(Reading time: 27 - 53 minutes)

08. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

ம்யுக்தா சென்னைக்கு வந்து ஏழு நாளாகிவிட்டது, முதல் இரண்டு நாட்களை போல் இல்லாமல் அடுத்த ஐந்து நாட்களும் உலகில் உள்ள மொத்த சந்தோஷத்தையும் அவள் குத்தகைக்கு எடுத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த அளவுக்கு அவள் தனிமையில் தவித்தாளோ... அந்த அளவுக்கு இப்போது சந்தோஷத்தில் திளைத்திருந்தாள்...  யாருடைய பிரிவுக்காக ஏங்கி அவள் தூக்கத்தை தொலைத்திருந்தாளோ.... இப்போது அவர்கள் அருகாமையில் இருந்து அந்த சந்தோஷத்திலேயே தூக்கத்தை தொலைத்திருந்தாள்...

ஆமாம் பகலிலே பிருத்வியோடும் மாலையில் கவியோடும் இருக்கும் சந்தர்ப்பம் அமைந்தது... அவளே எதிர்பார்க்காத ஒன்று... ஆனால் அப்போது அவளுக்கு தெரியவில்லை... புயலில் அடித்துக் கொண்டு வந்து அவள் மடியில் சேர்ந்த அந்த சந்தோஷம்... வெகு விரைவில் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப் போகிறது என்று....

Kadalai unarnthathu unnidame

முதலிலாவது நினைத்ததும் பார்க்க முடியாத தூரத்தில் இருந்து அவர்களுக்காக ஏங்கினாள்... ஆனால் இப்போது அவர்கள் அருகில் தான் இருக்கப் போகிறாள்... அதுவும் பிருத்வியின் வீட்டில் அவன் மனைவியாகவே இருக்கப் போகிறாள்... ஆனாலும் அவர்களை விட்டு பிரிந்து இருக்கப் போகிறாள் என்பதை அவள் அப்போது அறியவில்லை...

இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே சந்தோஷமாக இருப்பவர் யார்..??? என்ற கேள்விக்கு பதில் நான் தான் என்று யுக்தாவிடம் இருந்து தான் வரும்...

அன்று பிரணதியும் செந்தில் மாமாவும் அழைத்ததால் அவர்களை பார்க்கும் சாக்கில் பிருத்வியை பார்க்கலாம் என்று நினைத்தாள் யுக்தா... ஆனால் அங்கு போகவும் அவளுக்கு தயக்கம்... சங்கவியும் கூட யுக்தா அங்கு செல்வதை விரும்பவில்லை...

ஆனால் பகல் முழுவதும் தான் கூட இல்லாமல் தனியாக இருப்பது யுக்தாவிற்கு கஷ்டமாக இருக்குமே என்றும்.... சுஜாதா வளர்மதியின் நட்பை பற்றி சங்கவிக்கும் தெரியும் என்பதாலும் அவள் அங்கு செல்வதற்கு கவியே ஊக்கம் கொடுத்தாள்...

மறுநாள் கொஞ்சம் தயக்கமாக தான் அந்த வீட்டிற்கு சென்றாள் யுக்தா... ஆனால் அங்கு அவர்கள் பழகும் விதம் அவளை மாற்றி விட்டது... வளர்மதிக்கும் கூட தனியாக இருக்கும் சமயங்களில் யுக்தா வீட்டிற்கு வருவது நல்லதா என்று தோன்றும்... ஆனால் அவளை பார்த்துவிட்டாள் அதெல்லாம் மறந்துவிடும்...

சிறுவயதில் அவள் இங்கு இருந்தபோது சுஜாதா வேலைக்குச் சென்ற சமயங்களில் அத்தை... அத்தை என்று இவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த யுக்தாவை வளர்மதியால் எப்படி மறக்க முடியும்... அந்த பாசம் தானாகவே அவளுக்குள் வந்து விடும்...

பிருத்வியும் கூட முதல் நாள் போல் அவளிடம் ஒதுக்கம் காட்டவில்லை... நட்பாகவே அவளுடன் பேசினான்... புதிதாக ஒரு நண்பர்கள் அறிமுகம் ஆனால் எப்படி பேசிக் கொள்வார்களோ... அது போலத் தான் அவர்களும் பொதுவாக நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்கள்... அவர்களின் படிப்பு, பொழுதுபோக்கு, அவளின் நியூயார்க் நகர வாழ்க்கை, இருவருக்கும் இருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம், இதுபோன்று தான் அவர்களின் பேச்சு இருந்த்து...

ஆனால் சிறுவயதில் நடந்ததைப் பற்றி எதுவுமே பேசியதில்லை பிருத்வி... யுக்தாவிற்கோ பேசும் போதே தானாகவே சிறுவயதில் நடந்தவைகள் அவளை அறியாமலே அவள் வாயில் வந்து விடும்... அப்போது கூட அதற்கு ஆமாம் போட மாட்டான் பிருத்வி... இவளுக்கோ அவன் உண்மையிலேயே எல்லாம் மறந்துவிட்டானா என்று தோன்றும்...

மொத்தத்தில் இந்த ஐந்து நாட்கள் அவள் வாழ்வில் முக்கியமான நாட்கள்... காலையில் கவியுடன் அவளது ஸ்கூட்டியில் பிருத்வியின் வீட்டிற்கு வந்துவிடுவாள் யுக்தா... பிரணதி கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருப்பாள்... அதுவரை வளர்மதிக்கு உதவுவது.. பிருத்வியின் அறையில் இருந்து புத்தகம் எடுத்து வந்து படிப்பது... என்று பொழுதை கழிப்பாள்... அதன்பிறகு பிரணதி வந்ததும் அவளோடு அவள் பொழுது போகும்... சைட்டில் வேலை இருப்பதால் பிருத்வியும் மதியம் சாப்பிட வீட்டிற்கு வருவான்...

பிறகு பிரணதி யுக்தாவோடு அவனும் கலந்து கொள்வான்... சுஜாதாவும் சிறிது நேரம் அங்கு வந்து இருப்பாள்... மாலை நேரங்களில் செந்திலோடு இருவரும் வீட்டிற்கு செல்வார்கள்... செந்தில் இல்லாத சமயத்தில்.. சுஜாதா வராத தினங்களில் பிருத்வியே யுக்தாவை அழைத்துச் செல்வான்.

மாலையிலோ கவி அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவர்கள் செல்ல வேண்டிய கல்யாணத்திற்கு தேவயான உடைகள் வாங்குவது... அதை தைக்க கொடுப்பது... அதற்கேற்ற நகைகள் வாங்குவது... அருகில் உள்ள கோவிலுக்கு செல்வது... கடற்கரைக்கு செல்வது... என்று அவர்கள் இருவரும் மகிழ்ந்திருந்தனர்... சில சமயங்களில் பிரணதியும் அவர்களோடு இணைந்து கொள்வாள்.

இப்படியே ஐந்து நாட்கள் அவளுக்கு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் கடந்து போனது... அதிலும் அந்த கடைசி இரண்டு நாட்கள் அவள் மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்...

அன்று சுஜாதாவுடன் தான் பிருத்வியின் வீட்டுக்கு வந்திருந்தாள் யுக்தா... வளர்மதியும் சுஜாதாவும் ஏதேதோ பேசிக் கொண்டே வேலை செய்துக் கொண்டிருந்தனர்... யுக்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்... அப்போது செந்தில் அங்கு வந்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.