(Reading time: 18 - 36 minutes)

காவேரி அறையிலிருந்து வெளிவந்த மகத்தின் கண்கள் ருணதியை தேட, அவள், நீர்வீழ்ச்சியின் பக்கம் சென்று கொண்டிருந்தாள்…

பிரபுவும், விஜய்யும் பேசிக்கொண்டிருக்க, பவித்ரா குழந்தைகளை கவனிக்க போவதை பார்த்த மகத், ருணதியின் பின் சென்றான்…

ருணதி மனதினுள் கலக்கத்துடன், நீர்வீழ்ச்சியின் முன்னே நின்று கொண்டு அதனையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த போது,

“இங்க என்ன பண்ணுற?...” என்ற மகத்தின் குரல் அருகே கேட்க, திரும்பி பார்த்தாள்…

மகத்தினை அருகினில் பார்த்ததும் மனதில் இருந்த கலக்கம் ஒரு விநாடி அகலுவதை உணர்ந்தவள், அவனிடமிருந்து பார்வையை விலக்கினாள்…

“உன்னை தான் கேட்டேன்… இங்க என்ன பண்ணுற?...”

“ஒன்னுமில்லை… சும்மாதான்…” என அவளும் சுரத்தே இல்லாமல் பதில் சொல்ல, அவன் பார்வை கூர்மையாகியது…

“நிஜமாவே ஒன்னுமில்லையா?...” என ஆழ்ந்து கேட்க, அவள் விழிகள் சட்டென்று அவன் விழிகளை சந்தித்தது…

“சொல்லு…. ஒன்னுமே இல்லையா?...” என அவன் குரல் கேட்டதும், அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவளின் கால் சட்டென்று பின் வாங்கியது…

அவளின் செயலை கவனித்தவன், என்னாயிற்று?... என்ற யோசனையுடன் அவளைப் பார்க்க, அவள் கால்கள் மேலும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது…

மனதில் எதுவோ உறுத்த, சட்டென பின்னாடி திரும்பி பார்த்தவன் கன்யா தன்னை நோக்கி வருவதைக் கண்டான்…

“பாட்டி… எப்படி இருக்குறாங்க?... கேள்விப்பட்டேன்… பயப்படும் படி எதுவும் இல்லையே..?”

“நல்லா இருக்குறாங்க… பயப்படும்படி எதுவுமில்லை…”

“ஓகே.. தேங்க்ஸ்… நான் அவங்களை பார்க்க போனேன்… அவங்க தூங்கிட்டு இருந்தாங்க… அதான் தொந்தரவு பண்ணாம இங்க வந்து கேட்டேன்… ஏன்னா மத்தவங்க கிட்ட கேட்டா பதில் சொல்லமாட்டாங்க…”

“பரவாயில்லை… பதில் சொல்லுறது என் கடமை…”

“சரி… நான் வரேன்….” என்றபடி அமைதியாக சென்றவள், மறந்தும் கூட ருணதி இருந்த பக்கம் திரும்பி பார்க்கவில்லை…

அவள் சென்றதும், சற்று நேரம், மகத்திற்கே, இது கன்யாதானா?.. என்ற சந்தேகம் உதித்தது… ருணதிக்கோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி…

கன்யா சென்றதும், அவள் சென்ற வழியையே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த ருணதியின் பக்கம் வந்தவன்,

“அவ போயிட்டா… இப்போ சொல்லு….” என்றான்…

“என்ன சொல்லணும்?...” என அவளும் பதிலுக்கு கேட்க

“ஒன்னுமே இல்லையா?... சொல்லுறதுக்கு?...” என கேட்டான் அவனும் அமைதியாக…

கொஞ்சம் அவனின் கேள்வியில் கரைந்தவள், சுதாரித்து, “இருக்கு…” என்றாள் அழுத்தத்துடன்…

“அப்போ… சொல்லுடா…” என அவன் கனிவாக சொல்ல, அவள் அவனில் பேச்சில் தன்னிலை மறக்க ஆரம்பித்தாள்…

“வந்து….” என இழுத்தவள், பின் ஒரு முடிவுடன் திடமாக, “கன்யா தான அவங்க பேரு?... அவங்க அமைதியா போறாங்கன்னா கண்டிப்பா அன்னைக்கு நடந்த சம்பவம் அவங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக்குறேன்… நீங்க ஏன் அவங்ககிட்ட பேசி அவங்க மனசை மாத்த முயற்சி பண்ணகூடாது?... அன்னைக்கு இருந்தவங்க தானா இன்னைக்கு நான் பார்த்ததுன்னு எனக்கே சந்தேகமா இருக்கு… பாவம், எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத நிலைமை அவங்களுக்கு வந்துட்டு… மனசால ரொம்ப காயம் பட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்… போய் பேசுங்க… அவங்களோட சந்தோஷமா வாழ முயற்சி பண்ணுங்க…” என சொல்லி முடித்ததும்

“அவ்வளவுதானா?...” என கேட்டான் அவன் தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி…

“ஆமா…” என்றபடி தலை அசைத்தவளை இமைக்காது பார்த்தவன்,

“எனக்கு தெரிஞ்ச கிருஷ்ணாவுக்கு பொய் சொல்ல தெரியாது… அதும் எங்கிட்ட சொல்லவே தெரியாது… மறைக்கவும் தெரியாது…” என்றான் அவள் முகம் பார்த்தபடி…

அவள் வலியுடன், அவன் விழிகளை சந்திக்காது நிலம் பார்க்க,

“ஆனா, மதுரையில நான் கடைசியா பார்த்து பேசினப்பவும் பொய் தான் சொன்னா… இப்ப இந்த நிமிஷமும், உண்மையை மறைக்க தான் பார்க்குறா…. அது எனக்கும் நல்லா தெரியும்… தெரிஞ்சும், நான் எதுவும் கட்டாயப்படுத்த மாட்டேன்… அவளா சொல்லுற வரைக்கும்…” என அவன் உறுதியுடன் சொல்ல, அவள் சட்டென நிமிர்ந்தாள்…

