(Reading time: 5 - 10 minutes)

கருத்துக் கதைகள் – 17. குணம் நாடி... குற்றமும் நாடி... - சித்ரா. வெ.

Gubam naadi

ரு ஊரில் சீதா, கீதா என்ற இரு தோழிகள் வாழ்ந்து வந்தனர், இருவரும் சேர்ந்து பால் வியாபாரம் செய்தனர், அதில் வரும் பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்வர்.

இருவரும் தோழிகள் என்றாலும் நெருங்கிய தோழிகள் என்று சொல்ல முடியாது... இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனரே தவிர அவர் குணங்கள் வெவ்வேறு தான்...

சீதா மிகவும் பொறுப்பானவள்... நேர்மையானவள்... சிக்கனமானவள்..

கீதாவோ பொறுப்பற்றவள்... நேர்மையற்றவள்... ஊதாரியாய் இருப்பவள்...

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் மற்றவர் விஷயத்தில் தலையிடமாட்டார்கள்.. முதலில் சீதா, கீதாவை மாற்ற நினைத்தாள்... அது முடியவில்லை... ஏதாவது ஒரு குறை என்றால் அவளை மாற்றி விடலாம்... ஆனால் அவள் குறைகளின் மொத்த உருவமாகவே இருந்தாள்...

இருவரும் பால் கறந்து இவள் ஓரிடம் அவள் ஓரிடம் சென்று விற்று வருவார்கள்... சீதா கறந்த பாலை விற்று விட்டு வருவாள்... கீதா அதில் தண்ணீர் கலந்து விற்று... வரும் வருமானத்தை விட அதிகம் சம்பாதிப்பாள்... மொத்த வருமானத்தில் இவளின் பங்கு மற்றும் தண்ணீர் கலந்து சம்பாதித்ததில் உள்ள பணம் எல்லாவற்றையும் செலவு செய்து விடுவாள்...

சீதாவோ அவளின் பங்கு பணத்திலேயே சிக்கனமாக செலவு செய்து... சேமித்தும் வைப்பாள்..

இப்படி இருக்க சீதா சில நாள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது... அப்போது அவள் சேமித்து வைத்த பணத்தை கையோடு எடுத்துப் போகவும் பயம்.. வீட்டில் வைத்து விட்டு போகவும் பயம்..

கீதா இல்லாத நேரத்தில் யாராவது திருடி விட்டால்.. அதனால் கீதாவிடம் தன் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பினாள்.

சிறிது நாள் கழித்து வந்து தன் பணத்தை கீதாவிடம் திருப்பி கேட்டாள் சீதா... அவளோ எந்த பணம் நீ எதையும் என்னிடம் கொடுக்கவில்லையே என்று கூறினாள்... அதிர்ச்சி அடைந்த சீதா... கீதா இல்லாத சமயத்தில் கீதாவின் பெட்டியில் பார்க்கும் போது தன் பண முடிச்சு இருந்ததை கவனித்தாள்... ஆனால் அவள் அதை திருட்டுத்தனமாக எடுக்க விரும்பவில்லை...

கீதாவிடம் அது என் பணம் தானே அதை திருப்பிக் கொடு என்று கேட்டாள்... ஆனால் அது என் பணம் என்று கீதா சாதித்தாள்... சீதாவிற்கோ இதை சாதாரணமாக விட மனசில்லை... எனக்கு பண தேவை இருக்கிறது.. என்று இவளிடம் உதவி கேட்டிருந்தால் இவள் செய்திருப்பாள்... ஆனால் கீதா ஏமாற்ற நினைக்கிறாளே... அதனால் மரியாதை ராமனிடம் போய் முறையிட்டாள் சீதா..

மரியாதை ராமன் எல்லாவற்றையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குபவர்... கீதா சீதா இருவரையும் கூப்பிட்டு அவர்களின் பிரச்சனையை கேட்டார்...

ஊருக்கு போகும்போது என் பணத்தை இவளிடம் கொடுத்துவிட்டு சென்றேன்... திரும்பி வந்து கேட்டாள்... அவள் பணம் என்று கூறுகிறாள் என்று சீதா தன் நியாயத்தை கூறினாள்...

இல்லை இது என் பணம் இவள் பொய்யுரைக்கிறாள் என்று கீதா கூறினாள்...

இது என் பணம் தான்... இவள் பணத்தை இவள் செலவு செய்துவிடுவாள்... இவள் ஒரு ஊதாரி என்று கீதாவை சீதா குறை கூறினாள்..

இல்லை நானும் சேமித்து வைப்பேன் இது என் பணம் தான் என்று அடித்துக் கூறினாள் கீதா...

