ரிஷி. விடுவதாக இல்லை அவன்.

சஞ்சாவின் அணைப்பில் நின்றிருந்த குழந்தையின் அருகில் குனிந்து அதன் முகம் பார்த்து கேட்டான் ரிஷி ' பட்டு செல்லம் அப்பா வீட்டுக்கு கிளம்ப போறேன். தீக்ஷா அப்பா கூட வரியா? இல்லை டாடி கூட இருக்கியா?

மெல்ல திரும்பி சஞ்சாவின் முகம் பார்த்தது குழந்தை. பின்னர் அவனை விட்டு கொஞ்சம் விலகி நின்று ரிஷியின் முகம் பார்த்தது....... குழந்தையின் அழகான கண்கள் இங்கமங்கும் ஊஞ்சலாடி இருவரையும் தொட்டு தொட்டு விலக, பரிட்சையின் முடிவை எதிர்பார்க்கும் பரபரப்பு எல்லாரிடத்திலும்  '

சட்டென தனது சட்டை பையை துழாவி ஒரு சாக்லேட்டை கையில் எடுத்தான் சஞ்சா.

குழந்தையை நோக்கி அதை நீட்டி 'பட்டு செல்லம் டாடிக்கிட்டே வந்திடுங்க' என்றான் அவன்.

'டேய்... இது போங்காட்டம்...' என்றான் ரிஷி.

ஆனால் குழந்தை தனது இடத்தை விட்டு அசையவில்லை. ஏதோ யோசனையுடனே நின்றிருந்தது அந்த தேவதை. சில நொடிகளில் அதன் பார்வை ரிஷியினிடத்தில் நிலைத்தது. இதழ்களில் புன்னகை ஓட அதனை நோக்கி கை நீட்டி பார்வையால் அழைத்தான் ரிஷி. அடுத்த நொடி அவன் கரங்களில் தஞ்சமானாள் தீக்ஷா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.