“இந்த கண்ணுல எனக்கு தெரிஞ்சி பொய்யே தெரியாது… ஆனா இப்போ சத்தியமா உண்மை தெரியவே இல்லை…” என்றதும், அவள் விழிகள் கலங்கியது…

கலங்கிய அவள் விழிகளை கண்ட அவனது விழிகள் தானாகவே கலங்க ஆரம்பிக்க,

“கண்டிப்பா கிருஷ்ணா சொல்லுவா… எங்கிட்ட… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு நிறைய…” என்றதும், அவள் விழி நீர் வழிந்தது கன்னங்களில்…

“நான் சொன்னேன்ல… நம்பிக்கை இருக்குன்னு… அதுக்கு ஆணி வேரே இந்த கண்ணீர் தான்… சீக்கிரமே சொல்லுவா…” என அவன் நகரப்போகையில்,

“நம்பி மோசம் போகாதீங்க…” என்றாள் அவள் நிலம் பார்த்தபடி…

“அப்படி ஒன்னு எப்பவும் நடக்காது… ஏன்னா அவளோட சகிகிட்ட அவளால மறைக்க முடியாது… சொல்லாம இருக்க முடியாது… மோசம் பண்ணவும் தெரியாது…. நீ கேட்கலாம்.. இதுக்கு முன்னாடி சந்திப்புல ஏதேதோ காரணம் சொல்லிட்டு தான பிரிஞ்சி போய் மோசம் பண்ணினான்னு… இப்பவும் சொல்லுறேன்… அவ என்னை விட்டு விலகி தான் போனாளே தவிர, மோசம் பண்ணலை… ஏன்னா அவளுக்கு அப்படி எல்லாம் செய்ய தெரியாது…”

“மறைச்சா தான்… சில விஷயங்கள்… இப்பவும் மறைக்கத்தான் முயற்சி செய்யுறான்னு எனக்கும் நல்லாவே தெரியும்… இருந்தாலும், அவளுக்காக அதை ஏத்துப்பேன்… வலியாவே இருந்தாலும், அவ தந்தா எனக்கு அது சந்தோஷம் தான் என்னைக்கும், எப்பவும்…” என்றவன் அவள் அவனை பார்த்துக்கொண்டே இருக்கும்போதே அங்கிருந்து வேகமாக அகன்றான்…

அவன் சென்றதும், முகத்தை மூடி அழுதவள் மீது ஒரு கரம் விழ, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அவள்…

“என்னாச்சு ருணதி?... ஏன் அழறீங்க?...” என கேட்டபடி பவித்ரா அங்கே நிற்கவும், அவளிடம் எதுவுமில்லை… என்றபடி தலையசைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடினாள் ருணதி…

நேரே குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வந்து அமர்ந்தவள், கண்கள் மூடி அமர்ந்திருந்த போது, தன் கன்னத்தில் வழிந்திருந்த நீரை ஒரு பிஞ்சு கரம் துடைப்பதை அறிந்து இமை திறந்தாள் அவள்…

“என்னாச்சு ஆன்ட்டி?... ஏன் அழறீங்க?... அழாதீங்க…” என்றபடி நதிகா அவளின் கன்னத்தினை வருடி கொடுத்து துடைத்துவிட, ருணதி அவளின் கரத்தினைப் பிடித்தாள்…

“அழாதீங்க ஆன்ட்டி… எதுன்னாலும் எங்கிட்ட சொல்லுங்க… நான் என் துருவ் கிட்ட சொல்லி சால்வ் பண்ண சொல்லுறேன்…” என நதிகா சொன்னதும், அவளை புரியாமல் பார்த்தாள் ருணதி…

“துருவ்னா உங்க பையன் இல்ல… என் அப்பா துருவ்…” என சொல்ல, ருணதிக்கு அழுகை அவளை மீறி வெளிப்பட்டது…

“எனக்கு எதுவும் இல்லடா… கண்ணுல நிறைய தூசி விழுந்துட்டு… அதான் ஆன்ட்டி அழறேன்…” என ருணதி நதிகாவிற்கு எடுத்து சொன்னதும்

“கண்ணைக் காட்டுங்க ஆன்ட்டி… நான் ஊதி விடுறேன்…” என நதிகா அவள் கண்களில் ஊதிவிட்டு,

“தூசி போயிடுச்சா ஆன்ட்டி?...” எனக் கேட்டாள்…

“போயிடுச்சும்மா…. நீ போய் விளையாடு…” என நதிகாவை அனுப்பி வைத்தவள், முகத்தினை அழுந்த துடைத்துவிட்டு காவேரியைத் தேடிச் சென்றாள்…

அவர் அப்போதுதான் எழுந்து அமர்ந்திருந்தார்…

“எப்படி இருக்குறீங்க மேடம்… இப்போ பரவாயில்லையா?...” என அவள் நலம் விசாரிக்க, அவரும் நலம் என்றார்…

“எனக்கு நாளைக்கு ஒருநாள் லீவு வேணும் மேடம்….. தருவீங்களா?...” என கெஞ்சலுடன் கேட்ட ருணதியைப் பார்த்தவருக்கு, அவள் அழுத முகமே சொன்னது அவளுக்கு சற்று ஆறுதல் தேவை என…

“சரிம்மா… நீ எடுத்துக்கோ…” என்றதும், நன்றி சொல்லிவிட்டு ருணதி சென்றபின், பவித்ராவை அழைத்து பேசினார் காவேரி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.