(Reading time: 9 - 18 minutes)

ன் வீட்டையும் ஊரையும் தாண்டி அவள் பெரும்பாலும் சென்றதில்லை. சிறு வயதில் உறவினர்கள் வீட்டிற்குச்  சென்றிருக்கிறாள். பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து சாலையை பார்த்தபடி செல்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவள் தொலைக்காட்சி கண்டதில்லை, வானொலி கேட்டதில்லை. ஏன், வாழ்க்கை என்னவென்று கேட்டாலும் கூட அவளால் பதில் சொல்ல முடியாது. எல்லா பெண்களும் நம்மைப் போன்று தான் வளருவார்கள் என அவள் குருட்டுத்தனமான நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்.

ஈராக்கைத் தாண்டி இந்த உலகம் எவ்வாறு இருக்கும்? அந்த மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களது ஆசாபாசங்கள், வேதனைகள் எதுவுமே அறிந்திராத பெண்ணாக அவள் இருந்தாள். சில நேரங்களில் அவள் யோசிப்பதுண்டு. இந்த உலகைத்தாண்டி பறந்து செல்லமுடியுமா? இரவில் சுடர்விடும் நிலவுக்குள் ஒளிந்துகொள்ள முடியுமா? எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியுமா? இது போல பல கற்பனைகளோடு தூக்கத்தை மறந்து இரவுகளை கழித்திருக்கிறாள்.

வெளியுலகத் தொடர்பும் பள்ளிப் படிப்போடு நின்றுவிட்டதால், இது போல கற்பனைகளே அவளது பொழுதுபோக்குகள். இதை யாரிடமும் அவள் பகிர்ந்துகொண்டதில்லை. தன் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு கற்பனை உலகில் மிதப்பாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

தனிமை, ஓவியம், கற்பனை இவைகளுடனேயே தன் வாழ்நாளை கழித்து வந்த அமேலியாவிற்கு சிறிய விடுதலை கிடைத்தது. அவள் பக்கத்துக்கு வீட்டில் அம்ரின் என்னும் நடுத்தர வயது பெண்மணி குடிபுகுந்தாள். கார் குண்டு வெடிப்பில் தனக்கென இருந்த கணவரையும் இழந்த அம்ரின் மனநிம்மதிக்காக, இருந்த ஊரை விட்டு இந்த ஊருக்கு வந்தாள்.

அம்ரின் மருத்துவர் என்பதனால் பகல் முழுதும் தனது கிளினிக்கிலேயே இருப்பாள். வீட்டு வேலை செய்ய அவளுக்கு நேரமில்லை. அதனால், அமேலியாவின் தாயாரிடம் வீட்டு வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்களா என கேட்டறிந்தாள்.

அமேலியாவின் தாய் பாத்திமா தன் மகளை அம்ரினின் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினாள்.

குழந்தை இல்லாத  அம்ரினுக்கு அமேலியாவை பிடித்துப்போனது. தன் வாழ்நாளில் நடந்த சுகதுக்கங்களை அமேலியாவுடன் பகிர்ந்துகொண்டாள் அம்ரின். கணவருடன் சேர்ந்து பல நாடுகளை சுற்றிப் பார்த்திருப்பதைக் கூறினாள். அங்கிருக்கும் இயற்கை சூழல்கள், சுதந்திரம், அந்த மக்களின் வாழ்க்கை என அவள் சொல்லிக்கொண்டே போக தானும் அதை எல்லாம் பார்க்கவேண்டும் என்று விரும்பினாள் அமேலியா.

அவள் கற்பனை ஊற்று பெருகிற்று. அம்ரின் சொன்ன கதையில் உள்ள நாடுகள் எவ்வாறு இருக்கும் என மனதிற்குள் எண்ணி, ஓவியமாய் தீட்டினாள். அந்த ஓவியம் இவ்வாறாக அமைந்தது.

சுற்றி மரங்கள் இருக்கும் இடம். அந்த இடத்தின் நடுவே சிறிய அளவிலான ஒரு வீடு. அந்த வீட்டைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருந்தது. வீட்டு வாசலில் பூச்செடிகள், வீட்டைச் சுற்றி புல்வெளிகள், ஒரு ஊஞ்சல், அந்த ஊஞ்சலில் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தை விளையாடுவதை ரசித்துக்கொண்டிருந்தனர்.

