(Reading time: 16 - 31 minutes)

அமேலியா - 21 - சிவாஜிதாசன்

Ameliya

கலும் அல்லாமல் இரவும் அல்லாமல் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ரம்மியமான நாளாக அந்நாள் அமைந்தது. சில்லென்று சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது.

வீடு மாறிய ஜான் அன்றோடு  ஏழு நாட்களை கடந்துவிட்டான். ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டான். தனிமையில், யாருமற்ற தீவைப் போல் இருந்த அந்த இடம் தொடக்கத்தில் பிடித்திருந்தாலும் தன்னுடைய சிறு சிறு தேவைகளுக்கு கூட பல கிலோமீட்டர் தாண்டிச் சென்று வாங்கி வரவேண்டிய சூழல் அவனுக்கு சோர்வை தந்தது. வேறு வீடு பார்த்துக்கொள்ளலாமா என்று கூட எண்ணினான். 

அந்த எண்ணத்தை ஒரு புத்தகம் தடுத்தது.  அவன் அந்த புத்தகத்தை வாசிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம்  வீட்டை காலி செய்து வேறிடம் போயிருக்கலாம்.

பரபரப்பான உலகில் வாழும் கதையின் நாயகன் நிம்மதியாக வாழ யாருமற்ற தனிமையான இடத்தை தேடுகிறான்.  ஆனால், அவன் செய்யும் வேலை அவன் ஆசையை அண்டவிடாதபடி செய்தது. பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டால் வேறு வேலையும் அவனுக்கு தெரியாது.

காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை சிறிதும் அமைதியில்லாமல் போராட்டமாகவே வாழ்ந்து வந்தான். ஒரு நாள், விபத்து ஏற்பட்டு அவன் கோமாவிற்கு சென்றான். அவன் நினைவு எப்பொழுது திரும்பும் என மருத்துவர்களாலும் கூற முடியவில்லை.

ஆனால், அவன் கனவுலகில் நுழைந்தது யாருக்கும் தெரியாது. அங்கே அவனுக்குப் பிடித்தது போல் தனிமையான உலகை தானே உருவாக்கினான். அந்த உலகில் சூரியன் அல்லாமல் பெரிய நிலவு ஒளி கொடுத்துக்கொண்டிருந்தது.

தனக்குப் பிடித்த சோலைகளை உருவாக்கினான். பேசும் பறவைகள், அருவிகள், கனி தரும் மரங்கள், சலசல வென ஓடும்  நீரோடை,அதனருகில் சிறிய குடிசை வீடு, அந்த வீட்டினுள் நிம்மதியோடு உறங்கிக்கொண்டிருந்தான் கதையின் நாயகன்.

கண் விழித்த அவன், கனிகளை உண்டு பறவைகளோடு பேசிக் கொண்டு தான் உருவாக்கிய உலகின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். இயற்கையை ரசிப்பதைத் தவிர வேறு ஆசை என்பதே அவனுக்கு இல்லை.

ஒரு நாள், கோமாவிலேயே அவன் இறந்துவிட்டான். அவனுடைய உடல் மண்ணில் புதைக்கப்பட்டது. எல்லோரும், 'பாவம் வாழத் தெரியாதவன் இறந்துவிட்டான்' என்று பேசிக்கொண்டனர். ஆனால்,  தான் உருவாக்கிய கனவுலகில் அவன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்ததை அவர்கள் எப்படி அறிவர்!

கதையைப் படித்து முடித்த ஜானிற்கு நெஞ்சில் பாரம் இறங்கியதைப் போல் இருந்தது. தனிமையான இடம் கிடைப்பது அவ்வளவு பெரிய விஷயமா? அப்படியென்றால் இந்த அழகான தனிமையான இடத்தை விட்டு நாம் ஏன் செல்ல வேண்டும்? நம்மால் கனவுலகை உருவாக்க முடியாவிட்டாலும் தான் இருக்கும் இடத்தை கனவுலகமாக மாற்றலாம் என்று முடிவெடுத்தான்.

ஜெஸிகாவின் நினைவுகள் அவ்வப்போது வந்து அவன் மகிழ்ச்சியைத் தடை செய்தன. ஜெஸிகாவின் நினைவலைகளை எப்படி அகற்றுவது என்று சிந்தித்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

இனி தன் வீட்டில் ஜெஸிகாவிற்கு பிடிக்காத விஷயங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தான்.

அவளுக்குப் பிடிக்காத பச்சை நிறத்தில் வீட்டிற்கு பெயிண்ட் அடித்தான். அவளுக்குப் பிடிக்காத வீட்டு அலங்காரங்கள், சுவற்றில் மாட்டும் படங்கள், திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் தொகுப்பு என ஒவ்வொன்றையும் தேடிப் பிடித்து செய்தான்.

'இனி எப்படி ஞாபகத்துக்கு வரான்னு பார்க்கிறேன்' என மனதிற்குள் சபதமேற்றான் ஜான்.

ஜெஸிகா தன் அலுவலகத்தில் கணினியில் வேலை செய்துகொண்டிருந்தாள். கடுமையான காய்ச்சலால் அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள். வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வேலைப்பளுவால், 'விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விடலாமா' என்ற எண்ணத்தையும் கைவிட்டாள்.

"ஜெஸிகா உன்னை டைரக்டர் கூப்பிடுறார்" என்று அவளது தோழி வந்து கூறினாள்.

இருமிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்த ஜெஸிகா,  "எதுக்கு வர சொன்னார்?" என்று கேட்டாள்.

"தெரியல, ஆனா ஏதோ டென்ஷன்ல இருக்கார்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் தோழி.

டைரக்டரின் அறைக் கதவைத் தட்டினாள் ஜெஸிகா.

"கம் இன்"

உள்ளே நுழைந்த ஜெஸிகா,".வர சொன்னீங்கன்னு சொன்னாங்க சார்" என்றாள் பணிவாக.

ஸ்கிரிப்ட் பேப்பரை படித்துக்கொண்டிருந்த டைரக்டர் ஜெஸிகாவை ஏறெடுத்துப் பார்த்தார்.

"கதைக்கு தேவையான லொகேஷனை நீ பார்த்துட்டியா?"

"இன்னும் இல்லை சார். சில முகவரிகளை சேகரிச்சு வச்சிருக்கேன் நாளைல இருந்து வேலையை ஆரம்பிக்கணும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.