(Reading time: 17 - 33 minutes)

க்ஸ்க்யூஸ் மீ! இப்படி இடிச்சிட்டு, சும்மா பேருக்கு ஒரு சாரி சொல்லிட்டு பின்னாடியே குரங்குன்னும் சொல்லுவீங்க…அந்த சாரியை உடனே நாங்க அக்ஸெப்ட் பண்ணிட்டு…சரின்னு போயிடனுமா?” என்றான் அந்த புதியவன்.

‘அய்யோ…இவனுக்கு தமிழ் தெரியும் போல! ஜெய்யை திட்டினத இவன சொன்னதா நினைச்சுட்டு பிரச்சனை பண்ணுறானே…. மைத்ரீ, இப்படி வசமா மாட்டிக்கிட்டயே! ஜெய், இங்க வந்து என்னை காப்பாத்துடா’ என்று இவள் மனதில் புலம்பவும்

“வசமா மாட்டிக்கிட்டேனேன்னு தோனுதா?  அதெல்லாம் போன்ல பேசிட்டு வந்து…யாரோ ஒருத்தரை இடிக்கவும் இடிச்சிட்டு…திட்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்”

“நான் உங்களை எதுவும் திட்டலை. அது…அது…நான் போன்லதான் குரங்குன்னு சொன்னேன்”

“நீங்க திட்டும்போது தான் உங்க போன் கையில் இருந்ததே…காதிலில்லை.  ஏன் தப்பும் செய்துட்டு இப்போ பொய்யும் சொல்லுறீங்க?”

என்ன செய்யலாம்னு யோசித்தவளுக்கு ஜெய் லைனிலிருப்பது நினைவு வரவும், அவனுக்கு தான் இருந்த…அந்த ஆண்கள் துணிக்கடையின் பெயரை சொல்லி வர சொன்னாள்.

“சப்போர்ட்டுக்கு ஆள் சேர்க்கிறீங்களா? யாரே வந்தாலும் நீங்க செய்தது தப்புதான்” என்றான் கராற் குரலில்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“நான் தான் உங்களை திட்டலைன்னு சொல்லிட்டிருக்கேனே.  திரும்ப திரும்ப உங்களை தான் திட்டினேன்னு சொல்லிகிட்டு” என்றாள் காட்டமாக.

பதிலேதும் சொல்லாது அவளை ஒரு மாதிரி பார்த்தான் அவன்.

‘இவனுக்கு என்னதான் பிரச்சனையோ? அய்யோ…இவங்கிட்ட வந்து மாட்டிட்டேனே! ஜெய் எரும…சீக்கிரம் வந்து இவனை என்னன்னு கேட்டு அனுப்பு’ என்று மறுபடியும் தனக்குள்ளேயே புலம்பினாள் மைத்ரீ.

“ஹாய் மைத்ரீ! என்னடி இங்க தனியா வந்திருக்க?” என்றபடி வந்த சரயூ அவளை அணைத்து கொண்டாள்.

சரயூவை பார்த்ததும் நிம்மதியடைந்தது மைத்ரீயின் மனம்.  ஒருத்தனை பஸ்ஸில், சரயூ, அறைந்திருந்தது இப்போது நினைவுக்கு வரவும் ‘நான் தனியா வந்து மாட்டினேன்னு நினைச்சேன்.  இல்லை நீ தான் தனியா வந்து மாட்டியிருக்க மடையா!’ என்று மைத்ரீக்கு தோன்றியபோது சரியாக ஜெய் இவளைக் கண்டுபிடித்து அங்கு வந்து சேர்ந்தான்.  

அணைப்பிலிருந்து மைத்ரீயை விடுவித்த சரயூ அவளின் முகத்தைப் பார்த்தாள்.  மைத்ரீயோ அவர்களையே பார்த்தபடி நின்றிருந்த அந்த புதியவனையே முறைத்து கொண்டிருந்தாள். 

“எதுக்கு இவ்வளவு கோவமாயிருக்க மைதி?”  என்றாள் சரயூ.

மைத்ரீக்கு பிரச்சனைன்னு விரைந்து வந்த ஜெய், சரயூவிடம் ஏதும் பேசாமல், “அந்த சண்டக்காரன் எங்க மைதி?” என்றான். ஜெய்யின் முகத்தில் அத்தனை கோபம்.  இதுவரை அவனின் கோபத்தைப் பார்த்திராத சரயூ…கோபத்தினால் இறுகியிருந்த ஜெய்யின் முகத்தைப் பார்த்து மிரண்டு போனாள்.

“என்னாச்சு மைதி?” என மைத்ரீயின் காதில் கிசிகிசுத்தாள்.

“இவங்கதான் சும்மாவே பிரச்சனை பண்ணிட்டிருக்காங்க” என்றபடி அந்த புதியவனைக் காட்டினாள் மைத்ரீ.

“ஓ! இந்த ரெண்டு பேரும்தான் உங்க சப்போர்ட்டுக்கு வந்தவங்களா? இன்னும் என்னென்ன திட்டனுமோ திட்டுங்க” என்று ஏளனமாக சொல்லி சிரித்தான் அந்தப் புதியவன். 

சரயூ என்ன செய்ய போகிறாளென அவளை பார்த்தாள் மைத்ரீ.  சரயூ அவனோடு சேர்ந்து சிரித்தாள்.  இப்போது ஜெய்யைப் பார்த்தாள்.  அவனும் அவர்களின் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? எனக்கு சப்போர்ட் பண்ணி அவரை என்னன்னு கேட்காமல்…சிரிச்சுகிட்டு” மைத்ரீயின் முகம் கோபத்தினால் சிவந்திருக்க.. இப்போது அவர்கள் அனைவரையும் முறைத்தாள். 

அவர்கள் மூவரின் சிரிப்பு இன்னும் அதிகரிக்கவும் மைத்ரீ ஜெய்யை மட்டும் தனியாக ஒருமுறை முறைத்துவிட்டு அங்கிருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

“நில்லு மைதி!” என்று அவள் கையை பற்றினாள் சரயூ.

கையை அவளிடமிருந்து உறுவிகொள்ள முயன்றாள் மைத்ரீ.

தன் சிரிப்பை அடக்கியவாறு “இரு இரு! இப்போ என்ன? அவனை திட்டனும்…அவ்வளவு தானே….வா மைதி” என்று அவளை ஜெய் மற்றும் அந்த புதியவன் நின்றிருந்த இடத்திற்கு அழைத்து வந்தாள்.

“என் ஃப்ரெண்டுகிட்ட எதுக்குடா அண்ணா பிரச்சனை பண்ணின?”

சரயூ அந்த புதியவனை அண்ணா என்றழைக்கவும் மைத்ரீயின் பார்வை ஒரே ஒரு நொடி ஆச்சரியத்தை காண்பித்து ஜெய்யிடம் சென்று நிலைத்தது.  அவள் பார்வையாலேயே உண்மைதானா என்று கேட்ட கேள்விக்கு பதிலாக ஜெய் தன் தலையை மேலும் கீழுமாக அசைத்தான்.

“சாரி சரயூ! உன் ஃப்ரெண்டுன்னு தெரியாது” என்றவன் ஒரு புன்னகை கீற்றோடு மைத்ரீயைப் பார்த்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.