(Reading time: 9 - 17 minutes)

36. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

டவுளைக் கண் முன்னே காண்பது பெரும் வரம்… அந்த வரத்தை கயிலாயபுர மக்கள் எளிதில் பெற்றிருந்தனர்…

எனில் எம்பெருமானின் அம்சமான அவர்களது மன்னன் இருக்கிறானே கடவுளாக அவர்களுக்கு…

மகாசிவருத்ரதேவ்…..

மன்னன் கயிலாதநாதனும் தன் மகன் மகாசிவருத்ரதேவனை அணுதினமும் ஈசனாகவே பாவித்து அவனை வளர்க்க, சிவாய நமக… என்ற மந்திரமே அவரது மூச்சில் நிறைந்திருந்தது எங்கும்…

தனக்குப் பின் தன் மகன் அரியணை ஏற வேண்டும் என விரும்பி அவர் அவனுக்கு கலைகள் பல கற்றுக்கொடுக்க, அவனும் அனைத்தையும் கற்று தேர்ந்தான் வல்லவனாக…

எனினும் அரியணை ஏறும் ஆசை, அவன் மனதில் துளியும் இல்லை…

இளம் வயதிலேயே, சர்ப்பங்களை பிடித்து விளையாட அவன் ஆரம்பிக்க, ஆரம்பத்தில் பயந்து தடுத்த கயிலாதநாதனும், பின்னாளில் அதனை மறந்தே விட்டார்….

நீண்ட தலைமுடியும், கழுத்தில் அவனது நண்பனான நாகராஜனும், நிறைந்திருக்க…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதியின் "பார்த்தேன்... ரசித்தேன்..." - Some thing Some thing... உனக்கும் எனக்கும்...

படிக்க தவறாதீர்கள்..

இடையிலிருந்து முழங்கால் வரை நீண்டிருந்த ஆடையும், மார்பின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆடையும், மட்டுமே அவனது வஸ்திரங்களாக இருந்தது… மேலும் அவனது இடையிலோ வாள் இல்லை… அதற்குப் பதிலாக கைகளில் ஒரு திரிசூலத்துடனே வலம் வந்தான் நகரை…

கயிலாதநாதனோ மகனை கண்டிக்கும் எண்ணம் இல்லாது, அவனது விருப்பப்படியே வளரவிட்டார்…

எப்படி கண்டிக்கத்தோன்றும் அவருக்கு?... இறைவன் அளித்த வரப்பிரசாதம் அல்லவா அவன்?... அதைவிட இறைவனே மகனாய் அவருக்கு கிடைத்திட்டானே… அப்படித்தானே அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார்… எனில் மகன் அந்த எம்பெருமான் போல் தோற்றத்தில், நடந்து கொள்வதில் என்ன விந்தை இருக்கப்போகிறது?...

எனினும் அவருக்கு ஓர் விருப்பமும் உண்டு… மகன் தனக்குப் பின் அந்த நாட்டை நல்வழியுடனும், அறத்துடனும் ஆள வேண்டும் அதுவும் மனைவி, மக்களோடு…..

அந்த ஆசை அவர் நெஞ்சில் இல்லாமல் இல்லை…. ஒரு தகப்பனாய் அவரது நெஞ்சில் விழுந்த எண்ணத்தினை யார் தவறென்று கூறிட முடியும்?... மகனாய் இறைவனேப் பிறந்தாலும், தன் வம்சம் ஆண்டாண்டு காலத்திற்கும் நீண்டு வாழ்ந்து வளம்பெற வேண்டும் என்று தானே எந்த தகப்பனும் நினைப்பார்…

அவரது எண்ணம் ஈடேறிடுமா?... அந்த எண்ணத்தின் தொடக்கம் தான் இன்று நேர்ந்திட்ட சிவ-சதியின் சந்திப்பா?...

அவனது பெயரை சுருக்கி மகாதேவ் என்றே அழைத்தனர் அனைவரும்…

அவனின் பெயர் கேட்ட திசை எங்கிலும் அவனது புகழ் பாடினர் மக்களும்……

பிரம்மாபுரம் மக்களுக்கு அவனை சந்திக்க ஆவல் இருந்த போதும், தட்சனுக்கு பயந்தே அவர்கள் அதனை தங்கள் மனதோடு புதைத்துக்கொண்டனர்…

இன்றோ கண் குளிர அவனது தரிசனம் அனைவருக்கும் கிடைத்திட, இமைக்காமல் பார்த்து பரவசமடைந்தனர் அவர்கள் அனைவரும்…

விழிதிறந்த மகாதேவனின் பார்வையில் சதி தென்பட, லேசான புன்முறுவல் அவரது இதழோரம் தவழ்ந்த நேரம்,

சதியின் இதழ்களும் விரிந்து மலர, அவளது கன்னம் தொட்டு கண்ணீரும் வழிந்து நின்றது வேகமாய்…

சதியிடத்தில் நிலைக்கவிட்ட தன் பார்வையை விலக்கிக்கொள்ள விரும்பாதவனாய் அவன் நின்றிட, அவளும் அத்தகு மனநிலையில் தான் இருந்தாள்…

சுற்றியுள்ளோர் எழுப்பிய கோஷங்களோ, திகைப்புடன் நின்றிருந்த தட்சேஷ்வரின் கோபமோ, எதுவுமே அவர்கள் இருவரின் கண்களுக்கு புலப்படவில்லை…

எந்த பெண்ணிடத்திலும் இத்தனை நேரம் தன் கண்களை நிலைக்கவிட்டிருக்காதவனுக்கு இன்று நடக்கும் நிகழ்வு புதுமையாய் தெரிந்தது…

இப்படி ஒரு தோற்றத்தில் அவள் ஒரு ஆடவனைப் பார்ப்பது இதுவே முதல் முறை… அவளது நாட்டில் அத்தனை பேரின் நெற்றியிலும் நாமம் இருக்குமே தவிர, மூன்று விரல் கோடுகள் பதிந்ததாய் எண்ணமே இல்லை அவளுக்கு…

இன்று அவள் சந்தித்திட்ட தேவமகரிஷியும், அவரது சீடர்களும் மட்டுமே அந்த மூன்று விரல் தடங்களை தங்களது நெற்றியில் சுமந்திருந்ததைக் கண்டவள், அதே பழக்கம் அவனது நெற்றியிலும் இருக்க, அவளது பார்வை விரிந்தது அதிகமாய்….

அவனை பின்பற்றியே அனைவரும் அதனை செய்திருக்கின்றனரோ என்ற எண்ணமும் அவள் மனதில் வந்துபோகாமல் இல்லை அந்நேரம்…

கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்த்து வந்து நிற்பது ஒரு மன்னனின் கடமையா?... இல்லை மனமுருக வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கடவுளின் செயலா இது?...

இனம் பிரித்து அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை எதுவென… அழைக்க சொன்னதென்னவோ உண்மைதான்… எனினும், அழைத்தது அவள்தானே… அவள் வேண்டியதற்கும் பலன் இருந்திருக்கிறதா?...

என் வார்த்தைகள் அவரின் செவிகளில் விழுந்திட்டதா?... எனக்கு தரிசனம் தருவதற்காகவே வந்தாரா?...

எண்ண அலைகளில் அவள் நீந்திக்கொண்டிருக்க,

“சம்போ மகாதேவா… ஹரஹர மகாதேவா… கயிலாய இளவரசர் வாழ்க வாழ்க…” என்ற கோஷங்கள் அவனை அவளின் விழியிலிருந்து பார்வையை பிரித்தெடுக்க வைத்தது வேகமாய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.