(Reading time: 16 - 31 minutes)

ப்பொழுது ஓங்கி வளர்ந்த மரத்தின் அடியில் குடையைப் பிடித்தபடி பெண்ணொருத்தி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். அவள் எதிரே கீழ் வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன. அக்காட்சியை  உடனே தன் கேமராவில் பதிவேற்ற ஜான் விரும்பினான்.

மெதுவாக நடந்து சென்று ஓரிடத்தில் நின்ற ஜான், புகைப்படம் எடுக்க ஆயத்தமானான். அப்பொழுது, அந்த பெண் மெல்ல திரும்பினாள். ஜானின் முகம் அதிர்ச்சியால் வெளிறிப்போனது.

"ஜெஸிகா எதற்காக இங்கு வந்திருக்கிறாள்?" என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டவன் அருகில் இருந்த மரத்தின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான். ஆனால், அவன் கைவிரல் அவனையறியாமல் காமெரா பட்டனை அழுத்திவிட்டதால் ஜெஸிகாவின் புகைப்படம் பதிவாகிவிட்டது.

கருமேகங்களைக் கிழித்துக்கொண்டு மழைத்துளிகள் பூமிக்கு படையெடுத்தன. பூங்காவில் இருந்தவர்கள் ஆளுக்கொரு திசையில்  ஓடினர். ஜெஸிகாவும் ஓடினாள். ஆனால், ஜான் சிலையென நின்று அவள் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ழைத் துளிகள் ஜானின் உடலை நனைத்திருந்தாலும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரத்தடியிலேயே சில நிமிடங்கள் நின்றான் ஜான், சில நாட்களாக சற்று நிம்மதி அடைந்திருந்த மனம் மீண்டும் பழைய நினைவுகளை அசைபோடத் தொடங்கியது. கனவிலிருந்து மீண்டவனைப் போல் பழைய நினைவுகளைக் கலைத்த ஜான், அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்றான்.

வெகு சீக்கிரத்திலேயே வீட்டினை அடைந்த அவன் காமெராவை சோபாவில் வீசி எறிந்துவிட்டு ஜன்னல் அருகே சென்று தூரத்தில் தெரியும் கடலை வேடிக்கை பார்த்தான். அவன் மனம் நிம்மதி அடையவில்லை. மனதிற்கு சாந்தி தர மதுவை குடிக்க எண்ணினான். மது பாட்டில்களும் காலியாக இருந்தன. என்ன செய்வதென்று குழம்பினான். புத்தகத்தை படித்தான். படிக்க முடியவில்லை. வீட்டினுள்ளேயே அங்கும் இங்கும் நடந்தான்.

'எதற்காக அவள் பார்க்கிற்கு வந்தாள்? ஒரு வேளை நம்மைத் தேடி வந்திருப்பாளோ?' என சிந்தித்தான். தன் கூற்றை அடுத்த நொடியே நிராகரித்த ஜான், 'சொந்த விஷயமாக வந்திருப்பாள். அவளாவது நம்மை தேடி வருவதாவது' என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டு  நீண்ட பெருமூச்சை விட்டு சற்று நிம்மதி அடைந்தான்.

பின்னர், இரவு உணவாக தான் சமைத்து வைத்திருந்த வறுத்த கோழியும் கோதுமை ரொட்டியும் உண்டான். அங்கு நிலவிய சீதோஷ்ண நிலைக்கு அந்த உணவு தேவாமிர்தமாய் இருந்தது. அதன் பின் தொலைக்காட்சியில் பாடல்களை ஓடவிட்டு சிறிது நேரம் பார்த்தவன், அன்று தான் எடுத்த புகைப்படங்களை பார்க்க எண்ணினான்.

காமெராவை எடுத்து அதில் இருக்கும் புகைப்படங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றி பிரிண்ட் செய்தான். பின்னர் புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்தான். வழக்கம் போல எந்த புகைப்படமும் சரியாக வரவில்லை என்றாலும் தன்னை மிகப்பெரிய புகைப்பட கலைஞன் போல எண்ணிக்கொண்டான்.

புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வரும்போது ஜெஸிகாவின் புகைப்படத்தைக் கண்டு அவன்  கண்கள் மிரட்சியைக் கக்கின. தன்னையறியாமல் புகைப்படம் எடுத்துவிட்டதை உணர்ந்த அவன், அதை கிழித்துவிட எண்ணினான். ஏனோ அவனுக்கு மனம் வரவில்லை. காரணம், ஜெஸிகா என்பதால் அல்ல. அவன் எடுத்த புகைப்படங்களிலேயே ஜெஸிகாவின் புகைப்படம் மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் வந்திருந்தது.

திடீரென அருகில் இருக்கும் அறைக்குச் சென்ற ஜான், தன் பெட்டியைத் திறந்து இதுவரை தான் எடுத்த புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்த ஜெஸிகாவின் போட்டோக்களையும் எடுத்து பார்த்தான். ஆனால், பூங்காவில்  எடுத்த ஜெஸிகாவின் புகைப்படத்தை ஒப்பிடும்போது வேறு எந்த புகைப்படமும் நன்றாக இல்லை.

ஜெஸிகாவின் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் அவனுள் புதைந்திருந்த ஞாபகங்கள் வெளிவந்தன. உடனே, போட்டோக்களை பெட்டியில் வைத்து மூடியவன் அப்படியே படுக்கையில் பொத்தென விழுந்தான்.

படுக்கையின் அருகே இருந்த மேசையில் இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஜோக்கர் பொம்மை அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. அந்த பொம்மையையே உற்று நோக்கிய ஜான், படுக்கையில் புரண்டு அந்த பொம்மையை எடுத்தான்.

"இனி உன் பேரு ஜான்" என பொம்மையைப் பார்த்துக் கூறியவன், "நடக்காத ஒரு விஷயத்தை நினைக்கிறவன் முட்டாள்னு டாக்டர் சொன்னார். உன்னை அவமானமும் அசிங்கமும் படுத்தியவளை நினைக்கிற நீ யார்? மகா முட்டாள்" என பொம்மையிடம் பேசினான் ஜான்.

பொம்மை சிரித்தபடியே இருந்தது.

"எது சொன்னாலும் முட்டாள் இப்படி தான் சிரிச்சிகிட்டு இருப்பான். இனி ஜெஸிகாவை நினைப்பியா சொல்லு"

பொம்மை பேசவில்லை.

"உனக்கென்ன அறிவில்லையா அழகில்லையா?" என சற்று நிறுத்தி அந்த அறையைச் சுற்றி பார்வையை வீசியவன்,  "அழகு கொஞ்சம் கம்மி தான், இருக்கட்டும், ஆண்களுக்கு இந்த அழகு போதும்" என சமாதானம் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.