(Reading time: 11 - 21 minutes)

08. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

வாழ்வின் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தங்களின் மனநிலை எவ்வாறு அமையும்??விருப்பு,வெறுப்பு இரண்டிற்கும் பொதுவான வாழ்வுதனில் எதிர்ப்படும் சம்பவங்கள் குறித்து என்றேனும் ஆராய்ந்து இருக்கிறீர்களா??எல்லாம் விதி வசம் என்பர் சிலர்.எல்லாம் இறைவனின் திண்ணம் என்பர் சிலர்.மனிதனாகப்பட்டவன் என்றும் காலச்சூழலை குறித்த ஒரு ஊடகத்தின் மீது திணிக்கின்றான்.அது விதியாகவோ அல்லது வேந்தனாகவோ (இறைவன்) அமைவதில் அதிசயமில்லை.உண்மையில்,மனிதன் அறியாமல் தான் நிகழும் நிகழ்வுகள் நிகழ்கிறதா??மனித மனம் என்பது மிக நுட்பமானது.நுட்பமான பல்வேறு நிகழ்வுகளை ஆராய வல்லது.மிக நெருங்கிய ஒருவரின் மரணம் இதயத்திற்கு வலிகளை நல்கும்!எதிர்ப்பார்ப்பின்றி நிகழ்ந்த நிகழ்வு காலனின் மேல் மனிதனை பகை கொள்ள வைக்கும்.உண்மை யாதெனில்,இங்கு எதிர்பாரா நிகழ்வு என்பது ஏதுமில்லை.மரணம் ஓர் நாள் நிகழும் என்பது இயற்கையின் விதி!மனிதன் அதுக்குறித்து தெளிவாக ஆராய்ந்தவன் தான்.ஆனால்,நிகழ்ந்த துர் சம்பவத்தை ஏற்காத மனநிலை தான் இங்கு ஏமாற்றமாகவும்,எதிர்பாராத விதமாகவும் திரிகிறது.இன்னல் அன்றி,இன்பத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்!ஆனால்,என்றும் நாம் இன்பத்தில் மோகம் கொள்கிறோம்!ஆதலால்,மிக எளிதில் இன்ப வலைகளில் பின்னி பிணைகிறோம்!விளைவு,சீரிய ஞானத்தை துறக்கிறோம்!!

ஏறத்தாழ,100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிராமம் அது!!காணும் இடம் எங்கிலும் கண் இமைக்க மறக்கும் பசுமை,அக்கிராமத்திற்கு அடையாளம் அளித்தது.தரிசு நிலம் என்று துளி இடம் அங்கில்லை.குளங்களும்,நதியும்,தோட்டங்களும்,வயல்களும் சவால் விட்டு கூறும் பூமியின் ஜீவன் இயற்கை தான் என்று!!

மலைவளம் நிறைந்த மனம் கொள்ளும் மகேந்திரகிரி என்பது அந்நிலத்தின் பெயராகும்.

"ரொம்ப தேங்க்ஸ் ருத்ரா!எங்களுக்காக சிரமப்பட்டு இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்க!"-தன் நன்றியை தெரிவித்தார் காயத்ரி.

"மா!இது சாதாரண விஷயம்!இதுக்கு எதுக்காக தேங்க்ஸ்?"-என்றாள் மித்ரா.

"இருந்தாலும் எங்களுக்காக வேலை மெனக்கெட்டு வந்திருக்கீங்க!எல்லாம் எங்க டிரைவரால!"

"மா!விடுங்கம்மா!டயர் பஞ்சரானதுக்கு பாவம் என்ன பண்ணுவார்?"-ருத்ராவின் பார்வை பின்னால் அமர்ந்து வந்த ரகுராமை அடைந்தது.விளக்க இயலாத எரிச்சல் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

"சார்?"

"ஆ...என்னப்பா?"

"என்னாச்சு சார்?ஒரு மாதிரி இருக்கீங்க?"

"அது...வந்து...என் டிரைவரை நினைத்து தான்!"

"ஐயோ சார்!டயர் தானே பஞ்சராச்சு விடுங்க சார்!"

"சில விஷயம் அதுமாதிரி சாதாரணமா விட முடியாதுப்பா!விட்டா நமக்கு தான் ஆபத்து!"-அவர் பேச்சின் சூட்சுமம் அவன் மனதில் ஓர் மூலையில் பதிந்தது.மேற்கொண்டு ஏதும் பேசாமல் அந்தக் கார் தன் பயணத்தை தொடர்ந்தது.

ந்த மணிமண்டபத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் மாயா.எதிரில் தன்னை அரவணைத்து போற்றியவரின் சரீரம் தாங்கி சமாதி பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டிருந்தது.

பொன்னிற எழுத்துக்களால் மகேந்திரகுமார் என்று செதுக்கப்பட்டிருந்தது மகேந்திரனது நாமம்!!அவளது விழிகள் கம்பீரம் பொருந்திய தன் தந்தையின் முகத்திலே பதிந்திருந்தன.

ஒரு நாளும் அம்முகத்தை தரிசிக்காமல் அவள் எழுந்ததுமில்லை!உறங்கியதுமில்லை!இன்றோ வெறும் புகைப்படத்தில் மட்டும் பதிந்துவிட்டன சில நினைவுகள்!!

"மாயா!"-தன் பிரியத்திற்குரிய மித்ரனின் குரல் உணர்ந்தவள் சுயநினைவை அடைந்தாள்.

"கிளம்பலாம்!"

"நீ போ!நான் வர மாட்டேன்!"

"கடந்தக் காலத்தை நினைத்து பொழுதை கழிக்கிறதுல எந்தப் பயனுமில்லை மாயா!"

"எந்தக் காலமா இருந்தாலும் சரி,அந்தக் காலம் மகேந்திரனோட பெயர் சொல்ல மறந்தா,அந்தக் காலம் அதற்கு மேலே ஒரு நொடி கூட நகர இந்த மாயா அனுமதிக்க மாட்டா!"-அவளிடமிருந்து பெருமூச்சு உண்டானது.

"உன் பிடிவாதம் உன்னோட அகங்காரமா மாற ஆரம்பிக்குது மாயா!"

"எனக்குத் தெரியும்!ஆணவம்,அகங்காரம் எல்லாம் சொல்லி கொடுத்தோ,பணம் கொடுத்த உருவாக்க முடியாது அது ரத்ததிலே ஊறி இருக்கணும்!நான் அவரோட இரத்தம்!அவரை மாதிரியே தான் இருப்பேன்!"

"............."

"காதல் என்ற விஷம் மட்டும் அவர் வாழ்க்கையில கலக்காம இருந்திருந்தா,இந்நேரம் எவனும் என் அப்பா முன்னாடி தலை நிமிர்ந்து நின்றிருக்க முடியாது!"

"காதல் விஷமோ!அமுதமோ எனக்கு தெரியாது!ஆனா,அந்த விஷம் தான் அவருக்கு மாயான்னு ஒரு தேவதையை வரமா கொடுத்திருக்கு!"

"................"

"ஆணவம்,அகங்காரம் எல்லாம் ரத்தத்திலே ஊறி இருக்கணும் தான்!ஆனா,ஒரு மனுஷன் அவன் மனசு விரும்புற சில விஷயத்தால அத்தனை அகங்காரத்தையும் ஒட்டு மொத்தமா தியாகம் பண்றான்!"-அவளருகே மண்டியிட்டு கல்லறையை வணங்கினான் அர்ஜூன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.