(Reading time: 3 - 6 minutes)

கருத்துக் கதைகள் – 19. சாதி இரண்டொழிய வேறில்லை... - தங்கமணி சுவாமினாதன்

same blood

வர் பெயர் கோதண்டம்.கொஞ்சம் அகம்பாவம் கொண்டவர்.தான் உயர்சாதியில் பிறந்தவர் என்று மிகப் பெருமையாச் சொல்லிக் கொள்வார்.கொஞ்சம் வசதியானவர் என்பதாலும் செருக்குடனேயே இருந்தார்.ரொம்ப ஆசாரமானவர்.யாரும் தன் அருகில் நெருங்கி வருவதையோ,மேலே படுவதையோ விரும்பாதவர்.மடி கிடி என்று ஏதேதோ சொல்லுவார்.ஒரு சில சாதியைச் சேர்ந்தவர்களைக் கண்டால் அவர்களை விட்டு நகர்ந்தே நிற்பார். அவர்களை மதிக்கவேமாட்டார்.அவர்களைத் தீண்டத்தகாதவர்களாய் நினைப்பார்.வேதங்களையும் மந்திரங்களையும் படித்தவர் ஆயினும் இறைவன்  படைப்பில் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்.அவருக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் இவரைப் போல் இல்லை.இறைவன் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை.மனிதன் தான்.. சாதி மத இனம் அனைத்தையும் உருவாக்கினான் என்பான்.அடிக்கடி தந்தை மகனுக்கிடையே விவாதம் நடக்கும்.

மகன் தந்தைக்கு இறைவன்தான் புத்தி புகட்ட வேண்டும் என நினைப்பான்.

ரு நாள் கோதண்டம் கோயிலுக்குப் புறப்பட்டார்.அவர் எப்பொழுது வீட்டிலிருந்து வெளியில் சென்றாலும் தன்னோடு மந்திரிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு செல்வார்.தப்பித் தவறி யாராவது தன் அருகில் வந்துவிட்டாலோ தம் மீது பட்டுவிட்டாலோ அப்புனித நீரைத் தம் தலைமீது தெளித்துக் கொள்வார்.அவர் தீட்டு நீங்கி புனிதமாகி விடுவாராம்.அப்படித்தான் அன்று தன்னோடு ஒரு கிண்டியில் புனித நீரைக் கொண்டு சென்றார்.அப்படிச் செல்லும் போது  அவர் கருதும் ஒரு கீழ் சாதிக்காரன் கிட்டே வந்து விட சட்டென்று கொஞ்சம் பாய்ந்து நகர்ந்தார்.அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டர் வண்டி அவர்மீது மோதியது.

ரத்தம் பெருகி ஓட அவர் மயங்கிச் சாய்ந்தார்.

மெள்ளக் கண் விழித்த கோதண்டம் தான் மருத்துவ மனையில் இருப்பதை உணர்ந்தார். தனக்கு ரத்தம் அதிக அளவு வெளியேறியதால் அபாய கட்டத்தில் இருந்ததாகவும் தனது ரத்த வகை அரிதான வகை என்பதால் கிடைப்பது கடினமாக இருந்ததாகவும் நல்ல மனிதர் ஒருவர் தனது ரத்தத்தைக் கொடுத்து அவரைக் காப்பாற்றியதாகவும் மகனின் மூலம் அறிந்தார்.அம்மனிதரைக் காண தாம் விரும்புவதாகவும் அம் மனிதருக்கு நன்றி சொல்ல விழைவதாகவும் கூறினார்.

அந்த நல்ல மனிதர் வரவழைக்கப் பட்டார்.அவரைப் பார்த்ததும் கோதண்டத்திற்கு தூக்கிவாரிப் போட்டது.அவர் வேறு யாருமல்ல.எந்த மனிதனைக் கீழ் சாதிக்காரனென இழிவாய் நினைத்து நகர்ந்து ஓடினாரோ அவரேதான்.

கோதண்டத்தின் மகன் கேட்டான்..அப்பா..இன்று நீங்கள் உயிரோடு இருப்பதற்குக் காரணம் இவர் கொடுத்த இவரின் ரத்தம்தான் காரணம்.உங்களின் ரத்தத்தோடு கலந்து விட்ட இவரின் ரத்தத்தால் உங்களுக்கு என்ன தீங்கு நேரிட்டுவிட்டது?

உங்களின் வேதங்களும் மந்திரங்களும் உங்களுக்கு மறந்து போய்விட்டனவா? என்று கேட்டான்.

வெட்கிப் போனார் கோதண்டம்.மகனிடமும் அந்த மனிதரிடமும் மன்னிப்புக் கேட்டார்.திருந்திய மனிதரானார் கோதண்டம்."சாதி இரண்டொழிய வேறில்லை..

சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி" என்ற அவ்வையின் வாய்மொழி காதில் ஒலித்தது அவருக்கு.

 

கதை சொல்லும் கருத்து:

குலத்தைத் தாழ்த்தியும் உயர்த்தியும் சொல்லுதல் கூடாது... நன்றி...

Story # 18 - Anbaana snehithanai aabathil ari

Story # 20 - Aarva kolaaru aabathil mudiyum

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.