(Reading time: 8 - 15 minutes)

 

கோயிலின் உள்ளே விளக்கு ஏதும் ஏறிவைக்கப் படாமையால் அந்தினேர அரைகுறை வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்தது.

உள்ளே கால் வைத்தாள் ஹேமாவதி.அரைகுறை வெளிச்சத்தில் உக்கிர காளியின் முகம் மிகப் பயங்கரமாய்த் தெரிந்தது.அத்தோற்றம் பார்த்து மருண்டாள் ஹேமாவதி.அவள் பார்வை காளியின் பாதம் வரை வந்து தரையைத் தொட்டது.ஆ..இதென்ன..?நிலத்தில் இரண்டு உடல்கள் அல்லவா கிடக்கின்றன.அவை உயிரோடுஉள்ளனறா அன்றி இறந்த உடல்களா? பயமும் பீதியும் உறைய வைக்க முன் நோக்கி ஓரடி வைத்தாள் அவள்.கால்களில் ஏதோ பிசுபிசித்தது.வழுக்கியது.குனிந்து பார்த்தாள் அது குருதி என யூகிக்க முடிந்தது.அப்படியானால்..அப்படியானால் இவை உயிரற்ற உடல்களா?அண்ணனும் கணவனும் இங்கே இருப்பதற்கான சுவடே இல்லையே?எங்கே சென்றிருப்பார்கள்?என்று பயத்துடன் யோசித்தவளின் கண்களில் பட்டது அண்ணனின் தலையற்ற முண்டம்.கண்களை நம்ப முடியாமல் மீண்டும் பார்த்தபோது அது அண்ணனின் வெட்டுண்ட கழுத்தில்லா முண்டம்தான் என்று புரிந்துபோனது.

ஐயோ!! அண்ணா என்று கத்தியபடியே அதனை நோக்கி ஓடினாள்.

அப்படி அம்முண்டத்தை நோக்கி ஓடியபோது உடலில்லா கழுத்தொன்று அவள் காலை இடறியது. அரைகுரை வெளிச்சத்திலும் அம்முகம்..அம்முகம் அவளின் கணவன் முகம் போலத்தெரிய பதறிப்போனாள் ஹேமாவதி.இரு உடல்களும் கிடக்கும் இடம் சென்றவள் அவற்றை உற்றுப் பார்க்க அவை தன் அண்ணன் தன் கணவர் ஆகியோரின் உடல்கள்தான் என்பதை உணர்ந்தாள்.

ஐயோ!ஐயோ!! என்ற அவலக் குரல் அவள் தொண்டையிலிருந்து புறப்பட்டது.அதன் பிறகு அவள் அவளாய் இல்லை.பைத்தியக்காரி போல் கத்த ஆரம்பித்தாள்.நிலத்தில் விழுந்தாள்.. புரண்டாள்..கத்தினாள்.. அழுதாள்..காளியை நோக்கி அவளை பலவாறு ஏசினாள்..நியாயம் கேட்டாள்..நீயெல்லாம் ஒரு தெய்வமா என்று பழித்தாள் பின் அவளிடமே நான் என் செய்வேன் இனி நான் என்செய்வேன் என தொழுது அழுதாள்.இவ்வாறு அவள் அழும் சோகக் குரலைலைக்கேட்டு ஆறுதல் படுத்த அங்கே பாவம் யாருமே இல்லை.

வெகு நேரம் அழுது துடித்தபடி இருந்த ஹேமாவதி கடைசியாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.அண்ணனும்,கணவனும் எந்தக் கத்தியால் வெட்டப்பட்டார்களோ அந்த ரத்தம் படிந்த கீழே கிடந்த கத்தியை எடுத்து இனி நான் வாழ்வதில் பயனில்லை என் கணவரின் உயிரும் அண்ணனின் உயிரும் எவ்விடம் சென்றனவோஅவ்விடமே என்னுயிரும் செல்லட்டும் எனச் சொல்லியபடியே அக்கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளத் துணிந்தாள்.