இருவரின் பேச்சையும் கேட்ட மரியாதை ராமன்... இருவரையும் நாளை வரும்படி கூறி அனுப்பிவைத்தார்... அதே சமயம் ஊரில் உள்ளவர்களிடம் அவர்கள் இருவரையும் பற்றி விசாரித்தார்.. சீதாவை பற்றி நல்லவிதமாகவும் கீதாவை பற்றி கெட்டவிதமாகவும் கூறினர்...

றுநாள் மரியாதை ராமனை தேடி இருவரும் வந்தனர்... அங்கே ஒரு இடத்தில் சேறு போல் உருவாக்கப்பட்டு இருந்தது... பக்கத்துல் ஒரு சொம்பு தண்ணீரும் ஒரு குச்சியும் வைக்கப்பட்டிருந்தது...

அதைப்பார்த்த சீதாவோ.. என்ன செய்துக் கொண்டிருக்கிறார் இவர் நமக்கு சரியான தீர்ப்பு வழங்குவாரா...?? என்று கவலைப்பட்டாள்...

அதைப்பார்த்த கீதாவோ.. இந்த ஆளு என்னப் பண்ணிக்கிட்டு இருக்காரு... இவர் செய்யறதப் பார்த்தா... இவர் சரியா தீர்ப்பு வழங்கப் போறதில்லை... நல்லவேளை நமக்கு இது நல்லது தான் என்று நினைத்தாள்...

அவர்களை கூப்பிட்ட மரியாதை ராமனோ...  அவர்களிடம் இந்த சேற்றுக்குள் இறங்கி இருவரும் நடக்க வேண்டும்... பிறகு அந்த ஒரு சொம்பு தண்ணீரில காலை கழுவ வேண்டும் என்றார்..

இருவரையும் ஒருவருக்கொருவர் அறியாமல் தனித்தனியாக நடக்க வைத்தார்..

 முதலில் நடந்த சீதா.. காலில் உள்ள சேற்றை இந்த ஒரு சொம்பு தண்ணீரில் கழுவ முடியாது என்பதால்... அருகில் இருந்த குச்சியில் சேற்றை வழித்துவிட்டு அந்த சொம்பு தண்ணீரில் சுத்தமாக காலை கழுவி கொண்டாள்..

பிறகு நடந்த கீதாவோ... அந்த சொம்பு தண்ணீரை ஊற்றி காலை கழுவினாள்... ஆனாலும் சேறு போகவில்லை... இதைப் பார்த்த மரியாதை ராமன் இன்னும் தண்ணீர் கொடுத்து கழுவிக் கொள்ள சொன்னார்... அவளும் அதிக தண்ணீரை உபயோகப்படுத்தி காலை சுத்தப்படுத்திக் கொண்டாள்...

பிறகு இருவரும் வரவழைக்கப்பட்டனர்... கீதாவை பார்த்து மரியாதை ராமன்... அது சீதாவின் பணம் அதை அவளிடம் கொடுத்துவிடு என்றார்... அவளோ அப்போதும் அந்த பணம் அவளுடையது என்று சாதித்தாள்...

அதற்கு மரியாதை ராமன்... ஒரு சொம்பு தண்ணீரிலேயே... சிக்கனமாக உன்னால் காலை கழுவ முடியவில்லை... நீ ஒரு ஊதாரி... ஒழுங்காக இந்த பணத்தை சீதாவிடம் கொடுத்துவிடு.. இல்லை உனக்கு தண்டனை அளிக்கப்படும் என்றார்...

கீதாவும் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்... அதை சீதாவிடம் கொடுத்த மரியாதை ராமன்... அவளது குணம் தெரிந்தே அவளுடன் இருந்திருக்கிறாயே இதில் உன் தவறும் இருக்கிறது... இனிமேல் கவனமாக இரு என்று அறிவுரை கூறினார்...

அதன்பிறகு சீதாவும் கீதாவிடமிருந்து விலகி வந்து தனியாக பால் வியாபாரம் செய்தாள்...

 

கதை சொல்லும் கருத்து:

குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்கக் கொளல்

என்று வள்ளுவர் சொன்னதுபோல்... ஒருவரின் குணத்தை ஆராய்ந்து அதில் உள்ள குறை நிறைகளை பார்த்து பழகவோ... ஒரு பொறுப்பை ஒப்படைக்கவோ செய்ய வேண்டும். குறைகள் அதிகமுள்ளவர்களிடமிருந்து நமக்கு தீமையே வந்து சேரும்.

என்னத்தான் ஒருவர் நல்லவர்களாக நடித்தாலும்... அவர்களின் சிறு நடவடிக்கைகளில் கூட அவர்களது குணம் வெளிப்பட்டுவிடும்.

Story # 16 - Nandri marappathu nandrandru

Story # 18 - Anbaana snehithanai aabathil ari

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.