(Reading time: 4 - 7 minutes)

கருத்துக் கதைகள் – 18. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி... - தங்கமணி சுவாமினாதன்

friend

பாலு-ராஜு இருவரும் இணைபிரியா நண்பர்கள்.இதில் ராஜுவின் நட்பு கொஞ்சமும் சுயனலமில்லாதது.பாலு அப்படியல்ல.கொஞ்சம் அப்படி இப்படி.ராஜுவுக்கு இது தெரியாது.அவன் பாலுவை முழுவதுமாக நம்பினான்.பாலு அடிக்கடி ராஜுவிடம் ஐம்பது,நூறு என்று கடன் வாங்குவான்.ஆனால் லேசில் திருப்பித் தரமாட்டான்.

ராஜுவின் மனைவி அடிக்கடி ராஜுவிடம் ஏன் இப்படி கேட்கும் போதெல்லாம் உங்கள் நண்பருக்குக் கடன் கொடுக்கிறீர்கள்.அவரோ திருப்பித் தருவதில்லை.நாம் என்ன வசதி படைத்தவர்களா?நாமும் சிரமம்தானே படுகிறோம்.இப்படிச் சொல்வதால் உங்கள் நண்பரை நான் குறைசொல்வதாய் நினைக்க வேண்டாம் என்பாள்.ராஜு அதை காதிலேயே வாங்கமாட்டான்.அவளும் அதற்குமேல் ஒன்றும் சொல்ல மாட்டாள்.

ஒரு முறை வழக்கம் போல் பாலு ராஜுவிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டான்.

உண்மையில் ராஜுவிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை.இல்லை என்று நண்பனிடம் சொல்ல ராஜுவுக்கு மனம் வரவில்லை.மனைவியிடம் சொன்னபோது அவள் மிகவும் கோபித்தாள்.நம்மிடம் ஆயிரம் ரூபாய் ஏது?இல்லை என்று உங்கள் நண்பரிடம் சொல்லிவிட வேண்டியதுதானே என்றாள்.

அப்படியெல்லாம் சட்டென சொல்லிவிட முடியாது என்று சொல்லிய ராஜு வீட்டில் இருந்த உடைந்துபோன பவுன் மோதிரம் ஒன்றை அடகு வைத்து ஆயிரம் ரூபாயை வாங்கி நண்பன் பாலுவிடம் கொடுத்தான்.அப்படி மோதிரத்தை அடகு வைத்து பணம் வாங்கிய போது ராஜுவோடு பாலுவும் இருந்தான்.

ராஜுவுக்கும் அவன் மனைவிக்கும் இதன் காரணமாய் சண்டையே வந்துவிட்டது.

று மாதமாகியும் பாலு ஆயிரம் ரூபாயைத் திருப்பித் தரவில்லை.அவனிடம் கேட்கச்சொல்லி ராஜுவின் மனைவி ராஜுவை வற்புறுத்தினாள்.

ராஜுவும் பலமுறை மனைவி சொல்லியும் கேட்கவில்லை.அவள் தன் தாய்வீட்டுக்குப் போய்விடுவதாக பயமுறுத்தியதும் மிகவும் பணிவாகவே தன் நண்பன் பாலுவிடம் பணம் பற்றிக் கேட்டான்.கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதும் பாலுவுக்குக் கோபம் வந்துவிட்டது.ஆனால் கோபத்தை வெளிக்காட்டவில்லை.தருவதாகச் சொல்லி மழுப்பினான்.ஆனால் அவனிடம் பணம் இருந்தது.திருப்பிக் கொடுக்க மனம்தான் இல்லை.

ஒரு நாள் பாலுவும் ராஜுவும் இரவு இரண்டாம் ஆட்டம்(காட்சி) படம் பார்த்துவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.பாலுவின் சட்டைப்பையில் ஆயிரம் ரூபாய் இருந்தது.

அப்போது ரோடில் நடமாட்டமே இல்லை.திடீரென ஒரு திருடன் அவர்கள் எதிரே வந்து கத்தியைக் காட்டி வாட்ச் பணம் அனைத்தையும் தரும்படி கேட்டான்.

உண்மையில் ராஜுவிடம் வெறும் பத்து ரூபாயே இருந்தது.ஆனால் பாலுவிடம் ஆயிரம் ரூபாய் இருந்தது. அவனின் குறுக்கு புத்தி வேலை செய்தது.சட்டென ஆயிரம் ரூபாயை சட்டைப் பையிலிருந்து எடுத்து ராஜு..இந்தா உனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாய்..பெற்றுக்கொள்.உனக்குக் கொடுக்கவேண்டிய கடனை இதோ அடைத்துவிட்டேன் என்று சொல்லி அப்பணத்தை ராஜுவின் கைகளில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டான்.திருடனும் ராஜுவின் கையிலிருந்து பணத்தைப் பிடிங்கிக்கொண்டுஓடிவிட்டான்.

அப்பாடி பிழைத்தோம்.எப்படியும் திருடன் நம்மிடமிருந்து ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றிருப்பான்.நமக்கு நஷ்டமாகியிருக்கும்...நல்லவேளை பணத்தை ராஜுவிடம் கொடுத்ததன் மூலம் நமது கடனும் தீர்ந்தது.ராஜுவின் பணம்தானே திருட்டுப்போயிற்று.நமக்கொன்றும் நஷ்டமில்லையே..நம் புத்தி சமயோசிதமாய் யோசித்தது..சபாஷ்டா பாலு என்று தன்னைதானே புகழ்ந்து கொண்டான் கெட்டபுத்திக்காரன் பாலு.

பாலுவின் மோசமான் புத்தி ராஜுவுக்குப் புரிந்துபோயிற்று.அடிக்கடி மனைவி சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தது.

சீ..நீயெல்லம் ஒரு நண்பனா?உன் புத்தி புரிந்தது.உன்னைப் போல் ஒரு கேவலமான் நண்பன் இனி எனக்குத் தேவை இல்லை.ஆயிரம் ரூபாயை இழந்ததன் மூலம் எனக்கு நல்ல பாடம் கிடைத்தது.உன் பொய்யான நட்பு எனக்குத் தேவையில்லை என்று சொல்லி வேகமாக வீடுவந்து சேர்ந்தான் ராஜு.

 

கதை சொல்லும் கருத்து:

கொடுத்தது கேட்கின் அடுத்தது பகை, மற்றும் அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி...

படித்தமைக்கு நன்றி....

Story # 17 - Kunam naadi... Kutramum naadi

Story # 19 - Saathi irandozhiya verillai

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.