(Reading time: 7 - 13 minutes)

14. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

ந்ததும் வராததுமாக தன்னையும் தன்னுடைய முதல் நாள் வேலை அனுபவத்தையும் விசாரிக்காமல் அப்பா எதற்காக ரூபனையும் , ஜீவனையும் தேடுகிறார் என்று அனிக்காவிற்கு புரியாவிட்டாலும் , அதைப் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் அப்பாவுடன் பேசியபடியே நகர்ந்து கேபினுக்கு அருகே அழைத்து வந்திருந்தாள். இந்த களேபரத்தில் நாரதர் வேலைப் பார்க்க முயற்சி செய்த ஷைனியை அவளுடைய கேள்விகளுக்கு தாம் பதில் அளித்து விட்டதாக எண்ணிய நேரம் முதல் தாமஸ் திரும்பி பார்க்கவில்லையென்றால், அப்பாவைப் பார்த்த குஷியில் சற்று பின்னே நின்றிருந்த ஷைனியை அனிக்காவும் கவனிக்க தவறினாள்.

“ரொம்பத்தான் பாசத்தை பொழியறாங்க, அப்பாவுக்கும் மகளுக்கும் இங்க ஒருத்தி நிக்கிறது கண்ணுக்கு தெரியலையாக்கும்” என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள் ஷைனி.

அதே நேரம் ஆஃபீஸ் செக்யூரிட்டி குறிப்பேட்டில் பெயர் பதியாமல் சடாரென்று ஒரு பெரியவரும் பெண்ணும் உள்ளே நுழைந்திருக்க ஓரிரு நாட்களுக்கு அப்படி யாராகிலும் வந்தால் அனுமதித்து விட்டு தனக்கு தகவல் தெரிவிக்க ரூபன் கூறியிருந்தவாறு செக்யூரிட்டி தகவல் தெரிவிக்கவும் ரூபனும் ,ஜீவனும் வந்திருப்பது யார் என அறிந்துக் கொள்ள ஃபாக்டரி பகுதியிலிருந்து ஆஃபீஸை நோக்கி விரைந்தனர்.

அவர்கள் கதவைத் திறந்து உள்ளே வரும் போது மகளுடன் பேசிக்கொண்டு நிற்கும் தாமஸை ரூபன் கவனித்தானென்றால், ஜீவன் கண்ணில் முதலில் பட்டது ஷைனி.

“வாங்க மாமா” 

மிக உற்சாகமாக வரவேற்றான் ரூபன். அவன் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் நபருள் ஒருவர் அவரல்லவா? திறப்பு விழா அன்று வரவில்லையே….இன்று தன் மகளைத்தான் பார்க்க வந்திருக்கிறார் என்று புரிந்தபோதும் அவனுக்கு தன்னுடைய ஃபாக்டரிக்கு அவர் வருகை தந்ததே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பின்னே வந்த ஜீவன் தான் ஷைனியை முதலில் கவனித்தான்.“இவள் இப்போது இங்கே ஏன் வந்திருக்கிறாள்? என்று உள்ளத்தில் ஒரு கசப்புணர்வு எழுந்தாலும், விருந்தோம்பலில் குறைவு வைத்தல் சரிவராதே எனவே ஒரு அரைப் புன்னகையைக் கொடுத்தவனாக,

“வாங்க ஷைனி எப்படி இருக்கீங்க?” என விசாரித்தான்.

அதுவரை அவளைக் கவனித்திராத ரூபனும் தம்பியின் குரல் கேட்டு கவனித்தவனாக அவளை வரவேற்றான். அனிக்காவும் அவளைக் கண்டாள் ஷைனி எப்போதோ பேசியிருந்த பேச்சுக்கள் தற்போது வலுவிழந்தவைகளாக இருந்தாலும், அவை ஏற்படுத்தி இருந்த நெருடல் உணர்வு இன்னும் மறையாதிருக்க வலிந்து புன்னகைத்து வரவேற்றாள் அனிக்கா.

“வாங்க ஷைனிக்கா.”

இவளுக்கு நான் அக்காவா? தான் சின்னவன்னு சொல்லிக் காண்பிக்கிறாள் போல.. மீ ஹீம் மூஞ்சப் பாரு….) என்று மனதிற்குள் பொறுமிக் கொண்டாலும் போலியாக புன்னகைத்து வைத்தாள் ஷைனி.

கேபினுக்குள்ளாக அனைவரையும் வரவழைத்த ரூபன் குளிர்பானங்களை கொண்டு வர ப்யூனுக்கு பணித்தான். சற்று நேரம் அளவளாவிய பின் தாமஸ் விடைப் பெற்றார். ஷைனியோ வீட்டிற்கு திரும்ப போகிற மாதிரியே தெரியவில்லை. பேச்சுக்கு பேச்சு “ரூபன் அத்தான்” “ அத்தான்” என்று அவள் பேசிய விதம் மற்ற இருவருக்குமே பிடிக்கவில்லை.

ரூபன் சாதாரணமாகவே அவளுடைய பேச்சுக்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் ஒரு விருந்தாளி அவ்வளவே. மறுபடி அண்ணனும் தம்பியும் ஃபேக்டரி நோக்கி திரும்ப செல்ல எழும்பவும், அதுவரை ஷைனி எப்போது போவாள் என்றுக் காத்துக் கொண்டிருந்த அனிக்கா, அப்படி ஒன்று நிகழ போகின்ற மாதிரி தோன்றாததால், 

“இருங்க சாபிட்டுட்டு போகலாம்” என்று இருவரையும் அமர்த்தினாள்.

“ஓ நீங்க இன்னும் சாப்பிடலியா? எனக்கும் பசிக்க ஆரம்பிச்சிடுச்சி” என்று முதல் பந்தியில் இடம் பிடித்தது வேறு யார் ஷைனியே தான்.

அனிக்கா அவளையும் கூட சாப்பிடச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தாள் தான். ஒருவேளை மறுப்பாளோ என எண்ணியிருக்க , அவள் கேட்ட விதத்தில் திகைத்தவாறு ஜீவனைப் பார்த்தாள். அவனும் அவளை அதே மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடர்ந்து சாப்பாட்டு வேளையில் பல்வேறு திகைப்புகள் காத்திருந்தன. எந்த பொன்னான நேரத்தில் ஸ்வீட் தர மாட்டேன் என அனிக்கா சொன்னாளோ தெரியவில்லை, டிஃபனை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, முதலில் எடுத்து வைத்த இரண்டு டிஃபன்களிலுமிருந்த ஸ்வீட்களை யாருக்குமே மிச்சம் வைக்காமல் மொக்கினாள் ஷைனி. பருப்பு பாயாசமும், குலோப் ஜாமூனும் இருந்த இடம் தெரியாமல் போயிற்று.

அதன் பின்னர்,

“அச்சச்சோ ஆளுக்கொரு டிஃபன்ல ஸ்வீட் இருக்கும்னு நினைச்சு சாப்பிட்டுடேன். உங்களுக்கு ஸ்வீட் இல்லாம போச்சா? என ஒரு அப்பாவி லுக் வேறு.”

அதைக் கூட அனிக்காவால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், ஏதோ அவளே சமைத்துக் கொண்டு வந்த மாதிரி,

“இதை கொஞ்சம் போட்டுக்குங்க அத்தான் நல்லாயிருக்கு, இந்த அவியல் ரொம்ப டேஸ்ட் இல்ல” என்று ரூபனிடம் விடாமல் நூறு அத்தான் போட்டது தான் அவளால் பொறுக்க முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.