(Reading time: 16 - 31 minutes)

"ம் ஆன் ஜெஸ்ஸி. கொடுத்த வேலையை நீ இந்நேரம் முடிச்சிருப்பேன்னு நினைச்சேன். எப்பவும் பொறுப்பா இருக்குற நீ இப்படி அலட்சியமா இருக்கலாமா?"

"சார், நீங்க எனக்கு கொடுத்த டைம் இன்னும் முடியலை. அது மட்டும் இல்லாம இரண்டு நாளா எனக்கு உடம்பு சரியில்லை"

"சின்ன குழந்தைங்க சொல்லுற காரணத்தை எல்லாம் என்கிட்டே சொல்லிட்டு இருக்காத ஜெஸ்ஸி. இன்னும் இரண்டு நாளுல வேலையை முடிக்கபாரு"

"சார் நீங்க கொடுத்த டைம் நிறைய இருக்கு. திடீர்னு இரண்டு நாளுல முடிக்க சொல்லுறீங்க?"

"ஸ்பான்சர் சீக்கிரம் முடிக்க சொல்லி பிரஷர் மேல பிரஷர் கொடுக்கிறாரு ஜெஸ்ஸி. ப்ளீஸ்!"

அறையை விட்டு வெளியே வந்த ஜெஸிகாவின் முகம் டென்ஷனால் கொந்தளித்தது. 'திடீர்னு முடிச்சிட்டு வர சொன்னா எப்படி?.இது என்ன சமையலா உடனே செஞ்சு முடிக்க?' என முனகிக்கொண்டே தன் இருக்கைக்கு வந்து தனது  கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு அவசர அவசரமாக கிளம்பினாள். 

எதிரில் ஜெஸிகாவின் தோழி வந்தாள். அவளிடம் "வசந்தைப் பார்த்தியா?" என்று கேட்டாள்.

"இல்லை ஜெஸ்ஸி, அவன் இன்னைக்கு லீவு"

"எதுக்கு?"

"அவன் அப்பா நாளைக்கு மருத்துவமனையில இருந்து டிஸ்சார்ஜ் ஆகுறாரு. அதனால, நேத்தே லீவு சொல்லிட்டான்"

"சரி சரி" என்று கூறி லிப்டில் ஏறி கீழ்தளத்தில் இறங்கி அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் ஜெஸிகா.

சிறிது நேரம் சாலையோரம் காத்திருந்தவள், ஒரு டாக்ஸி வரவும் அதை நிறுத்தி ஏறிக்கொண்டாள். லொகேஷனுக்காக தான் சேகரித்து வைத்திருந்த முகவரிகளில் ஒரு முகவரியை  ஓட்டுனரிடம் சொல்லி அங்கே செல்லுமாறு பணித்தாள்.

ஒவ்வொரு முகவரியும் மிகவும் தூரமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் வெல்வேறு திசைகளில் இருந்தன. சென்ற இடமெல்லாம் லொகேஷன் பிடிக்காமல், அவ்விடங்களை புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டாள் ஜெஸிகா. 

'இன்னும் இரண்டு இடங்கள் தான் பாக்கி. அங்கேயும் சென்று பார்த்துவிட்டால், இந்த ஐந்து இடங்களில் எதிலாவது அவர்கள் ஷூட்டிங் நடத்திக்கொள்ளட்டும். இரண்டு நாட்கள் மட்டும் டைம் கொடுத்தால் வேறு என்ன செய்வது' என்று எண்ணினாள் ஜெஸிகா.

நான்காவது இடமும் பிடிக்காமல் போனதால் ஜெஸிகா மிகவும் சோர்ந்துவிட்டாள்.கையில் கொண்டுவந்திருந்த பணமும்  கரைந்து, மேற்கொண்டு டாக்ஸியில் செல்லாமல் பேருந்தில் ஏறி ஐந்தாவது இடத்தை நோக்கி சென்றாள் ஜெஸிகா.

யன்ற அளவிற்கு வீட்டை தன் விருப்பம்போல் மாற்றியமைத்தான் ஜான். காலையிலிருந்தே கடுமையாக வேலை செய்தமையால் அவன் களைப்பாக இருந்தான்.

நீண்ட பெருமூச்சை விட்டபடி கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். 'ஐயோ! இவ்வளவு நேரமா ஆகிடுச்சு' என எண்ணியவன், களைப்பு நீங்க சுடுதண்ணீரில் அரை மணி நேர குளியலை போட்டான். அப்பொழுது தான் அவன் உடலும் மனமும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

புது ஆடையை உடுத்தி தான் வாங்கிய காமெராவை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு மழைச்சாரலில் நனைந்தபடி கார் ஷெட்டிற்குள் சென்றான். அவன் கண்கள் வானின் கருமேகங்களை நோக்கின.

'இன்னைக்கு சரியான மழை காத்திருக்கு' என எண்ணிக்கொண்டவன், காரில் ஏறி ஸ்டார்ட் செய்தான். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். அப்பொழுதும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.

'என்னடா இது, எனக்கு மட்டும் இப்படி வித்தியாச வித்தியாசமா நடக்குது. கொஞ்சம் நிம்மதியா இருந்துட்டா போதுமே கடவுளுக்கு பொறுக்காதே' என்று முனகிக்கொண்டே கார் என்ஜினை சரி செய்ய முயற்சி செய்தான்.

தனக்குத் தெரிந்த அரைகுறை மெக்கானிக் வேலையை வைத்து ஒரு வழியாக காரை ஸ்டார்ட் செய்தான். சாதித்துவிட்ட புன்னகையை இதழில் தவழ விட்டுக்கொண்டே சாலையில் காரை ஓட விட்டான்.

வழி நெடுகிலும் இயற்கை அன்னை பசுமைக்கோலத்தில் காட்சியளித்தாள். மெல்லிய கோடுகளாய் மழைத் துளிகளின் ஆக்கிரமிப்பு அந்த அழகை மேலும் மெருகேற்றியது.

அவற்றையெல்லாம் கலாரசிகன் போல ரசித்தபடி சென்றான் ஜான். ஆங்காங்கே சில நிமிடங்கள் காரை நிறுத்தி அக்காட்சிகளை கேமராவில் பதிவேற்றிக்கொண்டான்.

மழைச் சாரலில் நனைந்தபடி பச்சை நிலத்தையே பார்த்தபடி இருந்தான். அவன் மனம் பூரிப்பால் மகிழ்ந்தது. இதுவரை அப்படி  ஓர் உணர்வை அவன் அடைந்ததே இல்லை. பின்னர், காரில் ஏறி அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றான். 

அன்று பூங்காவில் கூட்டம் குறைவாக இருந்தது. இயற்கையை மட்டுமின்றி பூங்காவில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களின் நடவடிக்கைகளையும் புகைப்படங்கள் எடுத்தான் ஜான்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த காதலர்கள், குடைகளைப்.பிடித்தவாறு செல்லும் வயதானவர்கள், லேசான சாரலையும் பொருட்படுத்தாமல் பேசி அரட்டை அடித்தபடி விளையாடும் சிறு பிள்ளைகள், அவர்களின் விளையாட்டை வேடிக்கை பார்க்கும் பெற்றோர் என கண்ணில் பட்டதையெல்லாம் தன்னுடைய காமெராவில் பதிவு செய்தான்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.