(Reading time: 21 - 42 minutes)

ங்களம் அழைக்கிறார் என்று மது அவரின் அறைக்குள் நுழைய, அங்கே அந்த கட்டிலில் தலையணையை முதுகுக்கு கொடுத்து சாய்ந்து அமர்ந்திருந்தார் மங்களம். உள்ளே நுழைந்த மகளை கை காட்டி அருகே அழைத்தவர் , அவளை தன அருகில் அமர வைத்து அவளின் தலையை கோதி கொடுத்தார். காலை முதல் இல்லையில்லை பலநாட்களாக மனதில் கழுதையை போல தான் சுமந்த சுமைகளெல்லாம் இந்த ஒரு தீண்டலில் மெல்லிய இறகை போல மாறுவதை போல உணர்ந்தாள் மது.

"என்னடா கண்ணா , முகம் எல்லாம் டல்லா இருக்கு. சரியா தூங்காம. மது போயி முகம் கழுவி கொஞ்சம் பிரெஷாயிட்டு வாடா. அம்மாக்கு ஒன்னும் இல்லை. சரியா" -மங்களம்

"இல்லைம்மா நான் நல்லாதானே இருக்கேன். " -மது

"மது நான் உன் அம்மாடா. உனக்கு ஒரு பிரச்சனைனா எனக்கு அது தெரியாம போயிடுமா. எதை நினைச்சும் மனசை போட்டு குழப்பிக்காதடா. எல்லாம் நல்லதே நடக்கும். நமக்கு வர எல்லா பிரச்னைக்கு பின்னாடியும் ஏதோ ஒரு காரணகாரியம் இருக்கும். நீ உன் பிரச்சனைகளையெல்லாம் உன் தலையிலேயே வெச்சு சுமக்கனும்னு இல்லடா. அம்மா இருக்கேன் அப்பா இருக்கார். உன்னை சுத்தி நல்ல சொந்தங்கள் இருக்கோம். ஷார் பண்ணிக்கிட்டா எந்த பிரச்சனைக்கும் சரியான ஈஸியான தீர்வு கிடைக்கும் டா. பெரிய ஸ்கூல் எல்லாம் நடத்துற என் பொண்ணுக்கு நான் சொல்லணும்னு இல்லை " என்று புன்னகையுடன் கூறியவர் மதுவின் நெற்றியில் முத்தமிட்டு, "போ போயி பிரெஷாயிட்டு வா. நாம தோட்டத்துல கொஞ்ச நேரம் காத்தாட உக்காந்துட்டு வரலாம் " என்று சொல்ல சரியென்று தலையை ஆட்டிவிட்டு தன தாயின் கன்னத்தில் மிருதுவான ஒரு முத்தத்தை பதித்து விட்டு தன்னறைக்கு வந்தாள்.

தன் தாய்க்கு தன்னைப்பற்றி என்ன தெரிந்திருக்கும் ஒரு வேலை பொதுவாக நான் அமைதியாக இருப்பதால் அப்படி கூறியிருப்பாரோ என்று எண்ணியவள் அவர் கூறியதை போல பிரெஷாகி நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு பிடித்த இளம் ஆரஞ்சு வர்ண சுடிதாரை அணிந்து கொண்டு கீழிறங்கி வர, சரியாக மோஹனாவும் பிரிட்ஜில் இருந்து மல்லிகை பூவை எடுத்து வந்தவர், "வாடா கண்ணா இங்க " என்று அவளை திரும்பி நிற்க வைத்து ஒரு முழம் பூவை தலையில் சூட்டினார்.

"எதுக்கு சித்தி " என்றவளை முறைத்தவர் "எப்போ இருந்து பூவை வேண்டாம்னு சொல்ல கத்துக்கிட்ட " என்று ஒரு அதட்டு அதட்டி விட்டு பூஜை அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே வந்த மகளின் தோற்றத்தில் மங்களத்தின் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை மலர்ந்தது. அவர் அருகில் இருந்த சிவசண்முகத்திற்க்கோ நீண்ட நாட்களுக்கு பின் மனதில் ஒரு நம்பிக்கை விழுந்தது.