அமேலியா அந்த குழந்தையாகவே தன்னை கற்பனை செய்து கொண்டாள். ஆஹா! அதில் தான் எத்துனை இன்பம்.  அவளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. இதுவரை தான் வரைந்த ஓவியத்திலேயே இது தான் முழுமையான ஓவியம் என அவள் கருதிக்கொண்டாள். அன்று முதல் அமரின் சொல்லும் கதையை எல்லாம் கவனமாக கேட்டாள். அவள் கூறிய கதையில் வரும் காட்சிகளை ஓவியமாக தீட்டினாள்; இன்பம் கண்டாள்.

அமேலியாவை தன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் அமரின். நோயாளிகளை அமரின் பரிசோதிக்கும் போது அவளுக்கு எடுபிடியாக இருந்தாள். சில மாதங்களில் நோயாளிகளின் காயங்களுக்கு கட்டு போடும் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்டாள். எப்படி காயம் ஏற்பட்டது? ஏன் இப்படி காயத்தை ஏற்படுத்திக் கொண்டீர்கள்? என அவள் காட்டிய கரிசனம் எல்லோரையும் கவர்ந்தது.

மருத்துவ சேவை ஏனோ அவளுக்கு மனநிறைவை தந்தது. அந்த  அற்புதமான சேவையைச் செய்ய தனக்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு தினமும் தொழுகையின் மூலம் நன்றி செலுத்தினாள்.

ரு நாள், அவள் இதுவரை கண்டிராத சம்பவம் நடந்தது.

குண்டு வெடிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி இருந்த சிறு குழந்தை ஒன்றை தூக்கி வந்தார்கள். வலியாலும் மரணத்தின் பிடியாலும் போராடிக்கொண்டிருந்தது அந்த குழந்தை. உடல் முழுக்க காயங்கள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமரின் குழந்தையை பரிசோதித்த சிறிது நேரத்தில் அது இறந்துவிட்டது.

மரணத்தை நேரில் கண்ட அமேலியா சிலையென நின்றாள். இதுவரை அவள் காணாத சம்பவம்; வாழ்க்கையில் இது போன்றும் நடக்குமா என தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்.

அந்த குழந்தையை இதற்கு முன் அவள் பார்த்திருக்கிறாள். கடைவீதியில் காய்கறி வியாபாரம் நடத்தும் ஒருவருடைய குழந்தை அது. அந்த குழந்தைக்கா இந்த கதி? அவள் இதயம் படபடத்து. உடல் முழுவதும் வியர்வை வழிந்தது .

அன்று அவள் உண்ணவோ உறங்கவோ இல்லை. உலகமே சூனியக்கோட்டை என்பது போல் கற்பனை செய்து பயந்து கொண்டிருந்தாள். அந்த குழந்தையின் கடைசி கதறல் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் கண்கள் உயிர் இழந்த பின் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தது போல அவளுக்கு தோன்றியது. அவள் அழுதாள். அவளால் தாங்க முடியவில்லை. அன்று இரவு முழுவதும் அவள் அழுது கொண்டே இருந்தாள்.

அந்த சம்பவம் நடந்தது முதல் மருத்துவமனைக்கு செல்வதை அவள் குறைத்துக் கொண்டாள். சில மாதங்களில் அம்ரினும் அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டாள்.

அமேலியாவின் தனிமை அதிகரித்தது. மீண்டும் அவள் தனிமைக்கு ஆறுதலாக ஓவியம் வரைந்தாள். இறந்த பின் அந்த குழந்தை கடவுளை நோக்கிப் பறந்து செல்வது போல வரைந்து தன் மனதை தேற்றிக்கொண்டாள். அந்த குழந்தையின் ஞாபகம் மெல்ல குறைந்தது. அது குறைந்ததே தவிர அவள் மனதில் நீங்கா வடுவாக மாறியது.அவ்வப்போது அந்த காயம் வலிக்கும். அப்பொழுது அவள் கண்களில் கண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும்.

இவ்வாறே ஓடிக்கொண்டிருந்த அமேலியாவின் வாழ்வில் திடீரென திருப்பம் நிகழ்ந்தது. இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அந்த திருப்பம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக அவளுக்குள் இருந்த பயத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது. அந்த முடிவை அவளது பெற்றோர் இத்துணை சீக்கிரமாய் எடுப்பார்கள் என அவள் நினைக்கவில்லை .

ஆம். அவளுக்கு கல்யாணம் செய்ய அவளது பெற்றோர் முடிவெடுத்துவிட்டார்கள்.

தொடரும்...

Episode # 02

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.