(Reading time: 8 - 15 minutes)

19. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ய்யோ ஏன் கார்த்தி… இப்படி?... கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் தான?...”

அவள் கொஞ்சம் குரல் உயர்த்தி சொல்ல, அவனுக்கு ஆத்திரம் அதிகமானது…

“என்ன யோசிச்சிருக்கணும் நான்?... அவங்க என் சிஸ்… உன் சிஸ் இல்லை… அதை முத தெரிஞ்சிக்கோ… வலியும் வேதனையும் அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்…”

அவன் தன் மன வேதனையை அவளிடம் கோபத்தோடு வெளிப்படுத்த, அதனால் சட்டென்று ஒரு மாதிரி ஆகினாலும் மறு கணமே அவனது நிலையும் அவளுக்கு புரிந்த்து…

இருக்கும் ஒரே ஒரு வடிகாலும் தான் தான் என்ற எண்ணம் மனதில் வந்த உடனேயே அவளுக்கு அவன் மேல் கரிசனம் வந்தது…

இல்லாவிட்டாலும் கரிசனம் வராமல் இருந்திடாது தான்… எனினும் இப்போது இருக்கும் மனநிலையில் அவன் வாய்திறந்து தன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவான் என்றால் அது நிச்சயம் அவளிடமாகத்தான் இருக்கும்…

அது கோபமோ, இயலாமையோ அவளிடம் தான் அவனால் கொட்டித்தீர்க்கவும் முடியும்… கொட்டவும் செய்வான்…

அதுபோல் இப்போதும் அவன் படபடவென்று பேசிமுடித்திட, அவள் அமைதியாக இருந்தாள்…

“வர்ற ஆத்திரத்துக்கு அந்த ஆளைக்கொன்னுட்டு வந்திருக்கணும்… அப்படி செய்யாம விட்டுட்டு வந்தேன் பார்த்தீயா… அதுக்கு நீ என்னை திட்டுவ தான்… எல்லாம் என்னை சொல்லணும்…”

அவன் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பது அவளுக்கு புரிந்தது…

“எனக்கு புரியுது கார்த்தி…. ஆனாலும் இப்போ நீங்க போய் சண்டை போட்டுட்டு வந்ததால மட்டும் அவர் திருந்திடுவாரா?...”

“அந்த ஆள் திருந்திட்டாலும்… எரிச்சலை கிளப்பாத…..”

“தெரியுதுல்ல… அப்புறம் எதுக்காக போய் சண்டை போட்டுட்டு வந்தீங்க?...”

அவள் கொஞ்சம் சத்தமாக கேட்க அவன் பொறுமையிழந்தான்…

“எனக்கு நேரம் போகலை… அதான்…..”

அவன் சற்று நக்கலாகவே பதில் சொல்ல,

“அக்கா இல்லாத தனிமை அவருக்கு புரிய வைக்கும்… அக்காவோட வாழ்ந்த வாழ்க்கை அதை செய்ய முன்வந்திருக்கும் நீங்க போய் சண்டையே போடாம இருந்தாலும்… யோசிச்சுப் பார்ப்பார் அவர் அக்காகிட்ட தான் நடந்துகிட்ட விதத்தை…”

அவள் நிதானமாக எடுத்து சொல்ல,

“இத்தனை நாள் யோசிக்காதவரா இனி யோசிப்பார்?...”

“நிச்சயமா யோசிப்பார் கார்த்தி… தனிமை வாழ்க்கையில சொல்லிக்கொடுக்குற பாடம் அதிகம்… அதை நிச்சயம் அவரும் உணருவார்… இப்படி நீங்க போய் சண்டை போடுறதால அவர் திருந்திடுவார்ன்னா, இதை நீங்க என்னைக்கோ செஞ்சிருக்கலாமே… ஏன் செய்யலை இத்தனை நாள்?....”

சட்டென வந்துவிட்ட கேள்வியில் அதில் இருந்த உண்மையில் அவன் சற்று திணறித்தான் போனான்…

“அது….” என அவன் பேசாமல் நிறுத்த,

“ஏன்னா, அது அக்காக்காக…. அவங்களுக்காக மட்டும் தான் இத்தனை நாள் நீங்க பொறுத்து போனீங்க… இப்போ அவங்களே இங்க வந்துட்டாங்கன்னும்போது இனி எதுக்கு பொறுமையா இருக்கணும்னு தோணிடுச்சு உங்களுக்கு.. அப்படித்தான?...”

அவள் மேலும் பேச அவன் அமைதியாகி போனான்…

“சண்டை தான் தீர்வுன்னா உலகத்துல யாருமே நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியாது கார்த்தி… அக்கா அவரை விட்டு பிரிஞ்சிருந்தா ஊர் உலகம் என்ன சொல்லும்?... ஊர் உலகத்தை விடுங்க… அது நாம நல்லா இருந்தாலும் பேசும்… இல்லாட்டாலும் பேசும்… ஆயிரம் தான் அக்கா மேல தப்பே இல்லைன்னு நாம சொன்னாலும் அதை இந்த சமூகம் நம்புமா?... நிச்சயமா எல்லார்கிட்டயும் போய் நம்மால விளக்கம் சொல்லிட்டிருக்க முடியாது… அது நடைமுறையில சாத்தியமும் கிடையாது… என்ன தான் நாம அக்காக்கு துணையா இருந்தாலும் அவங்க மனசுலேயும் கணவன், குழந்தைங்கன்னு வாழ ஆசை இருக்காதா?... எல்லாத்துக்கும் மேல தனியா வாழுறது தான் முடிவுன்னா, பூஜாவும் பிரேமியும் என்ன ஆவாங்க?... இந்த சின்ன வயசிலேயே தாய் ஒரு பக்கம் தகப்பன் ஒரு பக்கம் இருக்குறாங்கன்னு தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடுபடும்?... அதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க…”

அவள் பேச்சில் இருந்த உண்மை அவனையும் சுடாமல் இல்லை…

“தனியா வாழ்ந்துகாட்டுறேன்னு வாழுறது இந்த சமூகத்தைப் பொறுத்தவரைக்கும் அவ்வளவு ஈசி இல்லை கார்த்தி… கல்யாண வாழ்க்கை எல்லாருக்கும் சுமூகமா இருக்குறதும் இல்ல… ஆனாலும் பிரிவை முடிஞ்ச அளவு தவிர்க்க தான் முயற்சி செய்வாங்க… நாமும் இப்போ அதைத்தான் செய்யப்போறோம்… கொஞ்சம் கால அவகாசம் கொடுத்துப் பார்க்குறதும் தப்பில்லையே… ஒருத்தர் கூடவே இருக்கும்போது அவங்க அருமை தெரியுறதில்ல… அதே அவங்க விலகி இருக்கும்போது, அவங்களுக்கான இடம் தனிமையால நிரப்பப்படும்போது எப்பேர்பட்டவங்களா இருந்தாலும் நிச்சயம் வலிக்கும்… மனசு தேடும்… அந்த வலியும் தேடலும் போதும் அவங்களை ஒரு நொடின்னாலும் தன் தவறை உணர வைக்க…”

அவள் வார்த்தைகளுக்கு அவன் கட்டுண்டான்… அவள் சொல்வது போல் தற்காலிக பிரிவு நிச்சயம் நிரந்தர பிரிவிற்கு முட்டுக்கட்டை போடும் என அவனும் உணர்ந்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.