மங்களத்தை அழைத்து கொண்டு மது தோட்டத்திற்கு செல்ல மோஹனாவும் எல்லோருக்கும் மாலை டிபன் செய்து அங்கேயே கொண்டு வர அவர்கள் அமர்ந்து பேசுவதற்காக அங்கு தோட்டதின் நடுவில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு மது ரகுவின் சண்டையும் திவ்யாவின் கிண்டலும் சரணின் காமெடி என்று பேச்சு கலைக்கட்டத்துவங்க உள்ளே நுழைந்த காரை பார்த்த சரண் வருவது யாரென்று புரிய எழுந்து வாசலை நோக்கி சென்றான். அவன் செல்லும் திசையையே எல்லோரும் பார்க்க காரிலிருந்து இறங்கினர் மதியின் வீட்டினர்.

அவர்களை பார்த்ததும் மரியாதை நிமித்தம் அனைவரும் எழுந்து நிற்க சிவசண்முகமும் பாலசண்முகமும் முன்னே சென்று அவர்களை வரவேற்றனர்.

"வாங்க வாங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க.. " சிவசண்முகம்

"ரொம்ப நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க " - கந்தசாமி

"நல்லா இருக்கோம்,வாங்க உள்ள போகலாம் " -சிவசண்முகம்

"அண்ணா இல்ல இங்கயே நல்லா காத்தோட்டமா இருக்கு இங்கயே உக்கரலாமே " - அபிராமி

" வாங்கம்மா, வாங்க " என்று எல்லோரையும் தோட்டத்திற்க்கே அழைத்து செல்ல அங் மங்களத்தின் அருகே நின்றிருந்த மதுவிற்க்கோ என்ன செய்வது என்ன பேசுவது என்றே புரியவில்லை. அவள் இவர்கள் அனைவரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கவும் இல்லை.

அருகே வந்தவர்களை கண்டு அவள் கரம் வரவேற்கும் பொருட்டு தன்னாலே வணக்கம் சொல்ல, அவளருகே வந்து அவள் தலையை வருடி "நல்லாருக்கியம்மா " என்று கேட்ட அபிராமியிடம் வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது அவளுக்கு.

"அண்ணி எப்படி இருக்கீங்க " என்று மங்களத்தின் அருகே சென்று அவர் கையை பிடித்து கொண்டார் அபிராமி. அவர் அண்ணி என்று அழைத்ததே ஒருவித நிறைவை தர," நல்லா இருக்கேன் " என்று புன்னகைத்தபடி அவரின் கையை பிடித்து கொண்டார்  மங்களம்.

அவரின் அருகே அமர்ந்தவர், "என்ன அண்ணி எவ்வளவு கம்பிரமான ஆளு நீங்க, இப்படி பயமுறுத்திட்டீங்களே." என்று கேட்டார். மரியாதை நிமித்தம் மதியின் அண்ணியாரிடம் பேசிக்கொண்டிருந்த மதுவின் பார்வை மதி வந்திருக்கிறான் என்று அலசியது. அவன் வரவில்லை என்றதும் அவள் மனம் சோர்வுறுவதை அவள் உணர்ந்தே இருந்தாள். அவளின் கவனம் இப்போது தன் தாயுடன் பேசிக்கொண்டிருந்த மதியின் அம்மாவிடம் சென்றது.

"நான் வீட்டுல இவங்க ரெண்டு பேருக்கும் சொல்லுவேன் அண்ணி இந்த வயசுலயும் எப்படி கம்பிரமா இருக்காங்கனு. நம்மள கண்டா ஹார்ட் அட்டாக்கே தெறிச்சு ஓட வேண்டாமா..." –அபிராமி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.