அப்போது..மகளே நில்..என்ற குரல் அசரீரியாய் ஒலித்தது.வினாடி நேரம் நிறுத்தினாள் ஹேமாவதி..அசரீரி தொடர்ந்தது.மகளே....உன் நிலை மிகவும் கொடியது.ஆயினும் விதியை வெல்ல அதன் விளையாட்டை நிறுத்த யாரால் முடியும்..என்னால் மட்டுமல்ல எந்த தெய்வத்தாலும் இயலாது.ஆயினும் உனக்கு உதவவே நான் விரும்புகிறேன்.நான் செய்ய விழையும் உதவியை நீ சரியாக பயன்படுத்திக்கொள்வாயாக..உருண்டு கிடக்கும் இரு சிரசுகளையும் எடுத்து இரு உடல்களோடும் பொருத்தி இதோ என் பாதங்களின் கீழிருக்கும் செம்பிலிருந்து நீரை எடுத்து பொருத்தியிருக்கும் கழுத்துப் பகுதியில் தடவு அவர்கள் உயிர் பெற்று எழுவார்கள் என்ற் சொல்லி அசரீரி நின்றது.

இருட்டு கொஞ்சம் அதிகமாகக் கவிழ்ந்துவிட்ட நேரம்.ஏற்கனவே படபடப்பும் பதை பதைப்பும் பதற்றமும் அழுகையும் புலம்பலும் பீதியும் பயமுமாய் இருந்த ஹேமாவதி இங்கும் அங்குமாக இன்னொரு தலையைத் தேடினாள்.தேடி அகப்பட்ட அந்த தலையைக் கொண்டுவந்து ஒரு முண்டத் தோடு பொருத்தினாள்.ஏற்கனவே கண்ணில் பட்டிருந்த மற்றொரு தலையை எடுத்து இன்னொரு முண்டத்தில் வைத்தாள்.பததை பதைப்பும் அவசரமும் போட்டி போட எப்பேற்பட்ட தவற்றைத் தாம் செய்கிறோம் என அறியாமல் செம்பிலிருந்த நீரைக்கொண்டுவந்து தலை பொருத்தப்பட்ட இரு உடல்களின் கழுத்துப் பகுதியில் தடவ தூங்கி எழுவது போல் குணசேகரனும் சுந்தரேசனும் எழுந்து உட்கார்ந்தார்கள்.மொத்தமாய் இருட்டு பரவி அவ்விடமே காரிருளால் சூழ்ந்தது.

உயிரோடு எழுந்த அவ்விருவரையும் கட்டித் தழுவினாள் ஹேமாவதி.நடுவில் ஹேமாவதியும் அவளின் இரு கரங்களையும் ஆளுக்கொன்றாய்ப் பற்றியபடி குணசேகரனும் சுந்தரேசனும் ஆக மூவருமாய்க் கோயிலிலிருந்து வெளியே வந்தார்கள்.வெளியே வரும்வரை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவில்லை.

வெளியே நிலவு சோகையாய் ஒளிவீசிக்கொண்டிருந்தது.ஹேமாவதி..அழைத்தான் குணசேகரன்..அழுதழுது களைத்துப்போய் பேசச் சக்த்தியற்றுப் போயிருந்த ஹேமாவதி கணவரின் அழைப்பைக்கேட்டு குரல் வந்த பக்கம் திரும்பி அவன் முகத்தைப் பார்க்க முகத்தைப் பார்த்தவளின் பார்வை அவன் கழுத்திற்குக் கீழே இறங்க...ஐயோ இதென்ன விபரீதம் என்று கத்தியபடியே வேரறுந்த மரம் போல மயங்கிச் சாய்ந்தாள் நிலத்தில்.

 

இதென்ன விபரீதம் என கணவரின் முகம் பார்த்து ஹேமாவதி மயங்கிச் சாய என்ன காரணம்..?

அடுத்த வார பார்ப்போமா அந்த விபரீதத்தை?.. நன்றி..

மீண்டும் போய் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான் அம்மனிதன்...அக்கொலைகாரன்.விதி சந்தோஷப் பட்டது.அடுத்த நகர்வுக்காகக் காத்திருந்தது.

தொடரும்...

Episode 10

Episode 12

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.