(Reading time: 4 - 7 minutes)

கருத்துக் கதைகள் – 20. ஆர்வக் கோளாறு ஆபத்தாய் முடியும்... - தங்கமணி சுவாமினாதன்

flying turtle

ந்த குளத்தில் நிறைய மீன்களும்,ஆமைகளும்,தவளைகளும்,வாத்துகளும் வாழ்ந்து வந்தன.அக்குளத்துக்கு மீன்களை உண்ண கொக்குகளும் வருவதுண்டு.

அக்குளத்தில் இருந்த ஆமை ஒன்று குளத்துக்கு வரும் கொக்குகள் இரண்டுடன் மிக சினேகமாய் இருந்தது.மூன்றும் மிக நட்புடன் இருந்தன.மூன்றும் தினமும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருக்கும்.மூவரும் பிரியாமல் இருக்கவேண்டும் என சொல்லிக்கொள்ளும்.

ஒரு சமயம் கடும் கோடைக்காலம் வந்தது.குளத்து நீர் வற்ற ஆரம்பித்தது.நீர் வற்றியதால் மீன்கள் குறைய ஆரம்பித்தன.கொக்குகளுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை.எனவே இரு கொக்குகளும் வெகு தொலைவில் இருந்த மற்றொரு குளத்திற்கு மீன் களைத் தேடிச் செல்ல விரும்பின.ஆனால் அவைகளுக்கு ஆமையை விட்டுச் செல்ல மனமில்லை.இரு கொக்குகளும் ஆமையிடம் நண்பா..இக்குளத்தில் எங்களுக்குப் போதுமான மீன் கள் கிடைக்கவில்லை எனவே தொலைவில் இருக்கும் வேறு குளத்திற்குச் செல்ல விரும்புகிறோம்.ஆனால் எங்களின் அன்பு நண்பனாகிய உன்னை எப்படி பிரிந்து செல்வது?என்று சொல்லி மிகவும் வருந்தின.ஆமைக்கு அழுகையே வந்துவிட்டது.என் அன்புத் கொக்குத் தோழர்களே என்னால் உங்களை விட்டுப் பிரிந்திருப்பது இயலாத காரியம்.அதை என்னால் சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை.நானும் உங்களோடு வந்து விடுகிறேன் என்றது.

மூன்றும் ஆலோசனை செய்தன.ஒரு முடிவுக்கு வந்தன.ஆமை நண்பா..நாங்கள் பறவைகள்.எங்களால் எவ்வளவு தொலைவையும் விரைவாய்ப் பறந்து அடைந்து விடமுடியும்.ஆனால் மிக மெதுவாகவே நகரும் உன்னால் அவ்வளவு தொலைவிலிருக்கும் குளத்தை எளிதில் அடைய முடியாது.எனவே ஒரு நீண்ட மரக் குச்சியை எடுத்து வருகிறோம்.அதன் இரு முனைகளையும் நாங்கள் ஆளுக்கொரு பக்கம் எங்கள் அலகினால் பிடித்துக்கொள்கிறோம்.குச்சியின் நடுப் பகுதியை நீ உன் வாயினால் இறுகப் பற்றிக் கொள்.நாங்கள் பறப்போம் உனையும் எங்களோடு தூக்கிக்கொண்டு என்றன.ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நீ உன் வாயை திறந்து விடக் கூடாது.அப்படி திறந்தாயானால் உன் பிடி தளர்ந்து நீ கீழே விழுவாய்.பின்னர் உனக்கு என்ன நேரிடும் என்பது உனக்கே தெரியும் என்றன.

ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.நான் எக் காரணம் கொண்டும் வாயைத் திறக்கமாட்டேன்.என் பிடியைத் தளர விடமாட்டேன் என்றது ஆமை.

சொன்னவாரே கொக்குகள் ஒரு குச்சியின் இரு முனைகளையும் தங்கள் அலகினால் பிடித்துக்கொள்ள ஆமை குச்சியின் மையத்தைத் தன் வாயினால் கவ்விக் கொண்டது.

கொக்குகள் பறக்க ஆரம்பித்தன.இக்காட்சியைக் கண்ட மக்கள் அதிசயித்தனர்.

கூட்டம் கூட்டமாய் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.சிறார்களெல்லாம் கைதட்டி சப்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.கொக்குகள் பறக்குமிடமெங்கும் ஒரே சப்தம்.

ஆமைக்கு.. கீழே இருந்து ஏன் இந்த அளவு சப்தம் வருகிறது என்று புரியவில்லை.

ஒரே யோசனையாய் இருந்தது.சப்தத்திற்கான காரணம் அறிய அதற்கு ஆவல் ஏற்பட்டது.மிகவும் ஆர்வமாய் இருந்தது அதற்கு.இருந்தாலும் மிகப் பொறுமையாய் இருந்தது வாயைத் திறக்கக் கூடாது என்று.ஒரு கட்டத்திற்கு மேல் அதனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.மனிதர்கள் எற்படுத்தும் சப்தத்திற்கு என்ன காரணம் என்று கொக்குகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணியது.ஆர்வமிகுதியால் கொக்குகளிடம் காரணம் கேட்க வாயைத் திறந்தது.

அடுத்த நொடி குச்சியைப் பிடித்திருந்த அதன் பிடி தளர்ந்து வெகு உயரத்திலிருந்து தொபீரென்று கீழே விழுந்து உடல் சிதறி இறந்து போனது.கொக்குகள் நண்பனின் இறப்பினால் மனம் வருந்தி அழுதன.

 

கதை சொல்லும் கருத்து:

ஆர்வக் கோளாறு ஆபத்தில் முடியும்...

கருத்துக் கதைகள் என்ற தலைப்பில் சில கதைகளை எழுதி வந்த நான் இப்பொழுது இப்பகுதியிலிருந்து மட்டும் தற்காலிகமாய் விடை பெறுகிறேன்.இனி மீண்டும் பின்னொரு நாளில் வருவேன்.இப்பகுதியில் வெளியான என் கதைகளைப் படித்த,படித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு என் அன்பு+நன்றிகள் பலப்பல...நன்றி..நன்றி..நன்றி..

Story # 19 - Saathi irandozhiya verillai

Story # 21 - Vaazhkkai payanam

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.