(Reading time: 26 - 51 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 15 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தனர் விஷ்வாவும் பரத்தும். முல்லைக்கொடியிலிருந்து வந்த பூக்களின் வாசம் அவனை இதமான மனநிலையில் கொண்டு சென்று நிறுத்தியது. அந்த நறுமணத்தை அனுபவித்துக்கொண்டான் பரத்.

'இன்று ஒரு அழகான இனிமையான நாள். இன்று எல்லாம் நல்ல படியாகவே நடக்க வேண்டும். அன்று அத்தனை பதற்றத்துடன் பேசினாரே அம்மா. இன்று என்னை பார்த்ததும் என்ன செய்வார்??? அழுதுவிடுவாரோ???

வேண்டாம். இந்த நாளில் யார் கண்ணிலும் கண்ணீர் வேண்டாம்..' அவன் யோசித்த வேளையில் கேட்டது அந்த கலகல வளையல் சத்தம். அவன் சட்டென நிமிர அங்கே மாடி பால்கனியில் நின்றிருந்தாள் அவன் கண்ணம்மா!!!

அவள் குடும்பத்தில் மற்றவர்கள் எல்லாரும் இன்று வருவதாக இருக்க நேற்று மாலையே விஷ்வாவின் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தாள் அபர்ணா.

தங்க நிற டிசைனர் சேலையில் மின்னிக்கொண்டிருந்தாள் அவள். எப்போதும் பின்னப்பட்டிருக்கும் கூந்தல் இன்று அழகாய் விரிந்திருக்க அந்த கூந்தலின் நடுவில் ஊஞ்சலடிக்கொண்டிருந்த முல்லைச்சரமும், காதில் ஆடிக்கொண்டிருக்கும் நீளமான ஜிமிக்கிகளுமாக அவள்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

'இவள் கூட இங்கே இருக்கிறாளா???'

அவளை பார்த்தும் இதழ்களில் புன்னகை தொற்றிக்கொள்ள, சரேலென விரிந்து மலர்ந்த கண்களில் படர தவிக்கும் ரசனை ரேகைகளை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்று தோற்றுத்தான் போனான் பரத்.

'இவன் எப்படி இங்கே???  வியப்பு பொங்க பார்த்தவளின் இதழ்களில் புன்னகை கோடு அழகாய் ஓடியது.

''இவனை முதல்லே இங்கே இருந்து போக சொல்லுங்க...' அன்று அருண் கத்தியதும், எதுவுமே பேசாமல் இவன் அங்கிருந்து வெளியேறிய அந்த காட்சியும் அவள் நினைவுக்கு வந்து நிற்க தவறவில்லை. மெலிதாய் ஒரு முக மாற்றம் அவளிடம்.

அருண் செய்த அந்த செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கேட்டே விடவேண்டும் என்று ஒரு எண்ணம் மனதிற்குள் குடிக்கொண்டது அபர்ணாவுக்கு.

பரத்தை பற்றி அவளிடமும் அஸ்வினியிடமும் நிறைய சொன்னது உண்டு விஷ்வா. அவனுக்காக விஷ்வா செய்த போராட்டங்களும் தெரியுமே இவளுக்கு, எல்லாம் படபடவென இப்போது நினைவுக்கு வர அப்போது தலைக்குள்ளே இன்னொரு மின்னல் வெட்டியது.

ஒரு வேளை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் வீட்டுக்கு வருகிறானோ பரத்???

'ஆம் அப்படித்தான் இருக்கவேண்டும்!!!' சந்தோஷ ஊற்று அவளுக்குள்ளே. தனது உள்ளத்தில் காதலன் என்ற இடத்தை அவனுக்கு கொடுக்க முடியவில்லைதான் அவளால். ஆனால் ஒரு நல்ல மனிதனாய், ஒரு நல்ல நண்பனாய் எப்போதோ அவள் மனதில் இடம் பிடிதுவிட்டானே பரத்!!!

பரத்தும் விஷ்வாவும் வீட்டுக்குள் அடி எடுத்து வைப்பதற்குள் மாடியில் இருந்து வீட்டுக்குள் வரும் படிகளின் வழியாக தடதடவென இறங்கி அவன் முன்னால் வந்து நின்றிருந்தாள் அபர்ணா.

'ஹேய்... பார்த்துடா... எதுக்கு இப்படி ஓடி வரே..' இது பரத்தின் அனிச்சையான வார்த்தைகள்.

அந்த 'பார்த்துடா' விஷ்வாவின் இதழ்களில் புன்னகை வரத்தான் செய்தது. அதனோடு ஒரு ஆழமான மூச்சும்.

'பேசாம நீ இவனையே கல்யாணம் பண்ணிக்கோ அபர்ணா..' சொல்லிவிடத்தான் தோன்றியது விஷ்வாவுக்கு. ஆனால் சொல்லத்தான் இயலவில்லை.

'வெல்கம்!!! பரத்தை பார்த்து மூச்சு வாங்கும் குரலில் சொன்னாள் அபர்ணா . அவள் முகத்தில் சந்தோஷ சிரிப்பு. 

'நீங்க ரொம்ப நாள் கழிச்சு இந்த வீட்டுக்கு வரீங்கதானே??? நான்தான் முதல்லே வந்து உங்களை வெல்கம் பண்ணனும்னு தோணிச்சு. அதான் ஓடி வந்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க்கையிலே நிறைய கஷ்டப்பட்டு இருக்கீங்க நீங்க. உங்களுக்கு ஏதாவது ஒரு நல்லது சீக்கிரம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிட்டே இருப்பேன் எப்பவும்.!!! இனிமே இன்னும் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும் பரத்..'

அவள் கண்களை மாறி மாறி பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் பரத். இந்த உணர்வை என்னவென்று சொல்ல??? நெகிழ்ச்சியில் எதுவுமே பேச இயலவில்லை அவனால்.. இந்த அதிகாலை வேளையில் இப்படி ஒரு திடீர் ஆனந்தத்தை அவன் எதிர்ப்பார்க்கவே இல்லையே!!!

விஷ்வா புன்னகையுடன் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணனும் தம்பியும் அருகருகே நிற்க அந்த ஜோடியை பார்க்க பார்க்க திகட்டவில்லை அபர்ணாவுக்கு.

'இது உன் வேலைதானா விஷ்வா??? செ..ம செ...ம செ...ம போ..' உற்சாகம் பொங்கும்  வார்த்தைகளுடனான ஒரு கைகுலுக்கல் அவனுக்கு. பரத்தின் உயிர் வரை பரவிக்கிடந்தது ஒரு இனிமையான தித்திப்பு.

'உள்ளே வாங்க. போய் அம்மாவை பார்க்கலாம்...' அவள் சொல்ல அசையாமல் நின்றான் பரத்.  சிலையாகி போயல்லவா நின்றிருக்கிறான் அவன்.. எங்கே நடக்க???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.